அரம்பு போற்றுதும் – 050 : ஐக்குறள்

ஆகஸ்ட் 22, 2026

*

ஐக்கு அவ்வப்போது சில முக்கியமான திருக்குறள்களை சொல்லிக்கொடுத்து திரும்பச் சொல்ல வைப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறோம். அவ்வாறு சொல்லிக்கொடுத்தவற்றில் அவன் சிக்கெனப் பிடித்துக்கொண்டு கூறி மகிழ்பவையாக இவ்வைந்தினை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இனிய உளவாக இன்னாத கூறல்

கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று.

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

இந்நிலையில் இன்று மாலை பூங்காவிலிருந்து வரும் வழியில் எப்போதும் போல கேட்டேன். ”ஐ பப்பு, இனிய உளவாக திருக்குறள் சொல்லு, பாப்போம்.’’

அவனும் வழக்கம் போல மகிழ்வுடன், ”இனிய உளவாக இன்னாத கூறல்’’ என்று ஆரம்பித்தவன், சற்றும் எதிர்பாராத வகையில், ”நிற்க அதற்குத் தக’’ என்று முடித்துவிட்டு சத்தமாகச் சிரித்தான்.

வழியில் இருந்த மரங்களை வேடிக்கை பார்த்தபடி கேட்டுக்கொண்டு வந்தவன் சட்டென்று அதிர்ச்சியாகித் திரும்பி, ”டேய்… ஏன்டா மாத்தி சொல்ற. சரியா சொல்லு’’ என்று மறுபடியும் கூறச் சொன்னேன்.

இம்முறை, ”இனிய உளவாக இன்னாத கூறல்’’ என்றுவிட்டு, ”நாவினால் சுட்ட வடு’’ என்று முடித்தான்.

”சரி, துப்பார்க்கு துப்பாய சொல்லு’’ என்றேன்.

உடனே, ”துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு” என்றுவிட்டு, ”நிற்க அதற்குத் தக’’ என்றான்.

”சரிதான். நீ நடத்து மகனே’’ என்றுவிட்டு, அவன் விருப்பப்படி திருக்குறளை ஐக்குறளாகச் சொல்லவிட்டு, இரு கண்களையும் நொடி நேரம் மூடி ஐயன் வள்ளுவரிடம், ‘ஒன்றுமறியா இப்பிஞ்சை மன்னித்தருளுமாறு’ மனத்தார வேண்டிக்கொண்டேன்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=