அரம்பு போற்றுதும் – 053 : வெள்ளை வழியில நடங்க

செப்டம்பர் 02, 2026

*

மாலை நான்கு மணிக்கு வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் கிளம்பிச் சென்று மதியை திருசூலத்தில் உள்ள ஓர் அம்மா வீட்டில் மருத்துவம் செய்ய விட்டுவிட்டு, நானும் ஐயும் அங்குள்ள சோழர் கால சிவக்கோயிலுக்குப் போயிருந்தோம்.

சற்றுமுன் வரை நன்கு ஒளிர்ந்துகொண்டிருந்த ஞாயிரோன், திடீரென்று முழுவதுமாக மறைந்து மழை வருவது போல வானம் இருட்டிக்கொண்டு வந்தது.

கோயிலுக்குள் சென்று சிவரையும் அவர்தம் இணையாளையும் முதலில் வணங்கிவிட்டு, உள் பிராகாரத்தை ஒரு சுற்று சுற்றிக்கொண்டு வெளியில் வந்து அங்கிருந்த ஓரிடத்தில் சிறிதுநேரம் உட்கார்ந்திருந்துவிட்டு, எழுந்து வெளிப் பிராகாரத்தில் மெதுவாகச் சுற்றி வந்தோம்.

என் பின்னால் நடந்தபடி அங்கிருந்த மரங்களை எல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வந்தவன் சட்டென்று, ”அப்பா… வெள்ள வழியில நட. அப்பதான் சுடாது’’ என்றான்.

முதலில் அவன் சொன்னது புரியவில்லை. பிறகு விளக்கமாகக் கேட்டுப் புரிந்துகொண்டு (கடந்த வாரம்தான் இதை அவனுக்குச் சொன்னோம்!), அங்கே வெய்யில் நேரத்தில் நடக்கும்போது சுடாமல் இருப்பதற்காகப் போட்டிருந்த வெள்ளை நிறப் பாதையில் நடக்க ஆரம்பித்தேன்.

என்னை ஆற்றுப்படுத்திய மகிழ்வோடு கொஞ்ச தூரம் வந்தவன் மறுபடியும் கூப்பிட்டு, ”அப்பா… அந்தப் பாட்டிய வெள்ள வழியில நடக்க சொல்லு. அப்பதான் சுடாது’’ என்றான்.

அதாவது, எங்கள் பின்னால் வந்த பாட்டியிடம் சென்று வெள்ளை வழியில் நடக்கச் சொல்ல வேண்டும் என்கிறான்.

என்ன கூறுவது என்று தெரியாமல், ”அப்பு… இப்பதான் வெய்யில் அடிக்கவே இல்லயே, தங்கம். அதனால பாட்டிக்கு சுடாது. செரியா…?’’ என்றேன்.

உடனே அடம்பிடிப்பது போல செய்தவன், ”இல்ல… சுடும். போயி சொல்லு’’ என்றான்.

‘இதென்னடா வம்பாப் போச்சி’ என்று அவனிடம் சொன்னேன். ”சரிடா… அப்ப நீயே போயி பாட்டிக் கிட்ட சொல்லு.’’

”இல்ல, அப்பா சொல்லு.”

”மாட்டன்… நீதான் சொல்லணும்.”

”அப்பா சொல்லு.”

”நீதான பாட்டிக்கு சுடக்கூடாதுன்னு அக்கறையா நெனைக்கற. அப்ப நீயே போயி சொல்லு.”

சட்டென்று கோபித்துக்கொண்டவன், வந்த வழியாகவே திரும்பி ஓடத் தொடங்கினான்.

”டேய்… பப்பு, ஓடாதடா. வாடா.’’

பின்னாலேயே நானும் சென்று ஒருவழியாக சமாதானம் செய்து கூட்டி வருவதற்குள் அந்தப் பாட்டி சென்றுவிட்டார்.

‘அப்பாடா, ஒருவழியா தப்பிச்சோம்’ என நினைப்பதற்குள், பின்னால் வந்த இன்னொரு பெண்ணைப் பார்த்துவிட்டு, ”அப்பா… அந்த அத்தைய வெள்ள வழியில நடக்க சொல்லு. அப்பதான் சுடாது’’ என்றான்.

‘சரிதான். இவன் இன்னிக்கி அடி வாங்கி வைக்காம விடமாட்டான்’ என்று நினைத்தபடி, அங்கிருந்து தப்பித்து வர எண்ணி அவனைத் தூக்கிக்கொண்டு இப்படிச் சொன்னேன். ”ஐ பப்பு… அம்மா தெரப்பி முடிச்சிட்டாங்களாம். நம்மள உடனே வர சொல்லிட்டாங்க. வா, போயி கூட்டிட்டு வரலாம்.’’

எதுவும் கூறாமல் அதிசயத்திலும் அதிசயமாக வந்தவன், என்ன செய்கிறான் என்று கோயிலில் இருந்து வெளியேறும் முன்பாகப் பார்த்தேன்.

அவன் பார்வை இன்னமும் அந்த வெள்ளை வழியிலேயே இருந்தது.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=