மலையாற்றுப்படை – 7 : கைலாசகிரி (வேலூர்)

”மலையின் வளைவும், புடைப்பும் பிரபஞ்ச சக்திகள் உருவாக்கியவை. ஆயிரமாயிரம் இயற்கை நிகழ்வுகள் மூலம் உருவாக்கப்பட்டவை. ஆகையால்தான் மனிதரால் ஒருபோதும் உருவாக்க முடியாத ஒன்றாகவே மலைகள் காலந்தோறும் இருந்து வருகின்றன.’’

                                                (ஜூலை 25, 2026)

                                                             ***

மலையாற்றுப்படை – 7 : கைலாசகிரி (வேலூர்)

வேலூர் மாவட்டத்தில் – வேலூர் மாநகரின் அருகில் உள்ள ஊசூர், சிவநாதபுரம் கிராமங்களை ஒட்டி உள்ளது கைலாசகிரி மலை. இம்மலை குறித்து அதன் அருகமை கிராமமான மேல்மணவூரைச் சேர்ந்த நண்பர் லோகேஷ் சொல்லக் கேட்டு, உடனே அதனை மலையாற்றுப்படை பட்டியலில் சேர்த்துக்கொண்டு அடுத்த மலையாக ஏறிட, நண்பர் ராமுடன் ஓர் இனிய முற்பகல் வேளையில் வெய்யிலோடு போயிருந்தேன்.

கைலாசகிரி மலை ஐந்தாயிரம் அடி உயரம் என்று இணையத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. நண்பரும் அதையேதான் சொன்னார். மலையைப் பார்த்ததும் நிச்சயம் மூவாயிரம் அடிக்குள்தான் இருக்கும் என்று உறுதியாகத் தோன்றியது.

ஸ்ரீபுரம் பொற்கோயில் அமைந்துள்ள திருமலை கோடியிலிருந்து வடக்கு தெற்காக நீண்டிருக்கும் கம்பீரமான மலைத் தொடரான கைலாசகிரி மலையில் ஏற இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று, திருமலைக் கோடியில் இருக்கும் ஒரு குன்றில் உள்ள முருகன் கோயிலுக்குப் போகும் பாதையைக் கடந்து முற்காலத்தில் அமைக்கப்பட்ட குதிரை வழிப் பாதை. இரண்டு, சிவநாதபுரம் ஒட்டிய மண் பாதையில் சென்று ஏறக்கூடிய வழி.

‘முன்னது எளிதாக இருக்கும். ஆனால், நீண்ட நேரம் பிடிக்கும். பின்னது கடினமானது. ஆனால், குறைந்த நேரத்தில் ஏறிவிடலாம்’ என்று நண்பர் அறிவுறுத்தியதால் பின்னதை தேர்வு செய்தோம்.

இம்முறை எங்களோடு லோகேஷின் ஊர்க்காரரான ஞானமூர்த்தி துணையாக இணைந்துகொண்டார். மூவருமாக ஊசூரில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சிவநாதபுரம் ஒட்டிய மண் பாதை வழியாகப் போய் மலையடியை அடைந்தோம்.

அங்கே எங்களை வரவேற்கும் விதமாக அழகான பெரிய திமிலுடன் கூடிய காளை ஒன்று நின்றிருந்தது. கண்டதும் என்னறியாமல் அப்பர் தம் தேவாரத்தில் காளையின் திமிலை தமிழ் எழுத்துரு ‘ங’வுடன் உவமித்துப் பாடிய, ‘ஙகர வெல் கொடியானொடு நல் நெஞ்சே நுகர நீ’ வரிகள் நினைவுக்கு வந்தன.

உடனே அதனை எனக்கு மட்டும் கேட்கும் குரலில் மனத்துள் மீள மீளப் பாடிக்கொண்டு, வழியில் விழுந்து கிடந்த இரு பனம் பழங்களை ஆளுக்கொன்றாக எடுத்து ஓரமாகப் புதருக்குள் முளைத்து வர ஏதுவாகப் போட்டுவிட்டு, அடுத்து வந்த வேப்ப மரத்தின் தாழ் கிளையில் இலைகளுக்கு நடுவே பொன் போல மிளிர்ந்துகொண்டிருந்த கனிகளில் ஐந்தைப் பறித்து, ‘வேம்பின் ஒண் பழம்’ என்ற சங்க வரிகளை நினைத்தபடியும், அதற்கடுத்து வந்த புதர்களில் படர்ந்து காய்த்துப் பழுத்திருந்த ஊளமூக்குப் பழம் என்னும் மூக்குச்சளிப் பழங்களில் சிலவற்றைப் பறித்து சிறுவயது நினைவுகளை மீட்டியபடியும் உண்டுகொண்டு போய் மிதமான வேகத்தில் மலை ஏற ஆரம்பித்தோம்.

