முரம்பு கிராமியச் சொல்லகராதி

அகராதிகள் எப்போதும் என்னை வியப்பில் ஆழ்த்துபவை என்பேன். அதிலும் தெரியாத சொல்லுக்கான பொருளைத் தேடி ஓர் அகராதியை எடுத்துப் புரட்டும்போது அச்சொல்லுக்கான பொருளோடு சேர்ந்து இன்னும் பல சொற்களுக்கான பொருள்களையும் தெரிந்துகொண்டு வருவது அனுபவிக்கும்தோறும் பெருஞ்சுகத்தையும், ஆச்சரியத்தையும் ஒருங்கு தருபவை.
அகராதிகள் ஒருவகை சொற்கிடங்குகள். எண்ணுந்தோறும் அதனை உருவாக்கியவர்களை நினையாமல் இருந்ததில்லை. கூடவே, அவ்வப்போது ஓர் ஆசையும் எட்டிப் பார்ப்பதுண்டு. ‘இன்றில்லை என்றாவது நாமும் இதுமாதிரி ஓர் அகராதியை உருவாக்கி நம் மொழிக்கு தரவேண்டும்’. ‘என்னது அகராதியா, அதுவும் நாமா?’. ‘ஏன் முடியாதா என்ன?’. கேள்வியும், அதைத் தொடர்ந்த நம்பிக்கை வார்த்தைகளும்.
இவை ஒருபக்கம் இருக்க… இன்னொரு பக்கம் என் தேடலும் வாசிப்பும் எழுத்துப் பணிகளும் மிகுந்த உத்வேகத்துடன் சென்றுகொண்டிருந்தன. ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’ நூலைத் தொடர்ந்து ‘கள்ளிச்செடியில் பூத்த காதல் கடவுச்சொல்’ கவிதைத் தொகுப்பும், ‘முகங்கள்’ கட்டுரைத் தொகுப்பும், ‘அகத்திரியில் ஏற்றிய நெருப்பு’ கடிதத் தொகுப்பும் வெளியாகின.
அதன்பிறகு நண்பர் இசையமைப்பாளர் ஷ்ரவன் கலையோடு சேர்ந்து ‘100 நாள் – 100 பாடல் – 100 நொடி‘ என தொடர்ந்து நூறு நாட்கள் நூறு பாடல்கள் வெளியிட்டு உலகில் இதுவரை யாரும் செய்யாத ஒன்றை நிகழ்த்தினோம். பின் அதையே ‘ஏலேலோ பாட்டு’ என்று நூலாகவும் கொண்டு வந்தோம்.
அதில் பல பாடல்கள், [குறிப்பாக சிறுவர்களுக்காக எழுதிய ‘ஓட ஓட‘, காதலி தன் காதலனை எண்ணிப் பாடுவது போல் எழுதிய ‘ஆகாசம் நீலநெறம்’ போன்றவை] எங்கள் கிராமத்தில் ஒலிக்கும் சொற்களை மிகுதியாகக் கொண்டு எழுதப்பட்டவை. கேட்ட பலரும் பெரிதும் ரசித்தார்கள். கூடவே, அவற்றில் பல சொற்களுக்கான அர்த்தம் தெரியவில்லை என்றார்கள். சொன்னேன் வியந்தார்கள். ‘இதையெல்லாம் எங்கே தெரிந்துகொள்வது?’ என்று கேட்டார்கள். பதிலில்லை.
அதன்பின் நிலைத்திணை, ஐயன்Sol_தனயன்Click, எங்க கல்யாணம் போன்ற நூல்களை எழுதி முடித்தேன். கையோடு என் முதல் நாவலுக்கான தொடக்க வார்த்தை அல்லது வாக்கியம் ஓர் அதிகாலைப் பொழுதில் மனத்துள்ளிருந்து பீரிட்டு எழ, எழுந்து உட்கார்ந்து அடுத்த ஒரு மணி நேரத்தில் முதல் அத்தியாயத்தை எழுதி முடித்தேன். மனத்திற்கு மிக திருப்தியாக இருந்தன. அடுத்தடுத்த நாட்களில் அடுத்தடுத்த அத்தியாயங்கள். அனைத்தும் நான் நினைத்ததை விட சிறப்பாக வந்திருந்தன. கூடவே எனக்குள் இருந்த அகராதி ஆசையும் முன்னைவிட இன்னும் பல மடங்கு அதிகமாக எட்டிப் பார்க்க ஆரம்பித்தது.
