அரம்பு போற்றுதும் – 052 : வடிவங்கள் தோசை

ஆகஸ்ட் 29, 2026

*

”நான் கொஞ்சம் நேரம் படுத்துட்டு இருக்கன். நீங்க போய் மூணு பேருக்கும் தோச ஊத்திட்டு வாங்க’’ என்றுவிட்டு மதி ஓர் ஓரமாக தலையணை வைத்துப் படுத்துக்கொண்டாள்.

நானும், ”சரி” என்றுவிட்டுப் போய் அடுப்பு பற்றவைத்து தோசை ஊற்ற ஆரம்பித்தேன்.

எனக்கும் மதிக்கும் சேர்த்து முதலில் எட்டு தோசை ஊற்றிவிட்டு, அடுத்து ஐக்கு இரண்டு தோசை ஊற்ற மாவு எடுத்தேன்.

சரியாக அந்நேரம் பார்த்து சமையலறைக்குள் ஓடிவந்து பின்னால் கட்டிக்கொண்டவன், ”அப்பா… என்ன பண்ற…?’’ என்று கேட்டான்.

சொன்னேன்.

உடனே, ”அப்பா… ஐ பப்பாவுக்கு திங்கள் பாட்டி மாரி தோச வேணாம்’’ என்றான்.

”ஏன்டா பப்பு?’’

”ஐ பாப்பாவுக்கு வடிவங்கள் தோச வேணும்.’’

”என்னது, வடிவங்கள் தோசையா…?’’

”ஆமாம்.”

”சரிடா தங்கம்… நீ போய் விளையாடிட்டு இரு. அப்பா ஊத்தி எடுத்துட்டு வர்றன்” என்றுவிட்டு, கட்டம், செவ்வகம், வட்டம், முக்கோணம், அரை வட்டம், ஐங்கோணம்… என அவன் விளையாட வைத்திருந்த வடிவங்களில் இருக்கும் பதினாறு வடிவத்திலும் சிறு சிறு தோசைகளாக ஊற்றி எடுத்துக்கொண்டு வந்தேன்.

ஆர்வத்தோடு வந்து பார்த்தவன், மகிழ்ச்சியில் என்ன சொல்வதென்று தெரியாமல் ஓடிப்போய் அவன் விளையாடும் வடிவங்களை எடுத்து வந்து பக்கத்தில் வைத்து, அதில் இருக்கும் எல்லா வடிவங்களிலும் தோசை சரியாக இருக்கிறதா என்று ஒரு தடவை சோதித்துவிட்டு, ”அப்பா’’ என்றான், இனிக்கும் குரலில்.

”என்ன தங்கம்.’’

”இது இல்ல.’’

”எது சாமி…?’’

என் விரலைப் பிடித்துத் தொட்டுக் காட்டி, ”இது’’ என்றான்.

அதாவது, அந்த வடிவங்களை எல்லாம் அடுக்கி வைத்து விளையாடும் பெரிய கட்ட வடிவிலான பலகை இல்லையாம்!

‘சரிதான், மகனே’ என்று நினைத்துக்கொண்டு, மேற்கொண்டு அவனிடம் எதுவும் பேசாமல் (வேறு வழி இல்லாமல்) வெறுமே ‘சரி’ என்று மட்டும் தலையாட்டிவிட்டுப் போய் மறுபடியும் பெரிய கட்ட வடிவிலான தோசை ஒன்றை ஊற்ற ஆரம்பித்தேன்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=