தொடக்கத்தில் வேம்பும் துரிஞ்சியும் காரையும் சூரையும் அதிகமாகத் தென்பட்டாலும், ஒரு கட்டத்துக்கு மேல் மஞ்சம் புல் மிகுதியாகப் புலப்பட ஆரம்பித்தன. அதிலும் மேலதிகம் அண்மையில் எரிந்துபோனவை. கேட்காமலேயே உடன் வந்தவர் சொன்னார். ”யாரோ மலைக்கு வந்தவங்க… பீடி குடிச்சிட்டு பத்த வச்சிருக்காங்க. இதுமாதிரி அடிக்கடி இங்க நடக்கும்.’’

வெறுமே தலையாட்டிக் கேட்டுக்கொண்டு நடந்தோம். வழி நெடுக ஆங்காங்கே உள்ள கற்களிலும், பாறைகளிலும் செல்ல வேண்டிய பாதையைக் காட்ட அம்புக்குறி வரைந்திருந்தார்கள். அப்படி இருந்தும் ஓரிடத்தில் வழி தவறிப் போய் பிறகு ஒருவாறு கண்டு இணைந்துகொண்டோம்.

மலையேற்றத்தில் அதிக இடங்களில், மிகுதியான நேரம் அமரக்கூடாது என்பதை முக்கிய விதியாக வைத்திருக்கிறோம். ஏனெனில், அது மலையேற்றத்தை மட்டுப்படுத்துவதோடு, அது தரக்கூடிய உவகையை; களிப்பை அரவே இல்லாது ஆக்கிவிடும். ஆகையால் எங்கும் உட்காராமல் மிதமான வேகத்தில் ஏறிச் சென்று, வழியோரம் இருந்த இரண்டாகப் பிளந்த பாறை அருகில் உள்ள சப்பாத்திச் செடியைப் பார்த்துவிட்டு, அதில் பூத்திருந்த சிறு மஞ்சள் நிறப் பூவை மிகுந்த மகிழ்வுடன் தொட்டு வருடிவிட்டு நண்பரிடம் கேட்டேன். ”நீங்க சப்பாத்திப் பழம்லாம் சாப்பிட்டிருக்கீங்களா, சகோ?’’

உற்சாகத்தோடு தலையாட்டி, ”சின்ன வயசுல சாப்பிட்டதுதான், சகோ’’ என்றுவிட்டு சொன்னார். ”இப்போ இருக்க சிறுவர்கள்லாம் மதிக்கவே மாட்றாங்க. அதோட, இதுமாதிரி காட்டுல கிடைக்குற கார, சூர, பூலா, கெலா எதையுமே பெருசா விரும்ப மாட்றாங்க.’’

உள்ளூர் நண்பரும் தனது பங்குக்குச் சிலவற்றைக் கூறிவிட்டு, மலை குறித்து தான் அறிந்ததையெல்லாம் வரிசைபடச் சொன்னார். ”இந்த மலை மேல ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி இருந்தே சிவன் கோயில் இருக்கறதா சொல்வாங்க. அது தவிர, பல குகைகள்ல லிங்கங்கள் இருக்கறதாவும், அதை கண்ணுக்குத் தெரியாத சித்தர்கள் எப்போவும் வணங்குறதாவும் சொல்வாங்க. வேலூர் சுத்தி இருக்க மலைகள்லயே இதுதான் உயரமானது. அதனாலதான் அந்தக் காலத்துல மன்னர்கள் வந்து கோட்டை கட்டியிருக்காங்க. அப்போ நிறைய தங்கத்த மறைச்சி வச்சதாவும்… அதனால இந்த மலைக்கு வர்றவங்கள்ல முக்காவாசி பேரு புதையல் எடுக்க வர்றதாவும் சொல்வாங்க. அப்படி வந்தவங்க இதுவரைக்கும் எடுத்தாங்களா, எவ்வளவு எடுத்தாங்க எதுவும் தெரியாது. ஆனா, இன்னமும் இருக்கறதா மட்டும் சொல்றாங்க. அதோட, கீழே கட்டியிருக்காங்களே தங்கக்கோயில்… அதுகூட இங்க இருந்து எடுத்துட்டுப் போன தங்கத்துலதான் கட்டினா பேசிக்கிறாங்க.’’

