அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 4 : எத்திசையும்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 3 : நல்விதை
அன்புள்ள ஐயாவுக்கு,
‘புஸ்தகம்னா என்னான்னுலாம் எனக்குத் தெரியாது. ஆனா, எதோ பெரிய விசயம்னு மட்டும் தெரிது’
தங்களின் 95-வது பிறந்த நாளுக்குப் பரிசாக நான் உங்களைப் பற்றி எழுதிய புத்தகத்தைப் பார்த்துவிட்டு தாங்கள் சொன்ன வார்த்தைகள் இவை.
அதுவும் கடந்தாண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி, அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து குளித்துக் கிளம்பி, அறையிலிருந்து மெல்லிருளில் ஆங்காங்கே ஒளிரும் தெருவிளக்கு வெளிச்சத்தில் நடந்து, பாரதி நகர் பேருந்து நிறுத்தம் சென்று கோயம்பேடு செல்லும் பேருந்தேறி, பிறகு அங்கிருந்து ஆவலோடும் ஆசையோடும் திருவண்ணாமலைக்கு வரும் பேருந்தில் ஏறி ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்து, வெளியே தெரியும் மரம் செடி கொடி மலை ஆறு ஏரி என யாவற்றையும் பார்த்தபடி, தங்களையும் தங்களுடனான நினைவுகளையும் மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்துக்கொண்டு வந்தேன்.
சரியாக பத்து மணி இருக்கும், திருவண்ணாமலை வந்திறங்கியபோது. அங்கிருந்து தானிப்பாடி செல்லும் பேருந்திலேறி கொளமஞ்சனூரில் இறங்கி, அண்ணனுடன் இரு சக்கர வாகனத்தில் நேராக நம் வீட்டுக்கு வந்து ஒருவாய் தண்ணீர் கூட குடிக்காமல் ஓடோடி நிலத்தில் மாமரத்தடிக் கட்டிலில் உட்கார்ந்திருந்த தங்கள் முன்னால் வந்துநின்றேன்.
புன்னகையோடு வரவேற்றவர்,
”வாய்யா, எப்டி இர்க்க? வந்து ஒக்காரு’’ என்றழைத்து, பக்கத்தில் உட்காரச் சொன்னீர்கள்.
உட்கார்ந்ததும் முதல் வேலையாக கையில் செய்தித் தாள்களுக்கு நடுவில் மறைத்து வைத்திருந்த புத்தகத்தை தங்கள் கையில் தந்து பிரித்துப் பார்க்கச் சொன்னேன்.
என்ன, ஏதெனத் தெரியாமல் வாங்கிப் பிரித்த நீங்கள், உள்ளே ஒரு புத்தகம் இருக்கப் பார்த்து வியந்தீர்கள்.
புத்தகத்தின் முன்னட்டை, பின்னட்டை என திருப்பித் திருப்பிப் பார்த்தீர்கள். சட்டென முன்னட்டையில் இருந்த முகப்போவியத்தைக் காட்டி,
”யாரோ… என்ன மாரியே இருக்காங்கல்ல..?” என்றீர்கள் வெள்ளந்தியாக.
அதைக் கேட்டு ரசித்தபடி மென்மையாகப் புன்னகைத்துவிட்டு,
”ஒங்களப் பாத்து வரஞ்சா ஒங்களமாரிதான் இருப்பாங்க..’’ என்றேன்.
மீண்டும் அவ்வோவியத்தை உற்றுப் பார்த்துவிட்டு,
”ஆமா… நான்தான்..” என்று மகிழ்ந்த காட்சி, பல்லாண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லாமல் பிறந்த குழந்தையை முதல்தடவை தாய் கையில் ஏந்தினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.
அதுவும் உங்கள் மகன் எழுதிய முதல்புத்தகம்.
”ஒங்க தொண்ணத்தஞ்சாவது பொறந்தநாள் இன்னிக்கி. ஒரு மகனா எதாவது பரிசு தரணுன்னு நெனச்சு, ஒங்களப் பத்தியே ஒரு புத்தகம் எழுதிக் கொண்டாந்துட்டன்..’’ என்றதும்,
வியப்பின் உச்சத்துக்குப் போன நீங்கள்,
”என்னது, என்னப் பத்தி புஸ்தகமா?’’ என்றீர்கள்.
