9 – தனிவழிப்பயணம்

இம்மாபெரும் பிரபஞ்சவெளியின் சிறுதுளியான பூமியில் பிறந்திட்ட மீச்சிறு உயிர்களான மனிதர்களின் முகங்கள் ஒன்றுபோல இன்னொன்று இருப்பதில்லை. அதுபோன்றுதான் அவர்களது வாழ்க்கையும். ஆனால், இந்த உண்மை புரியாமல் மனிதர்களில் மிகுதியானவர்கள் அடுத்தவர்களைப் பார்த்து அவர்கள் என்ன செய்கிறார்களோ அதேபோன்று செய்து, என்ன உண்கிறார்களோ அதையே தாமும் உண்டு, இதைச் செய்தால் என்ன நினைப்பார்களோ அதைச் செய்தால் என்ன நினைப்பார்களோ என அடுத்தோரைப் பற்றி நினைத்து நினைத்து கடைசி வரைக்கும் தமக்கான கிடைத்தற்கரிய தனித்துவ வாழ்வை வாழாமலே மடிந்து போகிறார்கள்.
இப்படித்தான் மனித வாழ்வின் பொதுச் சித்திரம் காலந்தோறும் இருந்து வருகின்றது. இதில் எங்கோ ஆயிரத்தில், லட்சத்தில் ஒருவர்தான் தனக்கான வாழ்வைத் தெரிந்து, தெளிந்து தனித்து வாழ்கிறார்கள். உண்மையில் பார்த்தால் இவர்கள்தான் ‘வாழ்கிறார்கள்’ என்ற சொல்லுக்குத் தகுதியானவர்கள். மற்றவர்கள் எல்லாம் வாழ்வது போல நடிக்கிறார்கள். அல்லது வாழ்வதாக நினைத்து வாழாமலேயே வீழ்கிறார்கள். ஆம், மகவே!
கேட்கும் உனக்கு இது பெரும் வேடிக்கையாக இருக்கலாம். ஏன், நம்ப முடியாததாகக்கூட இருக்கலாம். ஆனால், உண்மை இதுதான்.
அப்போது நான், நம் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். பள்ளித் தலைமை ஆசிரியர் அப்துல்சத்தார், அனைவரிடமும் மிகுந்த அன்போடு நடந்துகொள்வார். அதிலும் என்னிடம் கூடுதலாகவே.
ஒருநாள், வரப்போகும் ஐம்பதாவது சுதந்திர தின விழாவை ஒருங்கிணைத்து நடத்தப்போகும் மாணவரைத் தேர்ந்தெடுக்க, அவர் தலைமையில் பள்ளி முன்னால் இருந்த சிறு ஆலமரத்தடியில் கூடியிருந்தார்கள்.
முதலில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களை வரவழைத்து, ‘எப்படி நடக்க வேண்டும், பேச வேண்டும்?’ என்று ஓர் ஆசிரியர் மூலமாக சொல்லித் தந்து, வரிசையாக ஒவ்வொருவராகக் கூப்பிட்டு செய்யச் சொன்னார்கள்.
ஆர்வத்துடன் போனவர்கள் ஆசிரியர் சொன்ன மாதிரியே செய்ய நினைத்து செய்தார்கள். கடைசியாக நான் மட்டுமே இருந்தேன். கூப்பிட்டு, ”நீ வந்து செய்’’ என்றதும் போகாமல் தயங்கி நின்றேன்.
நான் வராமல் தயங்குவதைப் பார்த்த தலைமையாசிரியர், ”இங்க வா, கண்ணா’’ எனக் கைகாட்டி அருகில் கூப்பிட்டு, ”ஏன், நீ கலந்துக்கலயா…? உனக்கு ஐம்பதாவது சுதந்திர தின நிகழ்ச்சிய நடத்தணும்னு ஆசை இல்லையா…?” என்று கேட்டார்.
வேகமாகத் தலையாட்டி, ”இருக்கு சார்” என்றேன்.
”அப்ப ஏன், கலந்துக்காம ஒதுங்கி நிக்கிற…?’’