மேலும் சொன்னார். ”இந்த மலையோட சிறப்புன்னா… உச்சியில இருக்க சுனையில எப்போவும் தண்ணீர் வற்றாது. அதோட, மூலிகைகள் நிறைய இருக்கறதாவும், வேற எங்கேயும் இல்லாத சில அரிய தாவரங்கள் கூட இங்கே உள்ளதாவும் சொல்வாங்க.’’

மலையேற்றத்தின்போது அதிகம் தண்ணீர் அருந்தக்கூடாது என்பதை எப்படி கொள்கையாக வைத்திருக்கிறோமோ, அதுபோலவே தேவையற்ற சுமைகள் எதையும் தூக்கிக்கொண்டு செல்லக்கூடாது என்பதிலும் மிக உறுதியாக இருக்கிறோம். ஆகையால் இருவருக்கும் சேர்த்து மொத்தமாக ஒரே ஒரு போத்தல் தண்ணீர், பசித்தால் உண்பதற்கு சிறிதளவு திராட்சைப் பழம் மட்டுமே எடுத்துப் போனோம்.

ஆனால், உடன் வந்தவர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஐந்து பேர் சாப்பிடும் அளவுக்கு உணவும், நீரும் கொண்டு வந்திருந்தார். கூடவே, அவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை வேறு சரியில்லாமல் இருந்திருக்கிறது. அதையும் எங்களிடம் கூறவில்லை.

ஒரு கால்வாசி மலை ஏறியிருப்பார். மூச்சு வாங்களோடு மயக்கமும் வருவதாகச் சொல்ல, ‘இதற்கு மேல் ஏறினால் ஆபத்துதான்’ என்று உணர்ந்து அவரை கட்டாயப்படுத்தி அங்கேயே ஓரிடத்தில் நிழலில் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு, நாங்கள் மட்டும் ஏறினோம்.

ஆரம்பத்தில் சற்று எளிதாக இருந்த பாதை போகப் போக கரடுமுரடாகவும், முட்செடிகள் நிறைந்ததாகவும், சில இடங்களில் மிக செங்குத்தாகவும் மாறத் தொடங்கியது. மாதந்தோறும் ஒரு மலை ஏறி வருவதாலும், தினந்தோறும் குறைந்தது சில கிலோமீட்டர் தூரமாவது நடப்பதாலும் மலையேற்றம் ஒன்றும் அவ்வளவு கடினமாக இல்லை.

எனினும் பொழிந்த கடுமையான வெய்யிலால் அதுவும், வழியெங்கும் இருந்த புற்களும், சிறு செடிகொடிகளும் முற்றாக எரிந்துபோய், அதனால் மற்ற தாவரங்களின் இலைகளும் பொசுங்கி நிழலும் காற்றும் இல்லாமல் இருந்ததால் சற்று அசெளகிரியத்தை உணர்ந்தோம்.

அதுவும் சிறிது நேரம்தான். பாதி மலைக்கு மேல் எரிந்துபோகாமல் இருந்ததால், விதவிதமான தாவரங்களை பார்க்க முடிந்தது. குறிப்பாக, காட்டுப் புங்கை, பூலா, காரை, சூரை, வேம்பு, மூங்கில், எட்டி, ஆவாரை, கள்ளி, வெப்பாலை, அவிஞ்சி.

யாரோ சிறு சிறு மூங்கில் கழிகளை அதுவும், நேர்த்தியாகப் பார்த்து வெட்டி வழியில் ஆங்காங்கே போட்டுப் போயிருந்தார்கள். கண்டுவிட்டு நண்பர், ”யாரோ இருக்காங்க, சகோ’’ என்றார்.

’’ஆமாம்’’ என்றுவிட்டு, அடுத்து வந்த பாறை ஒன்றில் சிறிது நேரம் உட்கார்ந்து வேலூர் மாவட்டம் குறித்தும், அங்கே ஓடும் புகழ்பெற்ற பாலாறின் இன்றைய பரிதாப நிலை பற்றியும் பேசிக்கொண்டிருந்துவிட்டு மறுபடியும் ஏற ஆரம்பித்தோம்.

