திருவாளர் ஊர்சுற்றி – 4 : பேய்மழை

திருவாளர் ஊர்சுற்றி – 3 : வட்டவானவில்

இயற்கையின் பேருரு முன்னால் நாமெல்லாம் சிறு துகளினும் துகளினும் துகள்தான் என்பதும், அதன் வல்லமை முன்பு சிரம் தாழ்த்தி கரம் கூப்பி சரணடைதல் ஒன்றே நாம் செய்யக் கூடுவது என்றும் பல தடவை உணர்ந்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக பயணங்களின் போது. எதிர்பாராமல் நிகழும் சம்பவங்களின் போது. தன் தனிப்பெரும் வியாபகத்தை இயற்கையானது காட்டும் தருணங்களின் போது. ஆம்!

அத்தகைய தருணம் ஒன்று கடந்தாண்டுக்கு முந்தைய ஆண்டு நண்பர் ராம் ஊருக்கு சென்றிருந்தபோது வாய்த்தது. அதுவும் கள்ளக்குறிச்சி அருகிலுள்ள அவரது பாட்டியூரை (பொட்டியம் கிராமம்) ஒட்டிய கல்வராயன் மலை உச்சியில் ஆயிரம் ஆண்டு பழமையான சின்னத் திருப்பதி என்று சொல்லக்கூடிய கஜகிரி வெங்கடேசப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை நடக்கும் திருவிழாவுக்கு நண்பர்களுடன் போயிருந்தபோது.

தொடர் கொரோனா ஊரடங்கு காலம் தந்த வீடடைவில் இருந்து தப்பித்து, இயற்கை அன்னையின் மென்மடியில் இரண்டு மூன்று நாட்கள் ஆசுவாசமாய் தலைசாய்த்திருந்து திரிந்தலைந்துவிட்டு வர நினைத்து சென்றிருந்த எனக்கு, அங்கே மலைமேல் நடந்த எதிர்பாராத சம்பவம் ஒன்று அத்தனைப் பெரிய பாடத்தை கற்றுத் தரும் என கனவிலும் நினைக்கவில்லை.

அன்றைய தினம் காலை எழுந்து அருகிலோடும் சிற்றாறைக் கடந்துபோய் சிறு வேப்பங் குச்சியை உடைத்து பல் துலக்கிக் கொண்டு காலைக்கடன் முடித்துவிட்டு வந்து ஆற்றின் குளிர்ந்த நீரில் ஒரு குளியல் போட்டுவிட்டு, வெறும் வயிற்றில் ஆளுக்கு மூன்று இளநீர் வெட்டிக் குடித்துவிட்டு சிறிதுநேரம் கழித்து காலை உணவும் உண்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் முக்கால் மணி நேரம் பயணித்து திருவிழா நடக்கும் மலையடிவாரத்துக்கு சென்றோம்.

எப்பக்கம் பார்த்தாலும் பச்சைப் பசேலென மனிதர்களின் சுரண்டல் ஏதுமின்றி மிக ரம்மியமாக காட்சி தந்தது இயற்கை. இறங்கி தொடையளவு ஓடும் ஆற்று நீருக்குள் நடந்து மறுகரைக்குச் சென்று கதைகள் பேசியபடி மலையேற ஆரம்பித்தோம்.

எத்தனை சோர்வாக இருந்தாலும் சரி, காய்ச்சல் போன்றவற்றால் துவண்டுபோய் காணப்பட்டாலும் சரி, மலையேறும் உற்சாகமும், மலையேறப் போகும் எண்ணமும் சட்டென்று எனக்குள் நிகரற்ற உத்வேகத்தையும் புத்துணர்ச்சியையும் எப்போதும் தந்துவிடுவதுண்டு.

முன்தினம் முதலே ஏதோ குழப்பத்தோடு இருந்த எனக்கு அம்மலையை அதன் காலடியில் நின்று பார்த்ததும், அதன்மீது முதல் அடியை எடுத்து வைத்து ஏறியதும் உண்டான சிலிர்ப்பால் மிகத்தெளிவுற்று தெளிந்த நீரோடை போல் மாறி துள்ளும் குழந்தையானேன்.

மலைமீது வளைந்து நெளிந்து ஏறும் சிறு கொடிவழி. அதன் இருபக்கமும் அடர் காடாய் மரங்களும் செடிகொடிகளும் நிறைந்த பசுமைவெளி. பெரும்பாலானவற்றின் பெயர் தெரிந்திருந்தது. அதிகமும் துரிஞ்சி, பொர்ச, வேம்பு, மருதம், வெப்பாலை, மூங்கில், புங்கை, காரை, பூளா, சொத்துக்கிளா, கிளா, கருவேலன், ஞானா, ஆவாரை, கருவேப்பிலைதான். தெரியாதவற்றை நண்பர்களிடமும் எதிர்ப்பட்ட மனிதர்களிடமும் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

அழகிய மிக நீண்ட நெடிய மலை. மூச்சு வாங்க, உடலெங்கும் வியர்வை வழிய, நடுநடுவில் சில நிமிடங்கள் உட்கார்ந்து ஓய்வெடுத்துக்கொண்டு, ஏறிவந்த வழியையும் ஏறப்போகும் வழியையும் கீழே தெரியும் நிலப்பரப்பையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு ஏறினோம்.

