10 – அறும்பெரும்விடயம்

உன் அம்மாவின் கருவறையில் பத்து மாதம் இருந்து இப்பூமிக்கு வந்திட்ட உன்னிடம், இந்த அப்பா நான் எவ்வளவோ சொல்ல ஆசை. இருந்தாலும் அவற்றில் மிகச் சிலவற்றையே இதுவரை சொல்லி இருக்கிறேன். இன்னும் சிலதை சொல்ல வேண்டும். ஆம், மகவே!
அதில் முதலாவதாக நான் நினைப்பது, நாளை நீ வழிபடப்போகும் தெய்வங்கள் பற்றி. இன்றைக்கு இந்தப் பூமியில் எதற்கு பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ, தெய்வங்களுக்கு இல்லை. அந்த அளவுக்கு தெய்வங்கள் பெருகிவிட்டன. அதனைச் சார்ந்த மதங்களும், தத்துவங்களும், அரசியல் கட்சிகளும், மடங்களும், அமைப்புகளும்கூட பெருகிவிட்டன.
அவற்றில் நீ எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்பதை முன்னமே சொன்னதுபோல நீதான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், தெய்வங்கள் விஷயத்தில் நான் சொல்ல விழைவது இதுதான். நாளை எந்த இடத்துக்குப் போனாலும் சரி, எத்தனை உயரத்தை எட்டினாலும் சரி, நமது குடும்ப தெய்வமான வடுவச்சி அம்மனையும், குலதெய்வமான பெரியாயி அம்மனையும் மறக்காதே.
அவர்கள் உன் முன்னோர்கள். உன்னைப் போல, என்னைப் போல இந்த மண்ணில் பிறந்து வாழ்ந்து மறைந்து தெய்வமாகி நிற்பவர்கள். எப்போதும் நம்மைப் பற்றியே நினைத்து, நம்முடன் இருந்து நம்மைக் காப்பவர்கள்; வழி நடத்துபவர்கள். நம் இன்பத்தில் இன்பம் கண்டு, துன்பத்தில் துன்பம் கொள்பவர்கள். சிறு தெய்வங்களான இவர்களை ஒருபோதும் நினைக்கவும் வழிபடவும் மறவாதே.
ஏன் என்பதற்கு ஒரே ஓர் உதாரணம் மட்டும் சொல்கிறேன், கேள். நான் பிறந்த சில தினங்களில் உடல்நலம் சரியில்லாமல் சாகப்பிழைக்கக் கிடந்திருக்கிறேன். என்ன செய்வது, ஏது செய்வது என்று தெரியாமல் தவித்த உன் பாட்டியும் தாத்தாவும், என்னை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு நம்பிக்கையோடு தூக்கிப் போய் காட்டியிருக்கிறார்கள்.
பார்த்த மருத்துவர்கள் எதுவும் செய்யமுடியாது என்று சொல்ல, உடைந்துபோன உன் தாத்தா, என்ன செய்வதென்று புரியாமல் அங்கிருந்து வீட்டுக்குத் தூக்கிவந்து, சாமி படத்தின் கீழே வெறும் மண்தரையில் படுக்கவைத்து, நம் குடும்ப தெய்வமான வடுவச்சி அம்மனிடம், ‘இனி நீதான் தாயி… உன் புள்ளய காபுந்து பண்ணனும்’ என்று மனத்தார கூறி கண்ணீர்விட்டு அழுது வேண்டி, திருநீறு பிடித்துப் போட்டிருக்கிறார். அடுத்த அரைமணி நேரத்தில் உடல்நிலை சரியாகி, சிரித்து விளையாட ஆரம்பித்திருக்கிறேன்.
கண்டு நெகிழ்ந்துபோன உன் தாத்தா, கண்கலங்கி கெயெடுத்துக் கும்பிட்டுவிட்டுப் போய், ஓர் அரசங் குச்சியை வெட்டிவந்து என்னுடன் வைத்து, ‘அம்மாம் படிச்ச டாக்டருங்களே ஒண்ணும் பண்ணமுடியாதுன்னு சொன்னவன… நம்மத் தாயி வடுவச்சி அம்மாதான் காபந்து பண்ணா. அதாலதான் அவப் பேரயும், அரசங்குச்சி வெட்டியாந்து கூட வச்சி… மரங்கள்ல அரசான அரசோட பேரையும் சேத்து, ‘வடுவரசு’ன்னு (அதுதான் பிறகு வடிவரசு ஆனது) நம்மப் புள்ளக்கி பேரு வச்சிருக்கன்’ என்றிருக்கிறார், உன் பாட்டியிடம். ஆம், மகவே!
