முகங்களின் முதலில்…

(என் மூன்றாவது நூலான முகங்களிலிருந்து தினம் ஒரு முகம் நாளை முதல் வெளியாகும்)

மனிதர்களில் தான் எத்தனை எத்தனை முகங்கள். அதிலும் ஒருவரின் முகம் போல் இன்னொருவரின் முகமானது இருப்பதில்லை. இயற்கையின் படைப்பில் அதி உன்னதம் எனலாம் இதை.

ஒருவருக்கு ஒரு முகம் என்றால்… ஒரு குடும்பத்தில், ஒரு தெருவில்,  ஒரு பகுதியில், ஓர்  ஊரில், ஒரு மாவட்டத்தில், ஒரு மாநிலத்தில், ஒரு நாட்டில், இவ்வுலகத்தில்…?

நினைத்துப் பார்க்கும்தோறும் வியக்கவைக்கும் வினா இது. 

இது ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் ஒவ்வொருவருக்கும் உள்ளிருக்கும் இன்னொரு முகம். அதாவது உள்முகம். நாம் வெளியில் காண்பது வெளிமுகம். இதை அகமுகம், புறமுகம் எனலாம். 

இது தவிர சிலருக்கு பலமுகங்கள் இருக்கும் என்பார்கள். உதாரணமாக, அன்பாக வெளியில் எல்லோரிடமும் சிரித்துப் பேசும் ஒருவர், யாருக்கும் தெரியாமல் தினந்தோறும் இரவில் களவாடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் என வைத்துக்கொள்வோம். இப்போது அன்பாக எல்லோரிடமும் சிரித்துப் பேசும் முகம் ஒன்று, பலரது உழைப்பைக் களவாடி வாழ்வைக் கழிக்கும் திருட்டுமுகம் இன்னொன்று. ஆக, இரண்டு முகம்.

இதுபோல் இன்னும் பலமுகங்கள் அவருக்கு இருக்கலாம். அல்லது இவை இரண்டு முகங்கள் மட்டுமே கூட இருக்கலாம். மொத்தத்தில் மனிதர்களின் முகங்களை எண்ணப் புகுந்தால் நம் கதி, அதோகதி தான். 

சொல்ல வந்த விஷயம் அதுவல்ல… நம்மில், நம்மைச் சுற்றியுள்ளவர்களில் சில முகங்கள் வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் இருப்பதைப் பலரும் பல தருணங்களில் கண்டிருப்போம். அதிலும் சிலரது முகங்கள் எண்ணுந்தோறும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும், சிலநேரம் கண்ணீரையும், சிரிப்பையும் வரவழைக்கும்படி இருக்கக்கூடும். 

அப்படிப்பட்ட முகங்களை சிலர் அடிக்கடி காண நேரிடும், சிலரோ எப்போதாவது எங்கேயாவது ஒரே ஒரு தடவை கண்டிருக்கலாம், காண நேரலாம். அப்படி யான் கண்ட, கண்டுவரும் சில முகங்கள் குறித்து, அதாவது அவர்களது வெளிமுகம் குறித்தும், உள்முகம் குறித்தும் எழுத்தில் பதிவு செய்தால் எப்படி இருக்கும் என நினைத்ததுண்டு பல தடவை. அந்நினைப்பின் சொல்வடிவே இம்’முகங்கள்’ என்னும் நூல்.

இதில் வரும் முகங்களை யாராவது எங்காவது கண்டிருக்கலாம். அல்லது இனிவரும் காலங்களில் காண நேரலாம். அல்லது இவர்களைப் போன்ற முகங்களை கண்டும் இருக்கலாம், காணவும் நேரலாம். 

அப்படிக் கண்டால், காண நேர்ந்தால் அவர்களுக்கு ஒரு கைகுலுக்கலையோ, ஒற்றைத் தேநீரையோ, ஒருவேளை உணவையோ அல்லது குறைந்தது சிறு புன்னகையையோ பரிசாகத் தாருங்கள்.

அதற்கே இந்நூல்.

அதற்கு மட்டுமே இந்நூல்.

ஏப்ரல் 21, 2020                                                                            பேரன்புடன்,

சென்னை – 34                                                                            வடிவரசு

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=