அரம்பு போற்றுதும் – 049 : ஞாயிறு தாத்தா லைட்டு மாரி வந்திருக்காரு

ஆகஸ்ட் 19, 2026

*

பிற்பகல் மூன்று மணி இருக்கும். மதிய உணவு உண்டுவிட்டு எங்களுடன் அறைக்குள் விளையாடிக்கொண்டிருந்த ஐ, எதையோ எடுத்து வருவதற்காக ஹாலுக்குப் போனான்.

அப்போது முன் கதவு வழியாக வீட்டுக்குள் வந்த ஞாயிறொளி, தரையில் பட்டு எதிரொளித்து மேலே கூரையில் தெரிவதைப் பார்த்துவிட்டு வியப்புக் குரலில், ”அப்பா… இங்க வா. அப்பா… இங்க வா’’ என்று கூப்பிட்டான்.

”என்னடா, பப்பு?” என்று கேட்டபடி உடனே நானும் எழுந்து போனேன்.

”அங்கப் பாரு… அங்கப் பாரு…” என்று ஆச்சர்யத்துடன் காட்டியவன், ”ஞாயிறு தாத்தா… லைட்டு மாரி வந்திருக்காரு’’ என்றான்.

பார்த்துவிட்டு, ”வாவ்… ஆமாம்டா பப்பு’’ என்றேன்.

சட்டென்று ஓடிப்போய் உள்ளே படுத்திருந்த மதியை, ”அம்மா வா… அம்மா வா…’’ என்று அதே வியப்புடன் கூட்டி வந்து காட்டினான்.

‘அடுத்து என்ன செய்யப் போகிறான்?’ என்ற ஆவலோடு காத்திருந்த என்னிடம், ”அப்பா லைட்டு போடு’’ என்றான்.

‘எதற்கு?’ என்பது போல முகத்தைக் காட்டிக்கொண்டு, ”ஏன்டா பப்பு….?’’ என்று கேட்டேன்.

உடனே சொன்னான். ”லைட்டுப் போட்டுக் களைக்கலாம்.’’

அதாவது, மின் விளக்கைப் போட்டு ஞாயிறோனின் ஒளி விளக்கை களைக்கலாம்; அழிக்கலாம் என்கிறான்.

‘சரிதான்’ எனக் கூறிக்கொண்டு ஒன்றும் பேசாமல் போய் மின் விளக்கைப் போட்டேன். அப்போதும் ஞாயிறொளி பளிச்சென ஒளிர்வதைப் பார்த்துவிட்டு புரியாதவனாய் சோகக் குரலில், ”அப்பா களையவே மாட்டுது’’ என்றான்.

”ஆமாம்டா களையல.’’

”லைட்டு ஆப் பண்ணு.’’

செய்தேன்.

”அப்பா…”

”என்னடா…?”

”சேர் வச்சி ஏறி களை.’’

‘ரைட்டு. பயப்புள்ள வசமா சிக்க வச்சிட்டானே’ என்று நினைத்துக்கொண்டு திரும்பி மதியைப் பார்த்தேன். அவளோ, ‘தனக்கும் அங்கே நடப்பதற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை’ என்பது போல வேறு எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தாள்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=