லேசாக சிரித்தபடி, ”ஆமாய்யா’’ என்றதும்,
”என்னப் பத்தி எழுதர்க்கு என்ன இர்க்கு?’’ என்று, அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தோடு கேட்டீர்கள்.
மீண்டும் அதே மென்முறுவலோடு, ”நீங்க வாழ்ந்த வாழ்க்க. எனக்கு நீங்க சின்ன வயசுலர்ந்து சொல்லித்தந்த நல்லது, கெட்டது. ஒங்கக்கிட்ட இர்ந்து நான் கத்துக்கிட்டது. எல்லாத்துலயும் கொஞ்சத்த இதல எழுதிர்கன்..’’ என்றேன்.
எதுவும் புரியாதவராய் விழித்தபடி புத்தகத்தின் முன்னட்டை, பின்னட்டை, உள் பக்கங்கள் யாவற்றையும் பார்த்துவிட்டு,
”புஸ்தகம்னா என்னான்னுலாம் எனக்குத் தெரியாது. ஆனா, எதோ பெரிய விசயம்னு மட்டும் தெரிது” என்றீர்கள்.
சட்டென நான்,
”உங்களுக்கும் எனக்கும் தெரிஞ்ச உங்களோட வாழ்க்கய, இனி இந்த தமிழ் உலகமே படிச்சித் தெர்ஞ்சிக்கப்போவுதுய்யா. அதுமட்டுல்ல… உங்க காலத்துக்கு அப்றம், ஏன்… என் காலத்துக்கு அப்றம்கூட இந்த புத்தகம் உயிரோட இருக்கும்..’’ என்றேன்.
கையெடுத்து வானைப் பார்த்து கும்பிட்டு,
”எல்லாம் அந்த ஆண்டவன் வுட்ட வழி..’’ என்றீர்கள்.
உங்களுக்கு ஒன்று தெரியுமா ஐயா? முதலில் இப்படியொரு புத்தகம் எழுதுவதாகத் திட்டமே இல்லை. தங்களது 94-வது பிறந்த நாளுக்கு உங்களையும், அம்மாவையும் விமானத்தில் அழைத்துப் போனதைப் பார்த்த தோழி ஒருவர், அந்நிகழ்வை ஒரு கட்டுரையாக எழுதச் சொல்லி பலமுறை கேட்க, ஒருநாள் எழுதினேன்.
முதலில் அதை மற்ற கட்டுரைகள் போல சாதாரணமாகத் தான் எழுத ஆரம்பித்தேன். ஆனால், அடுத்தடுத்த வரிகளை எழுதஎழுத என்னையே அறியாமல் கண்கள் கலங்க ஆரம்பித்தன. அழுதுகொண்டே எழுதுகிறேன். கட்டுரை முடிந்த பிறகுதான் தெரிகிறது, ஒவ்வொரு வார்த்தைகளும் மனத்தின் அடியாழத்திலிருந்து நேரடியாக வந்த சொற்களால் கோக்கப்பட்டதென்று.
உடனே அதை குமுதம் – சிநேகிதி ஆசிரியை லோகநாயகி அக்காவுக்கு அனுப்பினேன். படித்தவர் நெகிழ்ந்துபோய் பத்திரிகையில் பிரசுரிப்பதாகச் சொன்னார். அதற்கடுத்த சில தினங்களில் ’94 வயது தந்தையை விமானத்தில் பறக்கவைத்த தனையன்!’ என்ற தலைப்பில் அக்கட்டுரை வெளியாகி, லட்சக்கணக்கான வாசகர்களை சென்று சேர்ந்தது.
பின்பதை முகநூலிலும் பதிவிட்டேன். வாசித்த பலர் நெகிழ்ந்து கண்ணீர் சிந்தியதும், அவர்களின் தாய் தந்தையரை கொண்டாட எண்ணியதும், அவர்களுடன் உட்கார்ந்து அதிகநேரம் பேசவும் அவர்களின் ஆசை என்னவெனக் கேட்டு நிறைவேற்ற நினைத்ததும், இருவர் தம் வயதான தாய் தந்தையரை விமானத்தில் அழைத்துச் சென்றதும், இன்னும் சிலர் அழைத்துப்போக உள்ளதாக சொன்னதையும் கேட்டு அவ்வளவு மகிழ்ந்தேன்.
