‘பொங்கல் பாடல்’ உருவான கதை!

ஒவ்வோர் ஆண்டு தைப்பொங்கல் வரும்போதும் பொங்கல் பாடல் எழுதவேண்டும் என்ற ஆசை உள்ளுக்குள் எழும். கூடவே அது வெறும் பொங்கல் பற்றின பாடலாக மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களுக்கான தமிழர் திருநாள் பாடலாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் வரும். அப்படியான ஒரு பாடல் எழுதும் வாய்ப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் வந்தது.

அதாவது, 2020 ஆம் ஆண்டு தமிழர் திருநாளுக்கு வெளியிடப்போகும் பொங்கல் பாடலை எழுதும் வாய்ப்பு. அதுவும் உலகெங்கும் சென்று நூற்றுக்கும் அதிகமான விருதுகளை பெற்றுவந்த TOLET திரைப்படத்தின் கதாநாயகன் சந்தோஷ் நம்பிராஜன் வழியாக. அவரது இயக்கம் மற்றும் நடிப்பில். ஆம்!

சென்னை – வள்ளுவர் கோட்டம் பின்புறம் இருக்கும் சுதந்திர தின பூங்காவில் உட்கார்ந்து நண்பர் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்ததாக நினைவு. சரியாக அப்போது அழைத்தவர் அடுத்தநாள் காலையில் என்னையும் இசையமைப்பாளர் ஷ்ரவன் கலையையும் வடபழனியில் உள்ள ஒலிப்பதிவுக் கூடத்தில் அவசரமாக சந்திக்க விரும்புவதாகச் சொன்னார். சந்தித்தோம்.

வழக்கமான நலம் விசாரிப்புகளுக்குப் பின், உலகத் தமிழர்களுக்காக பொங்கல் பாடல் ஒன்று தமிழகத்தையும் சிங்கப்பூரையும் மையமாக வைத்து உருவாக்க உள்ளதாகச் சொல்லி, அப்பாடலை என்னை எழுதுமாறு கேட்டுக்கொண்டார். மிகுந்த மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டேன்.

பலதடவை எழுத நினைத்த பாடல். அதுவும் ஒட்டுமொத்த தமிழர்களுக்காக. சந்திப்பு முடிந்த அடுத்த அரை மணி நேரத்தில்,

ஞாலத்தில் எத்தனை மொழிகளிருந்தும்

மனிதரில் எத்தனை முகங்களிருந்தும் –

நாட்களில் எத்தனை சிறப்புகளிருந்தும் –

தமிழர் திருநாள் போல் வருமா?!

எம் பொங்கல் போல் வருமா?!

என்ற தொகையறாவும்,

நாளு நாளு நாளு நாளு

தமிழர் திருநாளு…

கேளு கேளு கேளு கேளு –

தமிழர் புகழ்கேளு…’

எனத் தொடங்கும் பல்லவியும் எழுதி முடித்தேன்.

முடித்த கையோடு இசையமைப்பாளரிடம் காட்ட, அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. இரண்டு மூன்று தடவை படித்துப் பார்த்தவர், உடனே தன் கீபோர்டில் இசைமீட்டி என் வார்த்தைகளை பாடலாக்கிப் பாடிக்காட்டினார். கேட்டதும் சிலிர்த்துவிட்டேன். அதே மகிழ்வோடு வெளியில் வந்து அடுத்த இரு சரணங்களையும் எழுதிப் போய் நீட்டினேன். படித்தவருக்கு உற்சாகம் தாளவில்லை. சட்டென சந்தோஷ் நம்பிராஜன் எண்ணுக்கு அழைத்து ஒரு மணி நேரத்தில் அவரை வரச்சொன்னார்.

என்ன ஏதோவென வந்தவர், நாங்கள் அதற்குள் உருவாக்கியிருந்த பாடலைக் கேட்டதும் எழுந்து இருவருக்கும் கை கொடுத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதிலும் பாடலில் வரும் ‘லேலே பொங்கலு’ எனும் இடங்களில் தன்னை அறியாமல் தன் உள்ளமும் கால்களும் ஆட்டம் போடுவதாகச் சொன்னார். உடனே ‘யாரை பாட வைக்கலாம்?’ என்று கேட்க, இசையமைப்பாளர்தான் மக்கள் இசைக் கலைஞர்கள் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி தம்பதியரை பாடவைக்கலாம் என்றார் முதலில். நாங்களும் அவர்கள்தான் சரியாக இருக்கும் என முடிவெடுத்து ‘சரி’ என்றோம்.

அடுத்தடுத்த நாட்களில் பாடல் பதிவாகி, காட்சிகள் தமிழகத்திலும் சிங்கப்பூரிலும் பிடிக்கப்பட்டு, பாடல் வெளியாகி உலகெங்கும் உள்ள தமிழர்களின் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றது.

இதில் மகிழ்ச்சி என்னவென்றால் பாடலைக் கேட்ட ஒவ்வொருவரும் மனதாரக் கொண்டாடி தங்கள் யூடியூப் சேனல்களிலும், முகநூல் பக்கங்களிலும் பதிவிட்டது, தங்கள் நட்புகளுக்கும் சொந்தங்களுக்கும் பகிர்ந்தது. வருத்தம், நாங்கள் கைகாட்டிய பாடகர்கள் தாங்கள் தோன்றும் மேடைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தவறாமல் இப்பாடலைப் பாடியும் எழுதிய என் பெயரையும் இசையமைத்த இசையமைப்பாளர் பெயரையும் சொல்லாமல் தங்கள் பெயரை மட்டுமே பிரதானப்படுத்தியது.

