அரம்பு போற்றுதும் – 045 : கொண்ணா

ஜூலை 30, 2026

*

மாடியில் பாய் போட்டு உட்கார்ந்துகொண்டு, இரவு உணவு ஊட்டுகையில் எப்போதும் போல கதைகள் சொல்லக் கேட்டான் ஐ.

முதலில் ‘பெரிய கரடி மாமா’ கதையை ஆயிரத்தி நான்காவது தடவையாகக் (அதற்கும் மேலே கூட இருக்கலாம்) கேட்டவன், தொடர்ந்து தினந்தினம் அலுப்பே இல்லாமல் கேட்டுக் கேட்டு மகிழும் ஆட்டோ மாமா கதை, பைக் மாமா கதை, புதுப் போத்தல் கதை, பெரியக் கடை கதை, மெட்ரோ ரயில் கதை… முதலானவற்றை வரிசையாகக் கேட்டு ரசித்துக்கொண்டிருந்தான்.

இவற்றிலிருந்து இன்று எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று முடிவெடுத்து, ”ஏன் பப்பு… எப்பப் பாரு, கேட்டக் கதையையே கேட்டுட்டு இருக்க? புதுசா எதுனாக் கேளு… அப்பா, சொல்றன்’’ என்றேன்.

உடனே நான் சொன்னதை காதில் வாங்காதவனாய், சற்று தள்ளி இருந்த பெரிய தண்ணீர்த் தொட்டியை இருநூறாவது தடவையாகக் காட்டி, ”அது கத வேணும்’’ என்றான்.

”அதுன்னா, எது?’’

”அது…?’’

”அதான், அதோட பேரு என்ன?’’

”கொண்ணா.’’

”டேய்… ஆரம்பிச்சிட்டியா ஒன் கொண்ணாவ? இரு, மொதல்ல ஒன் கொண்ணாவுக்கு இன்னிக்கோட ஒரு முடிவு கட்றன்’’ என்று சொல்லிவிட்டு, அவன் குறிப்பிட்ட இடத்தில் இருந்த தொட்டியைக் காட்டி, ”அந்தத் தொட்டிக் கதை வேணாம். இன்னிக்கு உனக்கு இதுவரைக்கும் சொல்லாத… கொண்ணாக் கத சொல்றன்’’ என்றேன்.

இதனை சற்றும் எதிர்பாராதவன் சட்டென்று முகம் மாறி, ”வேணாம்’’ என்றான்.

”ஏன், பப்பு?” என்று கேட்டேன்.

”வேணாம்.”

”அழகா; சூப்பரா சொல்றன், பப்பு.’’

இம்முறை அடம் பிடிக்கும் குரலில், ”வேணாம்’’ என்றான்.

”சரி, உனக்கு இப்ப அந்தத் தொட்டிக் கதைதான வேணும். இரு, சொல்றன்’’ என்றுவிட்டு சொன்னேன்.

”ஒருநாளு… ஐ பாப்பா, அப்பா, அம்மா மூணு பேரும் மாடியில பாய் போட்டு உக்காந்து சாப்பிட்றப்போ… ஐ பாப்பா, ‘அந்தத் தொட்டிக் கத வேணும்’னு கேட்டான். உடனே அப்பா, ‘தொட்டிக் கதை வேணாம்… கொண்ணாக் கதை சொல்றன்’னு சொன்னாங்க. அதுக்கு ஐ பாப்பா, ‘வேணாம்’னு சொன்னான். திரும்பவும் சொல்லிப் பாத்தாங்க. அப்பவும் அவன், ‘வேணாம்’னு சொன்னான். ‘சரி, நீ கேட்ட தொட்டிக் கதையே சொல்றன்’னு சொல்லி… தொட்டிக் கதைக்குப் பதிலா கொண்ணாக் கதைய சொன்னனாங்க, அவங்க அப்பா. அப்போ… ஐ பாப்பாவும், அப்பா தொட்டிக் கதைதான் சொல்றாங்கன்னு நெனச்சி… கொண்ணாக் கதையக் கேட்டுட்டு இருந்தான். அப்புறம் ஒரு கட்டத்துல அவனுக்கு, ‘நாம இப்போ கேக்கறது தொட்டிக் கதையா… இல்ல, கொண்ணாக் கதையா?’ன்னு சந்தேகம் வந்து… ஒண்ணும் புரியாம, அவங்க அப்பாவயும் அம்மாவயும் மாத்தி மாத்திப் பாத்தான். அப்போ… அவங்க அப்பா என்ன பண்ணாங்க, தெரியுமா? அந்த ஐ பாப்பாவ, மாடியில பாய் போட்டு ஒக்கார வச்சி… பால் தோசை ஊட்டிட்டு இருந்தாங்க. அப்ப அவன்… அவங்க அப்பாக்கிட்ட, ‘தொட்டிக் கத வேணும்’னு கேட்டான். அதுக்கு அவங்க அப்பா, ‘தொட்டிக் கதை சொல்றன்னு சொல்லிட்டு… ஒரு கத சொன்னாங்க.’’

இவ்வாறு நடந்ததை அப்படியே ஒரு கதை போல விவரித்துச் சொல்லிவிட்டு, அவன் முகம் நோக்கிக் கேட்டேன். ”அது என்னக் கதைன்னு சொல்லு, பாப்போம்?’’

உடனே, ”கொண்ணா’’ என்றான்.

‘அவன் கதையின் பெயரைச் சொன்னானா… இல்லை, தனக்குத் தெரியாது என்று பதில் சொன்னானா?’ என நானும் கேட்கவில்லை. மதியும் கேட்கவில்லை. ஆனால், மனத்துள் பலமாக சிரித்துக்கொண்டோம்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=