அதன்பிறகு நான்கைந்து பேர் ‘நீங்க ஏன் உங்க ஐயாவப் பத்தி ‘ஐயா’ன்ற தலைப்புலயே ஒரு புத்தகம் எழுதக்கூடாது?’ எனக் கேட்க, அக்கேள்வியில் இருந்துதான் ‘தங்களைப் பற்றி புத்தகம் எழுதினால் என்ன?’ என்ற பதில்கேள்வி மனத்துக்குள் முதல் தடவையாக முளைத்தது.
‘எதச் செய்றதுக்கு முன்னாடியும் ஒரு தடவைக்கு பத்து தடவ யோசி..’ என்பீர்கள்.
ஆம்! ஐயா, யோசித்தேன். அப்போதே முடிவு செய்துவிட்டேன், தங்களது 95-வது பிறந்தநாள் பரிசாக எழுதப்போகும் அந்நூலைத் தான் தரவேண்டுமென.
அடுத்தடுத்த தினங்களில் ஒவ்வொரு கட்டுரையாக எழுத ஆரம்பித்தேன். எழுதிய கட்டுரைகள் அனைத்தையும் உடனுக்குடன் அப்போதே முகநூலில் பதிவிட்டேன். பலரும் தொடர்ந்து வாசித்துக் கொண்டாடினார்கள்.
படைப்புத்திறனும் செயலூக்கமும் மிக்க எந்தவொரு கலைஞனுக்கும் ஒன்றின் உள்ளுருவம் பிடிபட்டதுமே எளிதில் அவை படைப்பாக வெளிப்பட்டுவிடும்.
அப்படித்தான் ஐயா, தங்களைப் பற்றிய புத்தகம் எனக்குள்ளிருந்து வெளிப்பட்டது.
ஒன்று மட்டும் எழுதுவதற்கு முன்னமே உறுதியாகத் தெரிந்தது. இந்நூல் நிச்சயம் பல்லாயிரம் பேரை சென்றடையும். காலத்தின் அவசியத் தேவையென்று பார்க்கப்படும். பலநூறு ஆண்டுகள் நிலைத்திருந்து தொடர்ந்து வாசிக்கப்படும். பலரும் கொண்டாடுவார்கள். மனத்துக்கு மிக நெருக்கமாக உணர்வார்கள். பலரது வீட்டிலும் இருக்க விரும்புவார்கள்.
அதனால்தான் நூலின் முன்னுரையில்,
‘இது வெறும் புத்தகமன்று; வாழ்வு. படிக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் நுழையும். நுழைந்து வற்றிப்போன அன்பை சுரக்க வைக்கும். சுரக்க வைத்து அன்பின் பாதையில் நடக்க வைக்கும். நடக்க வைத்து ஒவ்வொரு நொடியையும் அன்பின் பேரில் மலரவைக்கும். மலரவும் மலர்த்தவும் தயாராகுங்கள்.’
என்று எழுதியிருந்தேன்.
அப்படியே நடந்தது. பலரும் விரும்பி வாங்கிப் படித்தார்கள்; நெகிழ்ந்தார்கள். கண்ணீர் சிந்தினார்கள். தம் வாழ்வுக்கான கேள்விகளுக்கு விடை கண்டடைந்தார்கள். தங்கள் விருப்பமான பலருக்கும் உயர் பரிசாக நினைத்து வாங்கித் தந்தார்கள். அடுத்தடுத்த பதிப்பு கண்டது. சென்னை புத்தகத் திருவிழாவில் அதிகம் விற்ற புத்தகங்களில் ஒன்றாக இருந்தது.
மேலும் ‘ஒரு படைப்பு எங்கே தொடங்க வேண்டும், எங்கே முடிக்க வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக் கூடாது’ என்னும் புரிதலும் எனக்குள் இப்புத்தகத்தின் வாயிலாக உருவானது. அது இன்னும்பல அரிய நூல்களை எழுதவேண்டும், புதுப்புது முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும் என்கிற உத்வேகத்தையும், ஆர்வத்தையும் எனக்குள் தந்தது.
ஆம்! ஐயா, தங்களைப் பற்றி எழுதிய ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’ நூல் நிகழ்த்திய, நிகழ்த்தி வரும் நிகழ்வுகள் பலவும் நான் கனவிலும் நினைத்துப் பார்க்காதது. தமிழிலக்கிய உலகில் அழுத்தமாக நுழைய வழிவகுத்தது. எந்தவோர் ஆரம்பநிலை எழுத்தாளனுக்கும் முதல்நூலில் பெற்றுத் தராத பெரும் வாசகர் பரப்பை குறுகிய நாட்களில் பெற்றுத்தந்தது. இன்னும் இன்னும்.
