அரம்பு போற்றுதும் – 047 : மரம் என்ன பண்ணுது?

ஆகஸ்ட் 06, 2026

*

மாலை ஐந்து மணி இருக்கும். ஐ உறங்கி எழுந்ததும், ஒரு மாற்றத்திற்காக இன்று அவனை வேறு வழியில் அருகில் இருக்கும் பூங்காவுக்குக் கூட்டிப் போனேன்.

சற்று நேரம் ஒன்றும் பேசாமல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வந்தவன், சாலையோரமாக நின்றிருந்த முதியவரைக் காட்டி, ”அப்பா… தாத்தா என்ன பண்றாங்க?’’ என்று கேட்டான்.

உடனே நான், ”தாத்தா… சும்மா நின்னுட்டு இருக்காங்க, பப்பு’’ என்றேன்.

சற்று தள்ளி இருந்த கடையின் முன்பாக படிக்கட்டில் உட்கார்ந்திருந்த இளைஞரைக் காட்டி, ”மாமா என்ன பண்றாங்க?’’ என்று கேட்டான்.

”மாமா, உட்கார்ந்து யார் கூடயோ ஃபோன் பேசிட்ருக்காங்க.’’

அடுத்ததாக தனது குழந்தையை பள்ளியில் இருந்து கூட்டிவந்த பெண்மணியைப் பார்த்து, ”அத்த என்ன பண்றாங்க?’’ என்று கேட்டான்.

சொன்னேன்.

இப்படியே வழிநெடுக ஒவ்வொன்றாகப் பார்த்துக் கேட்டுக்கொண்டு வந்தவன், இறுதியாக பூங்கா வாயில் அருகில் புல் மேய்ந்துகொண்டிருந்த கருப்பு மாட்டைக் காட்டி, ”மாடு என்ன பண்ணுது?’’ என்று கேட்டான்.

அதையும் சொன்னேன்.

‘அப்பாடா… பூங்கா வந்துவிட்டது. இவன் கேள்விப் படலம் இத்தோடு முடிந்தது’ என்று நினைத்துக்கொண்டு மகிழ்வுடன் போய் அவனது விருப்ப ஊஞ்சலில் உட்காரவைத்தேன்.

எப்போது உட்கார வைத்தாலும் பெருத்த உற்சாகமாகி தன்மறந்து நேரம் போவதே தெரியாமல் விளையாடிக்கொண்டிருப்பவன், இன்று அதிசயத்திலும் அதிசயமாக உடனே, ”ஊஞ்சல் வேணாம்’’ என்று சொல்லி கீழே இறங்கி, பக்கத்தில் இருந்த அரச மரத்தைச் சுட்டி, ”அப்பா… மரம் என்ன பண்ணுது?’’ என்று கேட்டான்.

‘ரைட்டு. அப்ப இன்னிக்கு இவன் பூங்காவுக்கு விளையாட வரல’ என்று கூறிக்கொண்டு அவன் அடுத்தடுத்துத் தொடுக்கப்போகும் கொத்துக் கொத்தானக் கேள்விகளுக்கு சுடச்சுட பதில் அளிக்க ஒருசேரத் தயாராகத் தொடங்கினேன்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=