அர்த்த அழகு
விழுந்து விழுந்து
எழுந்தெழுந்து அல்லது
உடைந்திட்ட மனதை தடவியபோது
தவிப்பின் கண்ணாடியாகியிருந்தேன்
ஒட்டமுடியாமல்
ஞானாவை கருப்பலையாகப் பார்த்த வயதில்
ஒளிக்குள் இருளையெல்லாம் தேடாத கண்கள்
கண்ணாறின் மேல் நடந்து மகிழ்ந்த
யாதொரு கவலையுமில்லை
வயது பற்றி
வெள்ளாங்குப் பிடித்து வழுக்கின நொடியில்
விழுந்ததற்குமான தூரத்தை
விரலால் அளந்துமுடித்தபோது
விரலுக்கும் விரலுக்குமிடையில்
விரலும் விரலும் பூத்திருந்தது
இடியில் முளைத்த காளானின்
அர்த்த அழகுடன்