அப்போது இடது பக்கமாக முது கள்ளி மரம் ஒன்றின் மீது ஆதண்டை கொடி படர்ந்திருப்பதை எதேச்சையாகப் பார்த்துவிட்டு நின்று, அதில் எங்கேனும் காய்கள் இருக்கிறதா? என்று தேடிப் பார்த்தேன். ஒரே ஒரு காய் மட்டும் கண்ணில் பட்டது. அதுவும், கைக்கு எட்டாத உயரத்தில் மிகச் சிறியதாக இருந்தது.

‘சரி, இருக்கட்டும்’ என்று பறிக்க முற்படாமல் விட்டுவிட்டு, சிறுவயதில் ஐயாவோடும், அண்ணன்களோடும் சென்று எங்களூர் மலைகளிலும், கல்லாக்குட்டைகளிலும் பறித்துவந்து துண்டு துண்டாக வெட்டிக் காயவைத்து ஆடி மாதப் பிறப்பன்று எண்ணெயில் போட்டு வறுத்து கஞ்சியுடன் கடித்துக்கொண்டது முதல் ஆதண்டையைத் தலத் தாவரமாகக் கொண்ட தமிழகத்தின் ஒரே கோயிலான பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில் வரைக்குமான ஆதண்டை குறித்த நினைவுகளை மனத்துள் அசைபோட்டபடி தொடர்ந்து கரடு முரடான பாதை வழியாக ஏறினேன்.

வெய்யில் மேலும் மேலுமாக அதிகரித்து, ஒருகட்டத்தில் வானிலிருந்து அப்படியே மொத்தமாகக் கொட்டுவது போல கொளுத்திக்கொண்டிருந்தது. லேசானக் காற்று ஒருபக்கம் வீசினாலும் அது போதாமல் வேர்வை வழிய ஆரம்பித்தன.

செங்குத்தாக ஏறிச்சென்ற பாதை சட்டென்று சமதளம் ஆனது. அதிலும் இடது பக்கமாக இருந்த பெரிய பெரிய பாறைகளையும், அதன் நடுவில் இருக்கும் வெடிப்புகளையும், அதனுள் செல்லும் குகை போன்ற அமைப்புகளையும் பார்த்துக்கொண்டு, இன்னும் சிறிது தூரம் போனதும் அங்கே வலது பக்கமாக ஒரு பாறையில் புடைச் சிற்பமாக ஆஞ்சநேயர் கோயில் ஒன்று இருந்தது.

செருப்பை ஓரமாகக் கழட்டிவிட்டுப் போய் வணங்கிவிட்டு, அருகில் இருந்த சிறு பாறையின் மீது ஆசுவாசமாக உட்கார்ந்து சுற்றிலும் பார்த்தோம். முன் தினம் வந்து யாரோ பூஜை செய்துவிட்டுப் போனதற்கான தடயமும், சற்று தள்ளி புதரில் சாப்பிட்டுப் போட்ட உணவுப் பொட்டலங்களும் இருந்தன.

மேலும் அந்த இடத்தை ஒட்டி பெரிய குளம் ஒன்று வெட்ட முயன்று பாதியில் கைவிட்டதற்கான அடையாளம் தெரிவதை நண்பர் சுட்டிக் காட்டிவிட்டு, ஊரில் இருந்து வாங்கி வந்திருந்த திராட்சைப் பழத்தைப் பிரித்துக் கொடுத்தார்.

அப்படியோர் இடத்தில் அதுவும், மலையேற்றத்துக்கு நடுவில், கொளுத்தும் வெய்யிலுக்கு இதமாக நிழலில் ஒதுங்கி உட்கார்ந்திருந்த நேரத்தில் அத்திராட்சைப் பழம் ஒவ்வொன்றும் அத்தனைச் சுவையாக இருந்தன. சில நிமிடங்கள் அங்கேயே அமர்ந்து தின்றபடி பேசிக்கொண்டிருந்துவிட்டு, எழுந்து உச்சி மலை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

ஓர் ஐம்பது அடி சென்றிருப்போம். திடீரென்று ஒரு விந்தையான ஓசையுடன் பெரிய பறவை ஒன்று பாதை ஒட்டியிருந்த பாறையிலிருந்து சிறகை விரித்து எழும்பி, மரக் கிளைகளுக்கு இடையில் நுழைந்து பறந்துபோய் சிறிது தொலைவில் இருந்த பெரிய கல்லின் மீது உட்கார்ந்தது.