சரியாக மலையின் பாதியில், நடந்துபோகும் பாதையின் ஓரத்தில் சிறு அருவியொன்று இரண்டாகப் பிரிந்து தன் நீர்க்கரங்களை நீட்டிக் கொட்டிக்கொண்டிருந்தது. அதன் அருகில் பிரமாண்டமான நூறாண்டு கடந்த மருதமரம் ஒன்று வான் தொட நின்றிருந்தது.

எறும்பை போல் ஒரு கூட்டம் மேலே ஏறிக்கொண்டும், இன்னொரு கூட்டம் கீழே இறங்கிக்கொண்டும் இருந்தார்கள். நண்பர் ராம் அருவியில் குளிக்கலாம் என்றார். எனக்கும் அருவியை பார்த்ததும் அதுதான் தோன்றியது. சரியென பாக்கெட்டிலிருந்த நகர்பேசியையும், பர்சையும் கொண்டுபோயிருந்த பையில் போட்டு ஓரமாக வைத்துவிட்டு சிறு குளியல் போட்டோம்.

தெளிந்து குளிர்ந்திருந்த அருவி நீரில் குளித்து முடித்ததும் உள்ளமும் உடலும் புதிதானது போல் இருந்தது. அதிலும் மரக்கிளை நடுவில் நுழைந்து வந்த வெயிலொளி மேலே பட்டு இன்னும் இதமாக இருந்தது. ஈர உடையோடவே அப்படியே மேல்நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

ஆறேழு வயதுடைய சிறார்கள் தொடங்கி எழுபது வயதான பெரியோர்கள் வரைக்கும் ஆண் பெண் வித்தியாசமின்றி கிட்டத்தட்ட எல்லா வயதினரும் மலையில் ஏறி இறங்கிக்கொண்டிருந்தார்கள். எதிர்பட்ட பெரியவர் ஒருவர் அறுபத்தைந்து ஆண்டுகளாக தொடர்ந்து ஒரு வருடம் தவறாமல் வந்து ஏறுவதாக தன் பத்துவயது பேத்தியிடம் பெருமையோடு சொல்லிக்கொண்டு போனார்.

மலை ஏற ஏற உடை முற்றிலும் காய்ந்துவிட்டது. வழியில் ஓரிடத்தில் இருந்த பெரும் பாறை மேல் போய் வட்டமாக உட்கார்ந்துகொண்டு வீட்டிலிருந்து பொட்டலம் கட்டி எடுத்துவந்த எலுமிச்சை சோறினை பிரித்து மாங்காய் ஊறுகாய் கடித்துக்கொண்டு, தூரத்தில் தெரியும் மலைகளையும் ஊர்களையும் ஆறுகளையும் ஏரிகளையும் பார்த்துக்கொண்டு சாப்பிட்டோம்.

பின் எழுந்து சென்று அருகிலிருந்த ஓடையில் இறங்கி கை கழுவிக்கொண்டு மறுபக்கமாக ஏறி சாமைக் கொல்லியையும் குச்சிவள்ளிக் கொல்லியையும் ஒட்டிய வேலியோரமாக நடந்து போய், சிறு மலை கிராமத்துள் நுழைந்து மலையின் மறுபக்க சரிவோரமிருந்த கஜகிரி வெங்கடேசப் பெருமாள் கோயிலை அடைந்தோம்.

பிகப் பழைய சிதிலமடைந்த கோயில். சரிவர பராமரிப்பின்றி பெரும்பாலான சிலைகள் உடைபட்டும் களவாடப்பட்டும் இருந்தது. கோயிலின் முன்பிருந்த கல்லாலான கொடிமரமும், கோயிலைச் சுற்றியிருந்த உடைந்த சுவர்களும், அதன் சுவடுகளும் ஒருகாலத்தில் மிகப் பிரமாண்டமான கோயிலொன்று அங்கே இருந்ததை சொல்லாமல் சொன்னது.

ஏற்கெனவே பெருங்கூட்டம் கூடியிருந்தது. நாங்கள் வந்த வழி இல்லாது இன்னும் இரண்டு வழிகள் இருப்பதாகவும், வாகனங்களில் வருவதற்கு தனியாக மற்றொரு பாதை உள்ளதாகவும் சொன்னார்கள்.