இங்கே தங்களிடம் இதுவரை சொல்லாத ஒரு விஷயத்தை சொல்ல நினைக்கிறேன் ஐயா. கடந்தாண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் கோவையில் உள்ள விஜயா பதிப்பகத்திற்கு, இந்நூல் உருவாக்கப் பணியை உடனிருந்துப் பார்க்க நினைத்துப் போயிருந்தேன்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் மூன்றரை மணி வாக்கில் பதிப்பக உரிமையாளர் வேலாயுதம் ஐயாவை சந்தித்துப் பேசிவிட்டு, திங்கள்கிழமை சிங்காநல்லூர் அருகில் உள்ள புத்தக வடிவமைக்கும் இடத்திற்குப் போய் புத்தக உருவாக்கத்தில் பங்கு பெறுவதாகச் சொல்லி முகவரியை வாங்கிக்கொண்டு, பி.என்.புதூரில் உள்ள செந்தில் அண்ணன் வீட்டிற்குப் போயிருந்தேன்.
அடுத்தநாள் சனிக்கிழமை காலையில் எழுந்து தம்பிகளுடன் வீட்டுக்கு வெளியே வெகுநேரம் கிரிக்கெட் விளையாடிவிட்டுப் போய் குளித்து சாப்பிட்டேன். சிறிதுநேரம் கழித்து நானும் அண்ணனும் அவரது இளைய மகன் ஜீவனும், கோவையின் வெளிப்புறத்தில் கேரளம் செல்லும் வழியில் மலைமீதுள்ள அனுவாவி சுப்ரமணியர் கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றோம்.
சென்று மலைமீதுள்ள கோயிலை சுற்றிப்பார்த்துவிட்டு, அதன் பின்னாலிருக்கும் வழியாக இன்னும் சற்றுதூரம் மலைமீதேறிப் போய் பாறைமீது உட்கார்ந்து சுற்றிலும் தெரியும் இயற்கைக் காட்சியை ரசித்துவிட்டு, நான்கைந்து பிரண்டைக் கொடியைக் கையில் பறித்துக்கொண்டு கீழே இறங்கி வந்தோம்.
எப்பக்கம் பார்த்தாலும் மண்ணைக் குடைந்து செய்து குவித்துவைக்கப்பட்ட பெரும் செங்கல் சூளைகள். கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் சூளை தவிர வேறெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இருபக்கமும் மலைகள் உயர்ந்து நிற்கும் எழில்மிகுந்த அழகான இடம்.
சுற்றிலும் வேடிக்கை பார்த்துக்கொண்டு, மலையடிவாரத்திலிருந்து அண்ணனுடன் கதைகள் பேசியவாறு சாலையோரமாக மெதுவாக சென்றுகொண்டிருந்தோம். சட்டென எதிர்பாராத நேரத்தில் கறுநிற பெருங்காட்டுப் பூனையொன்று குறுக்கே வர, அதன்மீது சக்கரம் ஏறி நிலைகுலைந்து மூவரும் கீழே விழுந்தோம்.
அண்ணன் வண்டிக்கடியில் மாட்டிக்கொள்ள, நடுவில் இருந்த தம்பி அவர் மீது போய் விழ, அவர்கள் இருவரையும் தாண்டிப் போய் நான் மூன்று தடவை மண்டை தார் ரோட்டில் டம்டம்மென அடித்து உருண்டு விழுந்தேன்.
நடந்தது யாவும் தெளிவாகத் தெரிந்தது. மண்டை உடைந்து விட்டதாகத் தோன்றியது. கைகளால் திரும்பத் திரும்ப மண்டையைத் தொட்டு ரத்தம் வருகிறதா எனப் பார்த்தேன், இல்லை. அதற்குள் அருகிருந்த கடைகளில் இருந்தவர்கள் ஓடிவந்து என்னைத்தான் முதலில் தூக்கினார்கள்.
தூக்கிப் போய் ஓரமாக உட்கார வைத்து முகத்தில் தண்ணீர் தெளித்து, குடிக்கத் தண்ணீர் தந்து சுவரில் சாய வைத்துவிட்டு அண்ணனைப் போய் தூக்கினார்கள்.
