7 – நூற்றாண்டுவரம்

இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் பிறந்திட்ட உன் முன்னால் இருக்கும் மிகப்பெரும் சவால், இங்குள்ள தொழில்நுட்ப வசதி வாய்ப்புகள்தான். அதைக்கொண்டு ஒருவரால் உலகில் யாரும் செய்யாத மகத்தான சாதனைகளைச் செய்யமுடியும். அதேநேரம், எளிதில் சிக்கிச் சீரழிந்தும் போகமுடியும். ஆம், மகவே!

இப்போது இருப்பதுபோல எந்த வசதி வாய்ப்புகளும் நான் பிறந்தபோது நம் கிராமத்தில் இல்லை. அடிப்படை மின்சார வசதி கூட இல்லாத மஞ்சம்புல் வேய்ந்த கூரை வீட்டில் பிறந்திட்ட எனக்கு, சீமெண்ணெய் விளக்கும், ராந்தல் விளக்கும்தான் இரவில் வெளிச்சம் தந்தன. அதன்பின் வளர்ந்து ஐந்து வயதானபோதுதான் மின் இணைப்பு பெற்று குண்டு பல்பு போட்டார்கள்.

பிறகு பள்ளியில் படிக்கும்போதுதான் தொலைக்காட்சிப் பெட்டியைக் கண்டேன். அதுவும் மொத்த ஊருக்கே ஒன்றுதான் இருக்கும். அதில் போடும் படத்தைப் பார்க்க ஒரு ரூபாய் கட்டணம் வசூலிப்பார்கள் (சில சமயம் மல்லாட்டை உரித்துக்கொண்டு பார்க்கச் சொல்வார்கள்). அதுகூட இல்லாமல் தூரத்தில் நின்று, அல்லது அருகில் இருக்கும் மரங்களில் ஏறி உட்கார்ந்துகொண்டு சத்தத்தை மட்டும் கேட்டு மனத்துள் காட்சியாக்கி மகிழ்வேன்.

உயர்நிலை படிக்கும்போதுதான் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கினோம். பத்தாம் வகுப்பு படிக்கையில்தான் முதன்முதலாக நகர்பேசியைப் பார்த்தேன். பதினோராவது படிக்கும்போதுதான் கணினியைக் கண்டேன். அதன்பின் இளங்கலை இரண்டாமாண்டு விடுதியில் தங்கிப் படிக்கையில் நகர்பேசியும், முதுகலை படிக்கையில் வங்கிக்கடன் பெற்று மடிக்கணினியும் வாங்கினேன்.

எங்களுக்கெல்லாம் அப்போது கிராமத்தில் இருக்கும் தெருவிளக்கு வெளிச்சம்தான் (அதுவும் தெருவுக்கு ஒன்றோ, இரண்டோதான் இருக்கும்) இரவு நேர சந்தோசம். அதில்தான் வச்சவச்ச வாயக்கா, குச்சியாட்டம், கொட்டையாட்டம், நொண்டி, ஜெல்லி, கபடி, நாடுபுடியாட்டம், கண்ணாமூச்சி, தாயம், ஆடுபுலியாட்டம், அஞ்சாங்கல், பல்லாங்குழி, கப்பை போன்ற கிராமத்து விளையாட்டுகளை விளையாடுவோம். வீட்டுப் பாடங்கள் இருந்தால் உட்கார்ந்து எழுதுவோம். தேர்வு வந்தால் படிப்போம்.

ஆனால் இன்றோ, எல்லாம் மாறிவிட்டது. அனைவர் கைகளிலும் நகர்பேசி. வீட்டுக்கு வீடு தொலைக்காட்சிப் பெட்டி, கணினி, மடிக்கணினி, இணைய வசதி. விரல் நுனியில் உலகமே வந்துவிட்டது. இருந்த இடத்தில் இருந்துகொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அடுத்த வேளை உணவைக்கூட வீட்டுக்கு சுடச்சுட வரவழைத்து உண்ணலாம். நாம் சமைக்கும் உணவினை எங்கோ இருக்கும் முகம் தெரியாதவரிடம் விற்கலாம். நம் வீட்டில் உட்கார்ந்துகொண்டு அமெரிக்காவில் இருக்கும் நிறுவனத்தில் வேலைசெய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். நினைத்த கேள்வியை மறுநிமிடமே பிரதமரிடம் கேட்கலாம். அந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.

இது ஒருவகையில் வரம்தான் என்றாலும், இன்னொரு வகையில் சாபமும் கூட. ஆம், மகவே!