சாலையின் இருபக்கத்திலும் வரிசையாக நூற்றுக்கும் அதிகமான கடைகள் போட்டிருந்தார்கள். பொரி கடலை, பஜ்ஜி போண்டா வடை போன்ற தின்பண்டக் கடைகள்தான் அதிகமும். திருவிழா இல்லை என வந்தவர்களையெல்லாம் காவல்துறையினர் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

சிறிதுநேரம் அங்குமிங்கும் சுற்றிப் பார்த்துவிட்டு கோயில் முன்பாக நின்று பெருமாளையும் பக்கத்தில் தனியாக இருந்த சிவனையும் வணங்கிவிட்டு, பொரி கடலை வாங்கி ஆளுக்கு கொஞ்சம் தின்றுகொண்டு திரும்பி வந்தவழியே மலை கிராமம் நோக்கி நடந்தோம்.

சட்டென்று வானம் கருத்து இருட்டிக்கொண்டு வந்தது. பெருமழை வரப்போவதாக நண்பர்களிடம் சொன்னேன். உடனே எச்சரிக்கையானோம். ஒன்றிரண்டு துளிகளாகப் போட ஆரம்பித்ததும் ஒரே ஓட்டமாக மழை வலுப்பதற்குள் நனைந்துகொண்டு ஓடிப்போய் ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் ஒதுங்கி நின்றுகொண்டோம்.

மழையென்றால் அப்படியொரு மழை. பேய்மழை என்பார்களே, அதுபோன்றதொரு மழையை என் வாழ்நாளில் என்றும் கண்டதில்லை. இனிமேலும் காண்பேனா தெரியாது. அத்தனை கோரமாக, அத்தனை ஆக்ரோஷமாக பெய்யோ பெய்யென்று இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்துவிட்டது.

வீட்டில் இருந்தவர்கள் அங்கேயே இரவு தங்கிவிட்டு காலையில் போகச் சொன்னார்கள். இல்லை பரவாயில்லை எனச் சொல்லிவிட்டு வெளியில் வந்து தெருவில் நின்று வானத்தை பார்த்தோம். இத்தனை நேரமாக இப்படியோர் கொடும்மழை பெய்ததற்கான எவ்வடையாளமும் இல்லாமல் மிகச் சாதாரணமாக வெளுத்துக் காணப்பட்டது.

‘எட்டி வேகமாக இறங்கினால் இரவு சாப்பாட்டு நேரத்துக்குள் கீழே சென்றுவிடலாம்’ என்றார் ராம். ‘இல்லை, அது அவ்வளவு சுலபம் கிடையாது. மழை பெய்து வழி முழுக்க நீர் வழிந்துகொண்டு ஈரமாக இருக்கும். வேகமாகவெல்லாம் இறங்க முடியாது. கொஞ்சம் தவறினாலும் பெரும் ஆபத்துதான்’ என்றேன் நான்.

’ஆமாம்’ என தலையாட்டியவர், ‘சரி, மெதுவாகவே கீழே இறங்கலாம்’ என்றார். மெல்ல நடந்துபோய் நிறைந்துகொண்டு ஓடிய ஓடை நீருக்குள் இறங்கி மறுபக்க சாமைக் கொல்லிக்குள் புகுந்தோம்.

வானம் அதற்குள் வெளிச்சம் குறைந்து ஓரளவுக்கு இருட்டியிருந்தது. வீட்டுக்கு அழைத்து விஷயத்தை சொல்லலாம் எனப் பார்த்தால் யார் நகர்பேசியிலும் டவர் கிடைக்கவில்லை. அதோடு இருட்டுக்கு கண்களை பழக்கிக்கொண்டு நடப்பதுதான் சிறந்ததென நகர்பேசி விளக்கை அணைத்து உள்ளே வைத்துவிட்டு ஒருவர் பின் ஒருவராகப் போனோம்.

சட்டென ஓரிடத்தில் சென்றதும் ஆர்ப்பரித்து கொட்டும் நீரோசை கேட்டது. ஆம், வரும்போது குளித்துவிட்டு வந்த அருவி, பெய்த பெருமழையால் காட்டாறாக மாறி தன் கோரமுகம் காட்டிக் கொட்டிக்கொண்டிருந்தது. நிச்சயம் அதனைக் கடந்து கீழே இறங்கமுடியாது என்பதை அவ்வொலியைக் கேட்டதுமே புரிந்துகொண்டோம்.