கை, கால், தோள்பட்டை என மொத்தம் ஒன்பது இடங்களில் சிறுசிறு காயங்கள் எனக்கு. அண்ணனுக்கு ஒரு கையும் காலும் உடைந்துவிட்டது. தம்பிக்கு நல்லவேளை எதுவும் ஆகவில்லை.
அடுத்த சில நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்தது.
எங்கேனும் ஆம்புலன்ஸ் போகப் பார்த்தால், ‘வெளில இருந்து உள்ளப் பாக்கற நாம, உள்ள இருந்து ஒருநாளாவது வெளிலப் பாக்கணும்..’ என்று தோன்றும்.
அன்றுதான் வாழ்வில் முதல்தடவையாக ஆம்புலன்ஸின் உள்ளிருந்து கண்ணாடி வழியாக வெளியில் தெரியும் மனிதர்களையும், அவர்களின் முகங்களையும், சாலைகளையும் பார்த்தேன்.
செந்தில் அண்ணன், ”வடிவு ஒனக்கொண்ணும் இல்லல்ல?’’ என்றார்.
எப்படியும் இக்கேள்வியை குறைந்தது இருவது தடவையாவது கேட்டிருப்பார்.
”எதுவும் இல்லண்ணா… எல்லாம் சின்னச் சின்ன அடிதான்… கால் முட்டிலதான் பெரிய அடின்னு நெனக்கிறன்… மண்டதான் ரோட்ல ‘டம்டம்’னு மூணு வாட்டி அடிச்சது… அதான் பயமா இருக்கு..’’ என்றேன்.
”அதெல்லாம் ஒண்ணும் ஆவாது, பாத்துக்கலாம் வா..” என்று, தன் வலியையும் பொருட்படுத்தாமல் லேசாகப் புன்னகைத்து நம்பிக்கையோடு சொன்னார்.
வாகனம் மருத்துவமனைக்குள் நுழைந்தது. எங்கெங்கும் பரபரப்பான முகங்கள். பச்சைநிற மெத்தையில் படுக்கச் சொல்லி, கையிலிருந்த கறுப்பு ரப்பர் பேண்டு, பாக்கெட்டிலிருந்த பர்ஸ், நகர்பேசி யாவற்றையும் எடுத்து தம்பியிடம் தரச்சொல்லிவிட்டு, முதலுதவி சிகிச்சை தந்தார்கள்.
பிறகு ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து தள்ளிப் போய் மூளை வரை ஸ்கேன் செய்தார்கள்.
‘என்ன சொல்லப் போகிறார்களோ?’ என ஒருபக்கம் பதட்டமாக இருந்தது. நல்லவேளை மருத்துவர் ரிப்போர்ட்டைப் பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல்,
”போய் நல்லா ரெஸ்ட் எடுங்க போதும்..’’ என்றார்.
‘அப்பாடா’ என்றிருந்தது.
மருத்துவமனைக்கு வெளியே வந்து அங்குள்ள மரத்தின் முன்னால் நின்று சுற்றுமுற்றும் பார்க்கிறேன். காற்றில் லேசாக அசைந்தாடும் இலைகள். சற்று தள்ளி வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள். புல்வெளியில் என்னைக் கடந்தோடும் வெண்ணிற கவுன் போட்ட குழந்தை. பின்னாலேயே மெதுவாக துரத்திக்கொண்டு வந்த பூப்போட்ட புடவை கட்டிய அம்மா. மேல் வானத்தில் வரிசையாக ஓவியம்போல் பறந்துபோகும் பறவைக்கூட்டம். யாவும் என்னை புதிதாக பிறந்து வந்ததாக உணர்த்தியது.
ஆம்புலன்ஸில் அடிபட்ட இடத்திலிருந்து மருத்துவமனை நோக்கி வரும்போதெல்லாம் என் மனமானது திரும்பத் திரும்ப ஒன்றைப் பற்றி மட்டுமே யோசித்ததய்யா.
‘இந்த புக்க மட்டும் எப்டியாது நல்லபடியா கொண்டாந்து ஐயா கைல கொடுத்துட்டன்னாப் போதும். அதுக்கப்றம் எனக்கு என்ன ஆனாலும் பரவால்ல..’