இன்றைக்கு உலகில் நடக்கக்கூடிய நல்லது கெட்டதுகளில் பெரும்பங்கு வகிப்பது இத்தொழில்நுட்பம்தான். எனினும் பலர், நல்லதை விட்டுவிட்டு, கெட்டதை மட்டும் தூக்கிக்கொண்டு ஒட்டுமொத்த தொழில்நுட்பமே நம்மையெல்லாம் கெடுப்பது; அழிக்கவந்தது. ஆகையால் அதிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும். குறிப்பாக சிறார்களையும், இளையர்களையும் அதன் வாசமே படாமல் காக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி பிதற்றுவார்கள். ஆனால், அது உண்மையல்ல; ஏற்கத் தக்கதல்ல.

என்னைப் பொறுத்தவரையில் தொழில்நுட்பம்தான் இந்நூற்றாண்டின் மிகப்பெரும் வரப்பிரசாதம். இதன் துணைகொண்டே கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அரிய செயல்கள் பல செய்துவருகிறேன். அதிலும் முதுகலை படிக்கையில் விகடன் மாணவப் பத்திரிகையாளராக இருந்தபோது, செய்தி சேகரிக்கச் செல்லும் இடங்களில் சில முக்கிய ஒளிப்படங்களை என்னிடம் இருந்த நகர்பேசியைக் கொண்டுதான் எடுத்தேன். அலுவலகம் போகாமல் மடிக்கணினி மூலமாக 95 சதவிகித செய்திகளை எழுதி அனுப்பினேன். அதுவும் இல்லாதபோது நகர்பேசி பயன்படுத்தியே எழுதினேன்.

முன்பெல்லாம் நூலிலிருக்கும் ஏதாவது ஒரு பக்கமோ, அல்லது தகவல்களோ வேண்டுமென்றால் பார்த்து கைப்பட எழுத வேண்டும். ஆனால், இப்போது அப்படி கிடையாது. நொடியில் நகல் எடுத்துக்கொள்ளலாம். தேவையைப் பொறுத்து ஒளிப்படம் பிடித்து வைத்துக்கொண்டு வேண்டும்போது பயன்படுத்தலாம். இல்லாத நூல்களை இணையத்தில் தேடி மின்நூல்களாக வாசிக்கலாம்.

தமிழ் லெக்ஸிகன் பேரகராதி உள்ளிட்ட எத்தனையோ அற்புதங்கள் இன்றைக்கு அப்ளிகேஷனாக வந்துவிட்டன. அவற்றையெல்லாம் மிக எளிதில் நிறுவி, வேண்டிய இடத்தில் வேண்டும்போது பயன்படுத்தலாம். இவை அத்தனைக்கும் மேலாக இணையம் கொண்டு உட்கார்ந்த இடத்திலிருந்தே இப்பெரும் உலகுடன் பலவேறு விதங்களில் தொடர்புறலாம். திறமைகளைக் காட்டி, பெரும் சாதனையெல்லாம் நிகழ்த்தலாம். ஆம், மகவே!

ஒரே ஓர் உதாரணம் மட்டும் சொல்கிறேன். கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உனது தாத்தாவின் 94 ஆவது பிறந்தநாளையொட்டி, அவரையும் உன் பாட்டியையும் நம் கிராமத்திலிருந்து சென்னைக்கு காரில் எதுவும் சொல்லாமல் அழைத்துவந்து, நேராக விமான நிலையத்துள் கூட்டிப்போய் விமானத்தில் அமர்த்தி, சென்னையிலிருந்து கோவைக்கு பறக்கவைத்து மகிழ்த்தினேன்.

அதை ஒளிப்படமாக முகநூலில் போட்டதைப் பார்த்த பலர் நெகிழ்ந்துபோய், தம் வாழ்த்தைத் தெரிவித்தார்கள். ஓரிருவர் அந்த அனுபவத்தை கட்டுரையாக எழுதும்படி கேட்க, ‘சரி எழுதித்தான் பார்ப்போமே’ என்று எழுதிய கட்டுரை, குமுதம் – சிநேகிதி இதழில் வெளியானது. அதை வாசித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களது மனைவி திருமதி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட பலர் மகிழ்ந்து வாழ்த்தினார்கள். சிலர் என்போல தம் வயதான தாய் தந்தையரை விமானத்தில் கூட்டிப்போனார்கள்.