முதலில் கழுகு என்றுதான் நினைத்தோம். ஆனால், அது அங்கே சென்று உட்கார்ந்து எங்களை நோக்கி கண்கள் உருளப் பார்ப்பதை கண்டதும்தான் அளவில் பெரிய ஆந்தை என உறுதி செய்தோம்.

”ஆந்தைக்குதான் பகல்ல கண்ணுத் தெரியாதே… அது எப்படி சகோ, சரியா நம்மளப் பாக்குது?’’ நண்பர் கேட்டார்.

”கண்ணு தெரியலனாலும்… நம்மப் பேச்சுக் குரலை வைத்து பார்க்கும் நினைக்கிறேன், சகோ’’ என்றேன்.

ஆந்தை அத்தனைப் பெரிதாக இருக்கும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. அதுவும், உருண்டு தட்டையாக உள்ள முகமும், திரண்ட கண்களும், பருத்த தலையும், தடித்த இறகுகளும், வளைந்து கூராக உள்ள நகங்களும் சுமார் நாற்பதடி தூரத்தில் இருந்தும் அத்தனைத் தெளிவாகத் தெரிந்தன.

சட்டென்று ஒருவித அச்ச உணர்வு உண்டானது. கூடவே, பகலில் மரப் பொந்துகளிலும், சுவரிடுக்குகளிலும், பாழிடங்களிலும் மறைவாக வதிந்து, இரவில் வெளிப்பட்டுக் கூச்சலிட்டு இரை தேடும், தனது கண்களில் மந்திர ஆற்றல் கொண்ட இருட்புள் வகைகளுள் ஒன்றான ஆந்தை குறித்து, ‘ஆந்தை யடியுறை எனினே’ (புறம் 67), ‘மன்னெயி லாந்தையும்’ (புறநா.71-1), ‘மன்ற முதுமரத்து ஆந்தை குரலியம்ப’ (ஐந்.எழு.) என்றெல்லாம் பழந்தமிழ் இலக்கியங்களில் பாடப்பட்டுள்ள வரிகளும், ‘ஆந்தை சிறிது, கீச்சுப் பெரிது’, ‘ஆந்தை பஞ்சையாயிருந்தாலும் சகுனத்தில் பஞ்சையில்லை’ போன்ற பழமொழிகளும், ஆந்தையில் ஆந்தை தவிர்த்து… ஊமன், கூகை, குடிஞை, பகண்டை, நத்து, பிங்கலை, குரால், ஊளி, ஆண்டலை முதலான இனப்பெயர்கள் இருப்பதும், உலகில் ஆந்தையினத்தில் மட்டும் சுமார் 130 வகைகள் உள்ளதும், அவற்றுள் வடிவில் சிறியவை மரப் பொந்திலும், பெரியவை தரையிலும் தங்குவதும், எலிகளை அழிப்பதால் மக்களுக்கு நண்பனாக அவை கருதப்படுவதும், ஆந்தை கூவினால் நன்மை தீமை இரண்டும் உண்டு என நம்பப்படுவதும் வரிசையாக நினைவுக்கு வந்தன.

இவ்வளவு நேரமாக உயரம் குறைந்து காணப்பட்ட தாவரங்கள், ஆஞ்சநேயர் கோயிலுக்குப் பிறகு உயரம் மிகுந்து இருந்ததைக் கண்டோம். அதோடு, தரை தளத்தில் மட்டுமே அதிகம் காணப்படும் நுனா, பொர்ச முதலான உறுதியான மரங்களும், ஞானா, காட்டு மல்லி, செங்காந்தல் முதலான செடி கொடிகளும் கண்ணில் படத் தொடங்கின.

