நற்தொடக்கம்!

தோழமைகளுக்கு அன்பு வணக்கம்!
‘இணையதளம்’ தொடங்க வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை. அதுவும் எனது எழுத்துகளுக்கான ஓரிடமாக. இதுவரையிலான என் எழுத்துக்களையும், இனிமேலான எழுத்துகளையும் கொண்ட இணையவெளியாக அது இருக்க வேண்டும். உலகின் எம்மூலையில் இருந்தும், யார் வேண்டுமானாலும், எந்நேரத்திலும் எவ்வித தடையுமின்றி வாசிக்கும் வகையில் அவை விளங்க வேண்டும் என்பது ஒருவகையில் என் கனவு என்றே சொல்லலாம். அத்தகைய பெருங்கனவு ஒன்று இதோ இந்நன்னாளில் நனவாகியிருக்கிறது.
என்னதான் இப்படியோர் இணையதளம் ஆரம்பிக்க வேண்டும் என்பது என் நெடுநாள் விருப்பமாக இருந்தாலும், அது இன்னும் வலுபெற அல்லது வேகம்பெற எனது முதல் நூலான ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’தான் காரணம் என்பேன்.
ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி படிக்கும் இளம் வாசகி ஒருவர் ஐயா நூல் குறித்து கேள்விப்பட்டு மிகுந்த ஆசையோடு அதை தன் கையில் ஏந்தி வாசிக்க நினைத்து முகநூலில் என்னிடம், ”அண்ணா, ஐயா புக்க எப்போண்ணா ஆன்லைன்ல இ-புக்கா போடுவீங்க?’’ என்று கேட்டார். அவர் கேட்டது நூல் வெளியான பத்தாவது நாளில். ”தெரியலமா… ஆனா, கண்டிப்பா தாமதமாகும்’’ என்றேன், மிகுந்த வருத்தத்தோடு. ”ஐயா புக்க கைல எடுத்து வாசிக்கணும்னு அவ்ளோ ஆசையா இருக்குண்ணா. ஆனா, நான் இவ்வளவு தூரத்துல இருக்கேன். எப்போ இந்தியா வருவேன்னு தெரியல. இ-புக் இருந்தாலாவது வாங்கி படிக்கலாம்னு நெனச்சேன்’’ என்றார். சங்கடமாகப் போய்விட்டது.
இன்னொரு தம்பி இலங்கையிலிருந்து கூப்பிட்டு தனக்கு ஐயா நூல் ஒரு பிரதி வேண்டும் என்று கேட்டார். அனுப்பி வைத்தேன். உடனே அதற்கான பணத்தை அனுப்பி வைத்தார். நூல் அவர் கைக்கு கிடைத்து ஒருமாதம் இருக்கும். அழைத்தவர், ”நீங்க அனுப்பின புத்தகத்த இதுவரைக்கும் குறைந்தது ஐம்பது பேர் கிட்ட படித்திருப்பாங்க’’ என்றார். ஆச்சரியமாக இருந்தது. ”இங்கே நிறைய பேர்கிட்ட ஐயா புத்தகம் பத்தி சொல்லியிருந்தேன் அண்ணா. எல்லோரும் புத்தகம் வந்ததும் ஒருத்தர் மாற்றி ஒருத்தரா ஒரு நாளைக்கு இரண்டு பேர் கிட்ட படித்திருக்காங்க. அவங்கள மாதிரி படிக்க இன்னும் எவ்வளவோ பேரு ஆசையா இருக்காங்க. என்ன, அவங்களால என்னைய மாதிரி பணம் கொடுத்து புத்தகம் வாங்கிப் படிக்க முடியாது’’. கேட்டதும் என்னிரு விழிகளும் ஒருசேரக் கலங்கிவிட்டது.
இவ்விரு சம்பவங்களும் என்னுள் ‘இனிமேலும் நாம் இணையதளம் தொடங்காமல் இருக்கக்கூடாது’ என்னும் முடிவை மிக உறுதியாக எடுக்க வைத்தது. அப்போதே முடிவு செய்துவிட்டேன். இணையதளத்தின் முதல் கட்டுரையாக அவர்கள் விரும்பிப் படிக்க நினைத்த ஐயா நூலின் முதல் கட்டுரை இருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்டுரைகளாகப் பதிவிட வேண்டும். அதுமட்டுமின்றி என் இதுநாளைய மொத்த எழுத்துக்களையும், வருநாளைய எழுத்துகளையும் ஒன்றுவிடாமல் அங்கே வாசிக்க ஏதுவாக இலவசமாகத் தரவேண்டும். ஆம்!
எனது அம்முடிவின், ஆசையின், கனவின் தொடக்கமாக இவ்விணையதளத்தை (www.vadivarasu.in) இதோ உங்கள் பார்வைக்கு தருகிறேன். வாசிப்பு தாகம் கொண்ட ஒவ்வொருவருக்கும் திகட்டாத சொற்சுரங்கமாக வரும்காலங்களில் இத்தளம் இருக்கும் என்பதே என் மாறா நம்பிக்கை.
மிக்க அன்புடன்,
வடிவரசு