தொடர்ந்து சிலர் கேட்டதற்கிணங்க முகநூலில் உன் தாத்தாவைப் பற்றி அடுத்தடுத்த கட்டுரைகள் எழுதினேன். நூற்றுக்கணக்கானோர் வந்து உடனுக்குடன் வாசித்தார்கள். பின் அவற்றை ஒன்றாகத் தொகுத்து நூலாக்கி எனக்குப் பிடித்த மூத்த எழுத்தாளரான நாஞ்சில் நாடனிடம் முன்னுரை பெற்று, உன் தாத்தாவின் 95 ஆவது பிறந்தநாளுக்குப் பரிசாகத் தந்தேன்.

அதனைப் பார்த்திட்ட; கேட்டிட்ட யாரென்று தெரியாத பலநூறு பேர்கள் முகநூலிலும்; நகர்பேசியிலும் வந்து வாழ்த்தினார்கள். தங்களுக்கும் அந்நூல் வேண்டும் என்று கேட்டு வாங்கி, தம் தாய் தந்தையருக்கும், பிள்ளைகளுக்கும், நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் உயர்ந்ததொரு பரிசாக வழங்கினார்கள்.

அதன்மூலம் பல புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். தமிழ் இலக்கிய உலகில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழகம் மட்டுமின்றி உலகின் பல நாடுகளுக்கும் பயணப்பட்டது. சில அங்கீகாரங்களும் வந்துசேர்ந்தன. ஆம், மகவே!

தொழில்நுட்பம் ஒன்றுதான் இதையெல்லாம் எளிதில் சாத்தியமாக்கியது. யாரென்று தெரியாத என்னையும், என் எழுத்தையும் எங்கெங்கோ இருக்கும் பலநூறு பேர்களிடம் கொண்டு சேர்த்தது. அடுத்தடுத்த நூல்களை எழுதவும், துணிவுடன் பல புது முயற்சிகள் மேற்கொள்ளவும் காரணமானது.

இன்றைக்கு எதற்கெடுத்தாலும் பேப்பர் பேனா தேடாமல்; அதை மட்டுமே நம்பி இல்லாமல் நகர்பேசி, கணினி, மடிக்கணினி எது இருக்கிறதோ அதைக்கொண்டு எழுதுகிறேன். அச்சு நூல்களை மட்டும் நாடாமல் இணையம் வழியாக ஆண்டுக்கு பல்லாயிரம் பக்கங்கள் வாசிக்கிறேன். அதேபோல ஊடகங்களைச் சார்ந்திராமல் என் எழுத்துகளை நானே நேரடியாக எனது வளைதளத்தில் பதிவிட்டு, உலகின் எம்மூலையில் இருப்போரையும் அடுத்த நொடியே வாசிக்கச் செய்கிறேன். இன்னும் இன்னும் இன்னும்.

அண்மையில் நூறு வயது கடந்து மறைந்த உன் கொள்ளுப் பாட்டி அடிக்கடி சொல்வார். ‘கத்தியப் போயி எவன்னா இம்மாந்தூண்டுதானன்னு கொறச்சி நெனப்பானா…? கத்திய வச்சி கழுத்தயும் அறுக்கலாம். காய்கறியும் வெட்டலாம். பாத்துக்க.’ கத்திக்கு மட்டுமல்ல… தொழில்நுட்பத்துக்கும் இது பொருந்தும்.

முதுகலை கணிப்பொறி அறிவியல் படித்து, தொழில்நுட்பத்தை சரியான முறையில் உபயோகித்து வரும் டெக்ப்ரியையான உன் அப்பா நான், உன்னிடம் சொல்வது இதுதான் மகவே.

இத்தொழில்நுட்பம் ஒருபோதும் உன்னை சீரழிக்காது. மேன்மேலும் உதவி, அரிய பல செயல்கள் செய்ய வைத்திடும். ஆகையால் மற்றவர்கள் போல கண்டு நீ அஞ்சவேண்டியதில்லை; விலக்க வேண்டியதில்லை. ஆர்வத்துடன் ஒவ்வொன்றையும் அது என்ன என்று ஆராய்ந்து அறிந்துகொள். புதிய கண்டுபிடிப்புகள் வரும்போதெல்லாம் முதல் ஆளாய் விரைந்து தெரிந்துகொள்.

யாவற்றுக்கும் மேலாக நீ செய்யவேண்டியதெல்லாம் இந்த ஒன்றுதான். தொழில்நுட்பத்தை உன் தேவைக்கு மட்டும் பயன்படுத்து. ஒருபோதும் அது உன்னைப் பயன்படுத்த அனுமதிக்காதே. ஆம், ஆம், ஆம்!

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=