நினைத்ததைவிட பலமடங்கு நன்றாகவே புத்தகம் வெளிவந்தது. இப்போது யாவற்றையும் திரும்பிப் பார்க்கும்போது நடந்தது அனைத்தும் ஒரு கனவுபோல் இருக்கிறதய்யா.
புத்தகம் எழுதி முடித்துவிட்டு நான் பெரிதும் விரும்பிப் படித்த மூத்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஐயாவிடம் முன்னுரை வாங்கியது தொடங்கி, கோவை – விஜயா பதிப்பகம் நூலை வெளியிட முன் வந்தது, வலியோடு அடுத்தடுத்த நாட்கள் போய் நூல் உருவாக்கத்தில் உடனிருந்து புத்தகத்தை அழகுற கொண்டுவந்தது, புத்தக அறிவிப்பை முகநூலில் பதிவிட்டதும் வெளியிடும் முன்னமே அச்சிட்ட அனைத்து புத்தகங்களும் விற்றுத் தீர்ந்தது. உடனே அடுத்தப் பதிப்பு வெளியானது, ஐந்தாக – பத்தாக – இருபதாக – ஐம்பதாக – நூறாக பலரும் வாங்கி உயர்ந்ததொரு பரிசாக நினைத்து பலருக்கும் தந்தது, நான் படித்த லயோலா கல்லூரி கொண்டாடி நூலுக்கான அறிமுகக் கூட்டம் ஒன்றை மாணவர்கள் மத்தியில் நடத்தியது… இப்படி இன்னும் எவ்வளவோ சொல்லலாம் ஐயா.
அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே உங்களிடம் சொல்லலாமென நினைக்கிறேன்.
ஒருபக்கம் முகம் தெரியாதவர்களின் கொண்டாட்டம். இன்னொருபக்கம் வேண்டுமென்றே தெரிந்தவர்களின் புறக்கணிப்பு.
அதுவும் நன்கு பேசிப் பழகியவர்கள்கூட நூல் வெளிவந்த பிறகு பேசாமல் ஒதுங்கிப் போனது. அடுத்தடுத்த தளத்துக்கு நூலைக் கொண்டு செல்ல உதவுவார்கள் என நினைத்துப் போய் பார்த்தவர்கள் பலரின் முகத்தில் தெரிந்த ‘நீயெல்லாம் புக்கு எழுதறியா?’ எனும் ஏளனப் பார்வை. நான் வெளியில் வந்ததும் புத்தகத்தை பிரித்துக் கூடப் பார்க்காமல், ‘இவன்லாம் அப்டி என்ன பெருசா எழுதி கிழிச்சிருக்கப்போறான்’ என ஒருவர் குப்பையில் போட்டதாக கேள்விப்பட்டது. யாவும் முதலில் பெருவலியை மட்டுமே எனக்குள் உருவாக்கியது ஐயா.
பெங்களூரிலிருந்து புத்தகம் கேட்டிருந்த பெண் ஒருவர், தான் வாங்கிய ஒற்றைப் புத்தகத்திற்கான பணத்தோடு சேர்த்து இன்னும் ஐந்து புத்தகங்களுக்கான பணத்தை அனுப்பியிருந்தார். ஏனெனக் கேட்டதற்கு,
”எனக்கு ஒரு உதவி செய்றீங்களா? இங்க தமிழ் படிக்கத் தெரிஞ்ச பசங்க யாரும் இல்ல. இந்தப் புத்தகம் இன்னும் பலபேர்கிட்ட போய் சேரணும்னு நெனக்கிறன். அதனால கோச்சிக்காம அந்தப் பணத்துக்கு காசுகொடுத்து வாங்கிப் படிக்க முடியாத அஞ்சி ஏழப் பசங்களுக்கு என் சார்பா புத்தகம் தர முடியுமா?’’ என்றார்.
கண்கலங்கி உள்ளம் நெகிழ்ந்து போனேன்.
இன்னொரு முகம்தெரியாத இளம்பெண் ஒருவர், தனக்கொரு புத்தகம் அனுப்பி வைக்குமாறு முகநூலில் முகவரி அனுப்பியிருந்தார். அனுப்பி வைத்தேன். பதிலுக்கு புத்தகத்துக்கான பணத்தை விட பலமடங்கு அதிகமாக பணம் அனுப்பிவைத்து,
”மறுக்காம இந்த பணத்துக்கு ஐயாவுக்குப் புடிச்ச எதனா வாங்கித் தாங்க..’’ என்றார்.