ஏற்கெனவே அவ்வப்போது எட்டிப் பார்த்த ஆசையால் சில நூறு சொற்களைத் தொகுத்து வைத்திருந்தாலும், இம்முறை அந்த ஆசை எழக் காரணம் ‘முரம்பு’ நாவலில் பல நூறு பொருள் தெரியாத வட்டாரச் சொற்கள் வந்திருப்பதாக வாசித்தவர்கள் சொன்னதுதான். ‘சரி, இதற்கு மேலும் அகராதிப் பணியை தள்ளிப் போடக்கூடாது’ என்ற முடிவுக்கு ஒருவாறு வந்தேன்.
உடனே தொகுத்து வைத்திருந்த சொற்களை எடுத்துப் பார்த்தேன். சுமார் தொள்ளாயிரம் சொற்களுக்கு மேல் இருந்தன. நாவலில் வரும் சொற்கள் சிலவற்றை அவற்றுடன் சேர்க்க பட்டியல் ஆயிரத்தி இருநூறைத் தாண்டியது. சட்டென ‘முரம்பு கிராமியச் சொல்லகராதி’ என மனத்திற்குள் அதற்கொரு பெயரிட்டு, அவற்றுக்கான பணியினைத் தொடங்கிவிட்டேன்.
இந்த அகராதி முழுக்க முழுக்க எங்கள் கிராமத்தில் உள்ளவர்கள் நாவில் ஒலித்த / ஒலிக்கும் / ஒலிக்கப்போகும் சொற்களை மாத்திரமே கொண்டது. இவற்றில் இருக்கும் பெரும்பாலான சொற்களை தமிழில் வேறெந்த அகராதியில் தேடினாலும் இருக்காது. பொனக்கட்டை, சோமம், வர்ணக்கோல், பைசி, தெரட்டி, பொடை, அஜ்ஜான், லாகாசி, நடுகூறு, அணில்காய் போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.
சில சொற்கள் தமிழ் லெக்ஸிகன் உள்ளிட்ட பிற அகராதிகளில் இடம் பெற்றிருக்கலாம். முரம்பு போன்று. என்றபோதும் அவற்றுக்கான பொருள் மாறுபட்டிருக்கும். பல சொற்கள் [எங்கள்] நடுநாட்டை மையமாக வைத்து நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர் கண்மணி குணசேகரன் அவர்கள் உருவாக்கிய நடுநாட்டுச் சொல்லகராதியில் இருக்கலாம். ஆயாம்மா போன்று. எனினும் அவற்றில் பெருமளவு பொருள், சொல்லமைப்பு, உச்சரிப்பு வேறுபட்டிருக்கும்.
மொத்தத்தில் இந்த அகராதி ஒரு கிராமத்துக்கான அகராதி. அதுவும், திருவண்னாமலை மாவட்டம் – தண்டராம்பட்டு வட்டம் – திருவடத்தனூர் கிராமத்தில் உள்ள மக்கள் தம் அன்றாட வாழ்வில் உச்சரிக்கும் சொற்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்படுவது.
எனக்குத் தெரிந்து ஒரு மொழிக்கு, ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு, ஓர் இலக்கியப் படைப்புக்கு, ஒரு துறைக்குதான் இதுவரையில் அகராதி வந்திருக்கிறதே ஒழிய, ஒரு கிராமத்துக்கு என தனியாக ஓர் அகராதி வந்ததாகத் தெரியவில்லை. அவ்வகையில் இதுதான் ‘உலகில் முதன்முதலில் ஒரு கிராமத்து மக்கள் பேசும் சொற்களை மாத்திரம் கொண்டு உருவாக்கப்படும் கிராமியச் சொல்லகராதி’ என்று நினைக்கிறேன்.
அச்சு நூலாக இதன் முழுவடிவம் 2024 ஆம் ஆண்டு – செப்டம்பர் ஒன்றாம் தேதி – ஐயாவின் நூறாவது பிறந்தநாளில் வெளியிட திட்டம் என்றாலும், அதற்கு முன்னால் [அதற்கு பின்பும்] இத்தளத்தில் தினம் ஒரு சொல் என வெளியிட திட்டமிட்டிருக்கிறேன் [இதுவும் இதுவரை இல்லாத புது முயற்சி என்றே நினைக்கிறேன்].
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வாசியுங்கள். பல நூறு சொற்களை அறிந்து கொள்ளவும், இன்னும் விரிவானத் தளத்துக்கு பயணிக்கவும் அவை உதவலாம்.
நம்பிக்கையுடன்,
வடிவரசு