இரண்டாவதாக நான் சொல்ல நினைப்பது, உன் தாத்தாவும் பாட்டியும் அடிக்கடி சொல்லி, தம் வாழ்வெல்லாம் அதைச் செய்து காட்டிடும், ‘நம்மைச் சுற்றி என்ன விளைகிறதோ, அதுதான் நமக்கான நல்ல ஆரோக்கியமான உணவு. அதைதான் நாம் விரும்பி உண்ண வேண்டும். அதுதான் நம்மை ஆரோக்கியத்துடன்; உத்வேகத்துடன் என்றும் வைத்திருக்கும்’ என்னும் உயரிய பாடம்.
இன்றைய நவயுகம் இதற்கு அப்படியே நேர்மாறாக, ஒட்டுமொத்த உலகத்தையே ஒன்றாக்கி அதாவது, உலகமயமாக்கி உலகின் எந்த மூலையில் விளைவதையும் யார் வேண்டுமானாலும் பணம் கொடுத்து வாங்கி உண்பது போல செய்துவிட்டது. மேலோட்டமாகப் பார்த்தால் இது நன்மை என்றுதான் தோன்றும். ஆனால், உள்ளார்ந்து நோக்கினால் முழுக்க முழுக்க இதில் வணிக அரசியல் மட்டுமே இருப்பது புரியும்.
இந்த அரசியல் மற்றதுபோல சாதாரணது அல்ல. பணத்திற்காக எதையும் செய்யக்கூடியது. ஏன், நம் மனத்தை மாற்ற வரிசை வரிசையாக பொய்களைச் சொல்லி, நம் ஊரில் விளையும் அதிக சத்து மிகுந்த உணவுப் பொருட்களான வேர்க்கடலை, கொய்யா, கொடுக்காய்ப்புளி போன்றவற்றையேகூட கெட்டது என்று ஒதுக்கவைத்து, அவற்றைக் காட்டிலும் அனைத்து வகையிலும் நம் மண்ணுக்கு சம்மந்தமே இல்லாமல் எங்கோ விளைந்து வரும் ஆப்பிளும், பேரீட்ச்சையும்தான் உயர்ந்தது; சத்து மிக்கது என நம்பச் செய்யும். ஆம், மகவே!
மூன்றாவதாக, மொழி குறித்தும், மொழியில் இருக்கும் இலக்கியச் செல்வங்கள் குறித்தும், அதைப் படைத்திட்ட படைப்பாளிகள் குறித்தும் அவசியம் சொல்ல வேண்டும்.
என்றைக்குமே ஒருவருக்கு அவரது தாய்மொழியைக் காட்டிலும் மிகச்சிறந்த மொழிச் செல்வம் இருக்கமுடியாது. இது உலகம் முழுக்க உள்ள அறிஞர் பெருமக்களால் ஒருமித்து ஏற்கப்பட்ட கருத்து. ஆகையால், உனது தாய்மொழியான தமிழை ஆழக் கற்றிடு. உடன் வேறு எந்த மொழியை வேண்டுமானாலும் துணைமொழியாய்க் கற்றுக்கொள். தவறில்லை. ஆனால், தாய்மொழி ஒன்றுதான் உன்னை நன்முறையில் செதுக்கி சான்றோனாக்கி மேன்மேலும் உயர்த்திடும். இதனை மறவாதே.
முடிந்தவரை நம் தாய்மொழியில் உள்ள அழியா இலக்கியங்களை ஒருமுறையேனும் வாசித்துவிடு. மிக முக்கியமாக திருக்குறள். அதோடு, அவற்றையெல்லாம் படைத்த படைப்பாளிகளை நன்றியுடன் நினைத்து, உன் சொந்தங்களாய் எண்ணி மகிழ்ந்திடு.