எது எப்படியோ… தமிழர்களுக்காக, தமிழர் திருநாளுக்காக நாங்கள் சேர்ந்து உருவாக்கிய இப்பாடல் காலத்துக்கும் தமிழர் நெஞ்சங்களில் ஒலித்தால் அதுவே போதும் எங்களுக்கு.

முழு பாடல் வரிகள் இதோ :

தொகையறா :

ஞாலத்தில் எத்தனை மொழிகளிருந்தும் – 

மனிதரில் எத்தனை முகங்களிருந்தும் –

நாட்களில் எத்தனை சிறப்புகளிருந்தும் –

தமிழர் திருநாள் போல் வருமா?!

நம் பொங்கல் போல் வருமா?!

பல்லவி :

நாளு நாளு நாளு நாளு –

தமிழர் திருநாளு…

கேளு கேளு கேளு கேளு –

தமிழர் புகழ்கேளு…  (2)

எங்கெங்கே போனாலும் –

ஒண்ணா கூடுவோம்…

நெஞ்சங்கள் ஒன்றாக –

நல்லா பாடுவோம்…

தூரங்கள் தடுத்தாலும் –

உள்ளத்தில் தேடுவோம்…

பாரங்கள் சுமந்தாலும் –

எண்ணத்தில் ஆடுவோம்…

பொங்கல் வெறும் நாளு இல்ல –

எங்கள் திருநாளு…

இதுபோல் வேறு இல்ல –

எங்கள் முதல்நாளு…

எல்லை பல கடந்தபோதும் –

சிறக்கும் பெருநாளு…

தமிழர் இருக்கும் வரை –

இருக்கும் ஒருநாளு…

லேலே லேலே லேலே லேலே…

லேலே பொங்கலு –

வாழ்த்து சொல்லி சிரிப்போம்…

லேலே பொங்கலு –

வாழ்வ சொல்லி சிலிர்ப்போம்…

லேலே பொங்கலு –

இருப்பத அள்ளிக் கொடுப்போம்… 

லேலே பொங்கலு –

இல்லாம மறந்து நடப்போம்…

சரணம் – 1:

வேட்டிக்கட்டி வலம் வருவோம் –

வீட்டக் கோட்டை ஆக்குவோம்…

சல்லிக்கட்டு காளையப்போல –

துள்ளித் துள்ளி ஆடுவோம்…

வான மண்ண வணங்கிடுவோம் –

விடிய விடிய மலர்ந்திடுவோம்…

ஓடி ஆடி வாழ்வப் படிச்சி –

அன்பில் பண்பில் மகிழ்ந்திடுவோம்…

மாமன் அட மச்சான் –

எல்லாம் ஒண்ணா சேருவோம்…

பழையக் கதை பேசி –

புதிய வழியில் ஏறுவோம்… 

புதுப்பானை பொங்க வச்சி –

அக்கம் பக்கம் தருவோம்…

மொறப் பையன் வீட்டுக்கு மட்டும் –

அக்கற சேத்துத் தருவோம்…  

வேப்பில மாவில அறுகம்புல்லு எல்லாம் –

வீட்டுல சொருகி இன்பம் பருகுவோம்… 

கல்வெட்டு காலம் தொடங்கி –

கூகுளு காலம் வரைக்கும்…

தொடரும் ஒரு நாளு –

எங்கத் தமிழர் திருநாளு…

*

//கும்மியடி மச்சான் கும்மியடி –

எங்கும் பழமை கழிய கும்மியடி…

சொல்லியடி மச்சான் சொல்லியடி –

புதுமை நிறைய கும்மியடி…

கும்மியடி பொண்ணே கும்மியடி –

நம்ம அரும சொல்லி கும்மியடி…

சொல்லியடி பொண்ணே சொல்லியடி –

நம்ம பெரும சொல்லி கும்மியடி…//

*

சரணம் – 2 :

கொலதெய்வம் கோயிலுக்கு –

குடும்பத்தோட போயிடுவோம்…

குறும்புக்கார மாமனுக்கு –

கண்ணாலயே தூது விடுவோம்…

ஏர் கலப்ப எல்லாம் வச்சி –

ஏகத்துக்கும் படச்சிடுவோம்…

இதுநாளின் வண்ணம் எண்ணி –

மனசார நன்றி சொல்வோம்…

அண்ணன் தங்க பாசம் –

ஆயுள் வரை வீசும்…

அக்கா தம்பி நேசம் மட்டும் –

பக்கம் பக்கமாப் பேசும்…

பொங்கலு போட்டியின்னா –

கொஞ்சம் ஒதுங்கி நிப்போம்… 

பொறுமையின் எல்லை வரைக்கும் –

பொறுப்பா போயி நிப்போம்…

செங்கரும்பு மாவிளக்கு சக்கரப் பொங்கலு –

எல்லோரும் உண்போம் எங்கேயும் செல்வோம்…

கல்வெட்டு காலம் தொடங்கி –

கூகுளு காலம் வரைக்கும்..

தொடரும் ஒரு நாளு –

எங்கத் தமிழர் திருநாளு…

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=