82 வயதான நண்பனின் பாட்டி ஒருவர், புத்தகத்தை படித்துவிட்டு என்னிடம் பேச விரும்புவதாகச் சொல்லி நகர்பேசியில் அழைத்து,
”நீயும், ஐயாவும் நூறு வயசுக்கு மேலயும் நல்லாருக்கணும். எனக்கு இதுவரைக்கும் எந்த ஆசையும் இருந்ததில்ல. ஆனா, இப்போ மொத தடவையா ஒரேயொரு ஆச வந்திருக்கு. உன்னப் பாக்கணும், என் கையால ஒருவேளை சாப்பாடு ஒனக்கு சமச்சிப் போடணும். எப்ப வந்து என்னப் பாப்ப?’’ என்றார்.
உடன் படித்த நண்பன் ஒருவனோ, புத்தகத்தைப் படித்துவிட்டு வெளிநாட்டிலிருந்து அழைத்து கண் கலங்கியபடி பேசினான்.
”இந்தமாரி ஒரு புக்க நான் ஸ்கூல் படிக்கும்போது படிச்சிர்ந்தன்னா, இந்நேரம் என் வாழ்க்கயே வேற மாரி இர்ந்திர்க்கும்டா..’’ என்று சொல்லிவிட்டு,
”எனக்காக ஒண்ணு செய்றியா, எனக்கு கெடைக்காத இந்தப் புத்தகம் தமிழ்நாட்ல இர்க்க எல்லாப் பள்ளிக் கூடத்துக்கும் கெடக்கணும்னு நெனக்கிறன். மொத நூறு புக்குக்கான செலவ நான் ஏத்துக்கறன். முடியாதுன்னு மட்டும் சொல்லாத..’’ என்றது, நான் ஒருபோதும் எதிர்பாராதது.
இவை யாவற்றிலும் உச்சமாய் நாஞ்சில் நாடன் ஐயா, நூலுக்கான முன்னுரையில், ‘திருவண்ணாமலை மாவட்டத்தின் தென் பகுதியில், தென் பெண்ணை ஆற்றின் தென்புறத்துக் கிராமமான திருவடத்தனூர், வடிவரசால் தமிழிலக்கிய வரைபடத்தில், இந்நூல் காரணமாகக் குறிக்கப் பெறுகிறது’ என்றது, என் எழுத்துலக வாழ்க்கைக்கு கிடைத்த முதல் மிகப் பெரும் அங்கீகாரமாக நினைக்கிறேன் ஐயா.
இப்படி இன்னும் நூற்றுக்கணக்கான நெகிழ வைத்த சம்பவங்கள்… தங்களைப் பற்றி எழுதிய நூல் நிகழ்த்தியது. இங்கே மட்டுமல்ல… இலங்கை, துபாய், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட எத்தனையோ உலக நாடுகளுக்கும் பயணித்திருக்கிறது.
இவை யாவற்றுக்கும் அப்படியே நேர்மாறாக தமிழ் ஊடகங்கள் நடந்துகொண்டன. குமுதம் – சிநேகிதி, தினமணி, தமிழ் இந்து தவிர எந்த ஓர் ஊடகமும் இந்நூல் குறித்து ஒரு வார்த்தைகூட எழுதவில்லை. இத்தனைக்கும் எல்லா ஊடகத்தில் உள்ளவர்களையும் சந்தித்து புத்தகம் தந்திருந்தேன்.
முகநூலில் மட்டும் இதுவரை இருநூறுக்கும் அதிகமானோர் நூல் குறித்து எழுதியுள்ளார்கள். அவர்களில் 95 சதவீதம் பேர் எனக்கு முன்பின் தெரியாதவர்கள்.
‘நான் ஊடகத்தில் பணி புரிந்தவன்’ என்ற ஒற்றைக் காரணத்தைத் தாண்டி இவர்கள் என்னையும், என் நூலையும் ஒதுக்க வேறு எக்காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை ஐயா.
முதலில் சற்று வருத்தமாக இருந்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல் அதையே எனக்கான நல்லூக்கியாக, நூலுக்குக் கிடைத்த பெருவெற்றியாக எடுத்துக்கொண்டேன் ஐயா. ஆம்!