எதுவும் சொல்லாமல் அருகில் இருந்த மற்றோர் ஆசிரியரைப் பார்த்துவிட்டு மெளனமாக நின்றேன். அதைக் கண்டு மெல்ல முறுவலித்தவர், ”எதுனாலும் மறைக்காம என்கிட்ட சொல்லு, கண்ணா’’ என்றார்.
உடனே தைரியம் வந்தவனாய் சொன்னேன். ”எல்லாரும் சாரு சொன்னமாரியே செய்றாங்க சார். நான் நான்மாரி செஞ்சாதான் புடிக்கும். அத சாரு ஒத்துப்பாரா தெரில. அதாலதான் சார் நான் கலந்துக்கல.’’
நான் சொன்னதைக் கேட்டு பெரிதாய் மகிழ்ந்து எழுந்தவர், ”வா, கண்ணா… நீ நீமாரியே செய்து காட்டு. சாரு எதுவும் சொல்லாம நான் பாத்துக்குறன்’’ கைப்பிடித்து முன்னால் கூட்டிப்போய் நிறுத்தினார்.
ஆயிரம் மலர் பூத்தது போல புன்னகைத்து ‘சரி’ என்று தலையாட்டி, அத்தனை உற்சாகத்துடன் செய்து காட்டினேன்.
நான் செய்வதைப் பார்த்து மாணவர்களில் சிலர் சிரித்தார்கள். ஏன், அதைச் சொல்லித் தந்த ஆசிரியரேகூட முகம் சுழித்தார். எதையும் பொருட்படுத்தாமல் நான் பாட்டுக்கு தொடர்ந்து செய்தேன்.
தலைமை ஆசிரியர் மட்டும் செய்து முடித்ததும் கை தட்டிக்கொண்டு வேகமாக என் பக்கத்தில் வந்து, ”சூப்பர், வெரிகுட்’’ என்று கை கொடுத்துவிட்டு, அந்த ஆசிரியரிடம் சொன்னார். ”வடிவரச செலக்ட் பண்ணிருங்க சார்.’’
அவருக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ மாதிரி பார்த்தவரிடம், ஏன் என்னைத் தேர்வு செய்யச் சொன்னேன் என்பதற்கான காரணத்தை விளக்கினார். ”இவ்வளவு நேரம் செய்துகாட்டின மாணவர்கள் எல்லோரும்… நீங்க செய்தத அப்படியே காப்பி அடிச்சு ரொம்பப் போலியா செய்தாங்க. இவன் மட்டும்தான் அதை உள்வாங்கி தனக்குப் பிடித்த மாதிரி… தன்னோட ஸ்டைல்ல செய்து காட்டினான். அவங்க எல்லோரும் காப்பி. இவன் மட்டும்தான் ஒரிஜினல். அதால, இவன்தான் சுதந்திர தின நிகழ்ச்சிய நடத்தப்போறான்.’’
அவர் சொன்னதைக் கேட்ட ஆசிரியரும், மாணவர்களும் வியந்தார்கள். அவர்கள் மட்டுமல்ல. அடுத்தவாரம் பள்ளியில் மிக விமரிசையாக நடந்த சுதந்திர தின விழாவை நான் நடத்தினதைப் பார்த்து ஊர்த்தலைவர் உள்ளிட்ட பலரும் வியந்துபோனார்கள்.
அதில் ஒருவர், ஓரமாக ஆல மரத்தடியில் நின்றிருந்த உன் தாத்தாவிடம் சொல்லியிருக்கிறார். ‘யாரு இந்த போடுமுட்ட…? இம்மாம் தெகிரியமா இந்த வயசுல… இம்மாம்பேத்து முன்னாடி… எப்டிப் பேசறான்; எப்டி நடக்கறான், பாருங்க.’
கேட்டு மகிழ்ந்திட்ட உன் தாத்தா, நான் விழா முடிந்து தலைமையாசிரியர் தந்த சிறப்புப் பரிசோடு வீட்டுக்கு வந்ததும் அத்தனை மகிழ்வோடும், பெருமையோடும் சொன்னார்.