நான்காவதாக, என்னைப் போல நீயும் நன்றாக ஊர்சுற்று. பயணம்தான் உன்னை யார் என்று உனக்குக் காட்டும். உனது குறை, நிறை எதுவென்று உனக்கே உணர்த்தும். பயணத்திற்கு முதல் தேவை பணம் அல்ல, மனம் என்பதைப் புரிந்து தெளிந்திடு.
வீட்டுக்குள் இருந்துகொண்டு தொலைக்காட்சியிலும், இணையத்திலும் உலகைக் காணும் வளர்ச்சிக் காலம் இது. ஒருபோதும் அது நிஜ உலகம் அல்ல என்பதைப் புரிந்து, தோன்றும் இடங்களுக்கெல்லாம் பயணப்படு. அரிய பொக்கிஷங்கள் மிகுந்திருக்கும் மண்ணில் எல்லாம் உன் பாதம் பதி. கலைச்செல்வங்களை விழியால் நோக்கி சொற்களால் பெருக்கி வாழ்வாக்கிக் கொள். இன்னும் இன்னும் நிறைந்திடுவாய்.
ஐந்தாவதாக, மிக முக்கியமாக, நம் தாத்தன் வள்ளுவன் சொன்ன,
‘சுழன்றும்ஏர் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை’
என்னும் குறல்வழி எப்போதும் நின்றிடல் வேண்டும்.
இக்குறளில் அவர் ‘உழவே துணை’ என்று சொல்லவில்லை. ‘உழவே தலை’ என்கிறார். ஏனெனில், இந்த உலகம் பல தொழில் செய்து சுழன்றிட்டாலும் ஏர்த் தொழிலின் அதாவது, விவசாயத் தொழிலின் பின்தான் நிற்கின்றது. ஆகையால், எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே இவ்வுலகில் சிறந்தது. நாள்தோறும் நீ ஒவ்வொரு பருக்கை சோறு உண்ணும்போதும், அதை உருவாக்கிய விவசாயிகளை நன்றியுடன் நினைத்துப் பார்!
ஆறாவதாக, இறுதியாக, நம் முன்னோர்கள் சொல்லிய ஆய கலைகள் அறுபத்து நான்கில் உன்விருப்பக் கலை ஒன்றையேனும் கற்றுத் தேர். கலையில்லா வாழ்வு கலரில்லா வாழ்வாகும் மகவே. ஆதலால் கலையில் உன்னைக் கரைத்து அக்கலை வழியாக அந்தக் கபிலனைப் போல, வள்ளுவனைப் போல, தியாகராஜ சுவாமிகளைப் போல, பதஞ்சலி முனியைப் போல, இன்னும் எத்தனையோ அழியாப் புகழ்பெற்ற கலைஞர்களைப் போல நீயும் வாழ்ந்திடு. மறைந்த பின்னும் நீங்காப் புகழ் எய்திடுவாய்!
பக்தித் தமிழ் இலக்கியங்களில் அன்னை அபிராமியைத் தன் வாழ்வெல்லாம் நினைத்து நினைத்து உருகி, வணங்கிப் போற்றிப் பாடிய அபிராமி பட்டரின் அற்புதமான பாடல் ஒன்று உண்டு.
கலையாத கல்வி, நீண்ட ஆயுள், கபடு இல்லாத நட்பு, நிறைந்த செல்வம், எப்போதும் இளமை, பிணி இல்லாத ஆரோக்கியமான உடல், சலிப்பு வராத மனம், அன்பு நீங்காத மனைவி, புத்திர பாக்கியம், குறையாத புகழ், சொன்ன சொல் தவறாமல் இருப்பதற்கான குணம், எத்தடையும் ஏற்படாத கொடை, தொலையாத நிதியம், செங்கோல் வளையாமல் பரிபாலிக்கும் அரசன், துன்பமில்லாத வாழ்வு, [உன் பாதத்தின்மேல்] பக்தி என்னும் பதினாறு வளங்களையும் அழகுற பட்டியலிடுவது.
‘கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே’
இப்பதினாறு வளங்களையும் (செல்வங்களையும்) உன் வாழ்வில் நீங்கமற பெற்று, என்றென்றும் நல்வாழ்வு வாழ்ந்திட மனத்தார இந்த அப்பா நான், எப்போதும் வணங்கிடும் இப்பேரியற்கை அன்னையை வணங்கி வாழ்த்துகிறேன்.
நீடூழி வாழ்க, வாழ்க, மகவே!
*