‘காய்த்த மரம்தான் கல்லடி படும்’ என்பார்கள் ஊரில்.
கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடந்த புத்தகத் திருவிழாவில் விஜயா பதிப்பகத்தின் முன்னால் நின்று நண்பரோடு பேசிக் கொண்டிருந்தேன். யாரோ முகம் தெரியாத நடுத்தர வயதுடைய ஒருவர், ஐயா புத்தகத்தின் பத்து பிரதிகள் வாங்கி பில் போட்டுக் கொண்டிருந்தார்.
அவருடன் இருந்த இன்னொரு நபரிடம் அந்நூலில் ஒன்றை எடுத்துக் காட்டி,
”இந்த ஒரு புக்கு போதும்… ஒருத்தன நல்லா வாழ வச்சிடும்..’’ என்று சொல்லியபடி எங்களைக் கடந்து போனார்.
என்னையறியாமல் கண்கள் தானாகக் கலங்க ஆரம்பித்துவிட்டது.
இவ்வளவு பேர் கொண்டாடும் ஒரு புத்தகத்தைப் பற்றி, வாரம் ஒரு புத்தகம் பற்றி எழுதும் இதழ்கள் தொடங்கி, வாரம் பத்து பதினைந்து புத்தகங்கள் வரைக்கும் விமர்சனம் எழுதும் நாளிதழ்கள் வரைக்கும் எதுவும் எழுதவில்லை, திட்டமிட்டு ஒதுக்குகிறது என்றால், அது அவர்களுக்குத்தானே இழுக்கு. அவர்களது நடுநிலைத்தன்மைக்கும், அவர்கள் செய்யும் வேலைக்கும்தானே செய்கிற துரோகம்.
‘கஷ்டப்படுறதுல தப்பில்ல… எப்பவும் நல்லாக் கஷ்டப்படு. நம்மளமாரி தூக்கிவிடவும், வழிகாட்டவும் ஆளில்லாதவங்களுக்கு கஷ்டம்தான தொண. நீ பட்ற கஷ்டம்லாம் ஒருநாளில்ல ஒருநாளு, ஒன்ன ஒயரத்துல கொண்டுபோய் வைக்கும்..’ என்பீர்கள் அடிக்கடி.
இதைத்தான் ஐயா தகுதியிருந்தும் அற்பக்காரணங்கள் சொல்லி யாரேனும் எங்கேனும் ஒதுக்கும்போதும், சோர்வுறும்போதும் நினைத்துக்கொண்டு, இன்னுமின்னும் உற்சாகத்தோடும், உத்வேகத்தோடும் அடுத்தடுத்த செயல்நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்.
‘என்னப் பத்தி எழுதர்க்கு என்ன இர்க்கு?’ என்றீர்கள்.
உங்களைப் பற்றி இன்னும் நூறுபுத்தகங்கள் எழுதும் அளவுக்கு விஷயங்கள் உள்ளதய்யா.
எனக்குத் தெரிந்து இவ்வுலகில் அர்த்தமுள்ள பெருவாழ்வு வாழ்ந்த (வாழும்) சிலரில் தங்களையும் ஒருவராக எப்போதும் பார்க்கிறேன் ஐயா.
தங்கள் வாழ்வு படிக்கும் யாவருக்கும் நல்வழி காட்டக்கூடியது. பேரன்பை யாவர் மனத்திலும் விதைக்கக் கூடியது. மேன்மையை உணர்த்தக் கூடியது. இன்னும் இன்னும். ஆம்! ஐயா.
கடைசியாக ஊருக்கு வந்திருந்தபோது சொன்னதைத் தான் இப்போதும் இங்கே சொல்லத் தோன்றுகிறது.
‘இத்தன வருசமா நீங்க வாழ்ந்த வாழ்க்கயவிட பல மடங்கு அதிகமா இந்த புத்தகத்து வழியா இனி வாழப்போறீங்க..’
ஆம்! ஐயா, இந்நூல், இச்சிறியோனின் மிக எளிய பிறந்தநாள் பரிசு, அவ்வளவுதான்!
வேறென்ன சொல்ல ஐயா?!
மிக்க மகிழ்வுடன்,
வடிவரசு
(August 14, 2020)
*
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – முன் கடிதம்…
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 1 : பிரிவின் தூரம்