அது தொடங்கி இன்னும் இன்னும் உற்சாகத்துடன் நான் எனக்கான வாழ்வை எங்கும் எதிலும் வாழத் தொடங்கினேன். எல்லோரும் சொல்கிறார்கள் அதனால் நானும் சொல்கிறேன், எல்லோரும் செய்கிறார்கள் அதனால் நானும் செய்கிறேன், எல்லோரும் உண்கிறார்கள் அதனால் நானும் உண்கிறேன் என்று இல்லாமல், எது ஒன்றையும் அது சரியோ தவரோ, ஒருதடவைக்கு இரண்டு மூன்று தடவை நன்றாக யோசித்து, என் மனத்துக்கு பட்டதை அதைப் பற்றி யார் என்ன நினைத்தாலும் சொன்னாலும் சரி, கவலைப்படாமல், ‘இது என் வாழ்க்கை. இதை நான் எனக்கே எனக்காக, எனக்குப் பிடித்தது போல வாழ்வேன்’ என்னும் உறுதியுடன் இப்போது வரை நான் நானாக வாழ்ந்து வருகிறேன்.
இவ்வாழ்வில் நான் செய்திட்ட; செய்திடும் எல்லாம் என் விருப்பப்படிதான் செய்திருக்கிறேன்; செய்கிறேன். நான் படித்த படிப்பு, செய்த வேலை, இப்போது செய்யும் வேலை, திருமணம் அனைத்தும். என் முதல் படைப்பு தொடங்கி ஒவ்வொரு படைப்பையும் இதோ, உனக்காக எழுதியிருக்கும் இந்நூல் உட்பட, தனித்துவமாகவே படைத்திருக்கிறேன். ஆம், மகவே!
இதை ஏன் உன்னிடம் சொல்கிறேன் என்றால், நீயும் உனக்குக் கிடைத்திட்ட இந்த அரிய பெரும் வாழ்வை, இம்மூடர் கூட்டத்தைப் போல வாழ்வதாய் நினைத்து தொலைத்திடாமல், நன்முறையில் உனக்கான பாதையில் உனக்குப் பிடித்ததுபோல ஒவ்வொருநாளும் ஒவ்வொன்றையும் செய்து வாழ்ந்திட வேண்டும் என்பதற்காகத்தான்.
இதை இவ்வுலகம் அவ்வளவு எளிதில் ஏற்காதுதான். அதனால் உன்னை அவர்களிலிருந்து வேறுபடுத்தி, தள்ளி வைத்து, ஏளனப்படுத்திப் பார்க்கும்தான். அதையெல்லாம் பொருட்டாக மதித்து சோர்ந்துபோகாதே. கிடைத்திட்ட அங்கீகாரமாய் எண்ணி இன்னும் இன்னும் மகிழ்ச்சியாய் உனக்கான தனித்தவழியில் பயணித்திடு.
அப்போதுதான் நீ உன் வாழ்வை, உனக்குப் பிடித்தபடி வாழ்ந்திட முடியும். இல்லையென்றால், வெள்ளம் போல எங்கும் பெருக்கெடுத்து தேங்கி நிற்கும் இந்தப் போலிக்கூட்டத்தில் கலந்து கரைந்து, இருக்கும் இடம் தெரியாமல், உனக்கான வாழ்வை இறுதிவரை வாழாமல் வீழ்ந்துபோவாய்.
ஆகையால் எனது அருமை செல்லமே! நாங்கள் பெற்றிட்ட நித்திலமே! இம்மண்ணையும் அவ்விண்ணையும் அளக்க வந்திட்ட சொற்சித்திரமே! இவ்வுலக வியப்பையெல்லாம் சிறுமை செய்யப்போகும் கண்ணே! கருத்தே! கனியே! கவியே!
இது உனது வாழ்க்கை. அதை உனக்குப் பிடித்த வழியில் பயணித்து, பிடித்தது போல என்றும் வாழ்ந்திடு. அந்த வானமும் இந்த பூமியும் உன் வசமாகட்டும்!
*