இருந்தாலும் ஒரு நப்பாசையில் அருகில் போய் ஏதேனும் முயற்சி செய்து பார்க்கலாம் என நினைத்தோம். அதன்படி பக்கத்தில் சென்று பார்த்துவிட்டு எங்கள் முயற்சியில் தோல்வியுற்றுத் திரும்பி, ‘வந்த வழியே ஏறிப் போய் மலை கிராமத்தில் அல்லது கோயிலில் இரவு எங்கேனும் தங்கிவிட்டு காலையில் வருவதுதான் சரி’ என ஒருவாறு முடிவெடுத்து நடந்தோம்.

முதலில் அங்கேயே அருவி ஓரத்தில் ஒரு பாறைமேல் இரவு முழுக்க உறங்காமல் விழித்திருந்து கதைகள் பேசிக்கொண்டிருந்துவிட்டு நீர்வடிந்து வழிவிட்டதும் கீழே இறங்கலாம் என்றுதான் நினைத்தோம். ஆனால் மறுபடியும் மழை வந்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். அதிலும் குறிப்பாக ஒதுங்கி நிற்கக்கூட இடமின்றி மழையில் நனைந்து இரவெல்லாம் அந்த ஆளரவமற்ற மலைக்காட்டுக்குள், அதுவும் சாப்பிடாமல் பசியோடு இருப்பது அத்தனை எளிதான காரியமல்ல. அதோடு, எந்நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் திரும்பிச் சென்றுவிடுவதே நல்லது என ஒவ்வோர் அடியாக பார்த்துப் பார்த்து எடுத்துவைத்து, ஒருவருக்கொருவர் கைகொடுத்து உதவிக்கொண்டு, ஒருவர் பின் ஒருவராக நடந்து வந்தோம்.

சிறு பூச்சிப்பொட்டுகள் மற்றும் தவளைகளின் கத்தல் சத்தம் தவிர்த்து எச்சத்தமும் காதில் விழவில்லை. பேரிருளுக்கு நடுவில் தெரியும் சிற்றொளி தவிர எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. அடுத்தென்ன அடுத்தென்ன என்னும் பீதியோடவும், இத்தகைய அனுபவம் ஒன்று அதுவாக அமைந்தது நினைத்து சிறு மகிழ்வோடும் நடந்தோம்.

தனக்கு இப்போதே பசிக்க ஆரம்பித்துவிட்டதாக நண்பர் கார்த்திக் சொன்னார். ‘வேறு வழியில்லை, மலை கிராமத்தில் தெரிந்த ஒருவரின் வீடு இருக்கிறது. சென்று அங்கே கேட்டு ஓர் ஓரமாக படுத்துக்கொண்டு, ஏதாவது சாப்பிடத் தந்தால் உண்ணலாம்’ என இன்னொரு நண்பர் சொல்லக் கேட்டு நம்பிக்கையோடு குறுக்கிட்ட ஓடையில் இறங்கி நடந்து மறுகரைக்கு வந்தோம்.

திடுமென வானம் ஆங்கொன்றும் ஈங்கொன்றுமாக தூற ஆரம்பித்தது. ‘இதென்னடா வம்பா போச்சு’ என நினைத்துக்கொண்டு எட்டி வேகமாக நடந்தோம். நல்லவேளை தூறல் வலுக்கவில்லை. சாணி போட்டதுபோல் போட்டுவிட்டு நின்றுவிட்டது.

நின்று திரும்பி வந்த வழியைப் பார்த்து, ”இந்தச் சின்ன உடம்பையும் உயிரையும் வச்சுக்கிட்டு மனுசங்க ஆடற ஆட்டமெல்லாம், தான்முன்னால ஒண்ணுமே இல்லன்னு இந்த இயற்கை சொல்லிடிச்சில்ல… ஒரு மழையால அருவிய காட்டாறாக்கி தாண்டிப் போக விடாம நம்மள திருப்பி அனுப்பிடிச்சில்ல…’’ என்றேன் நண்பர் ராமிடம். ”ஆமா சகோ’’ என்றார் மெல்ல தலையாட்டி.

‘இயற்கையின் பேருரு முன்னால் நாமெல்லாம் சிறு துகளினும் துகளினும் துகள்தான் என்பதையும், அதன் வல்லமை முன்பு சிரம் தாழ்த்தி கரம் கூப்பி சரணடைதல் ஒன்றே நாம் செய்யக் கூடுவது என்பதையும்’ இப்பயணம் எனக்கு இன்னொரு தடவை மிக அழுத்தமாக உணர்த்திவிட்டதாக மனத்துக்குள் நினைத்துக்கொண்டு நண்பர்கள் பின்னால் அம்மலை கிராமம் நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தேன்.

*

‘திருவாளர் ஊர்சுற்றி’ – பயண நூல் தொடக்கம்

திருவாளர் ஊர்சுற்றி – 1 : பைங்கறி

திருவாளர் ஊர்சுற்றி – 2 : நதிநடுவில்

திருவாளர் ஊர்சுற்றி – 3 : வட்டவானவில்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=