தொடர்ந்து மிதமான வேகத்தில் நடந்தாலும், அவ்வப்போது கண்டுவிட்டு வந்த ஆந்தையின் பேருரு நினைவு வந்து திரும்பிப் பார்த்துக்கொண்டு வந்தோம். சட்டென்று இடது பக்கமாக ஓரிடத்தில் அதுவும், பெரும் மரம் செடிகொடிகளுக்கு மத்தியில் மலையின் உதக்குப் பக்கத்தில் இருந்து தெற்குப் பக்கம் நோக்கி வரும் குதிரைப் பாதை மிக மெல்லிதாகத் தெரியக் கண்டு அதிலும், அதனை உறுதி செய்யும் விதமாக ஓரிடத்தில் தூரத்தைக் குறிக்கும் விதமாக நடப்பட்டிருந்த தூரக் கல்லை பார்த்துவிட்டு, முன்னால் சென்றுகொண்டிருந்த நண்பரை கூப்பிட்டுக் காட்டினேன்.

பயன்பாட்டில் இல்லாத அந்தப் பாதை முற்றாகப் புதர்களும், முட்களும் நிறைந்திருப்பதை பார்த்துக்கொண்டு, வழியில் ஓரிடத்தில் கீழே உதிர்ந்திருந்த இலைச் சறுகுகள் முழுக்க செந்நிற முசுடு (எறும்பு வகை) இருப்பதை கண்டுவிட்டு மேலே அண்ணாந்து பார்த்தேன். அது என்ன மரம் என்று தெரியவில்லை. ஆனால், அது ஒரு பால் மரம் என்பது மட்டும் உறுதியாகத் தெரிந்தது. கூடவே, அதன் கிளைகளில் ஆங்காங்கே முசுடுகள் இலைகளை இணைத்துக் கூடு கட்டியிருப்பதும் தெரிந்தது.

உடனே அவை குறித்து ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நற்றிணையில் (180) ‘பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை’ என்றுபாடப்பட்டிப்பதை எண்ணி முறுவலித்துக்கொண்டு, மேலும் கொஞ்சம் தூரம் சமதளத்தில் நடந்து, மறுபடியும் மேல் நோக்கிச் செல்லும் பாதையில் எங்கேயும் நிற்காமல் வளைந்து ஏறிப் போய், அடுத்த சிறிது தூரத்திலேயே வந்த முற்றிலும் இடிந்த நிலையில் செங்கல் குவியலாகக் காட்சியளித்த கோட்டை வாயில் முன்பாகச் சென்று நின்றோம்.

சுமார் 2700 அடி உயரத்தில் உள்ள பாறைகளின் மேல் பதினேழாம் நூற்றாண்டில் மராட்டியர்களால் நிறுவப்பட்ட கோட்டை, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைந்து; மிகுதி உடைக்கப்பட்டு, இப்போது வெறும் ஐந்து சதவிகிதம் மட்டுமே எஞ்சியிருந்தது.

உடனே கண்கள் மூடி, அந்தக் கோட்டை வாயிலும், கோட்டையும் உடைபடுவதற்கு முன்னால் எப்படியெல்லாம் இருந்திருக்கும் எனக் கற்பனை செய்து பார்த்துவிட்டு, பிறகு அங்கிருந்து மேலும் உள்ளே சென்று, இடப்பக்கமாக மிக நேர்த்தியாகக் கட்டப்பட்டு இன்னும் உடைபடாமல் (ஆனால், ஆலம் வேர்; விழுது பிடியில் சிக்குண்டு) சிறுது தூரத்திற்கு மட்டும் இருக்கும் மதில் சுவரையும், அதனை ஒட்டி இருந்த பெரிய சுனையையும் கண்டு, அதன் அருகில் உள்ள பாறையில் போய் உட்கார்ந்தோம்.

கோட்டையின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அந்நீர்நிலையும், அதனை ஒட்டியிருந்த சுற்றுச் சுவரில் இருந்த விலங்கின் சிற்பமும் சட்டென ஈர்த்ததால், அவ்விடத்தில் ஏதோ செத்து வீசிய துர்நாற்றத்தையும் பொருட்படுத்தாமல், தனியாகக் கீழே இறங்கிப் போய் நீரின்றி வற்றிப் போயிருந்த சுனையின் ஓர் ஓரமாக மிகக் கவனமாக நடந்து சென்று, சுவரில் உள்ள சிவ லிங்கத்துக்கு பால் சொரியும் பசு உருவை தொட்டுப் பார்த்தேன்.

பிறகு அதன் அருகில் தாமரை மலர் போன்று இருந்த இன்னொரு சிற்பத்தையும் கண்டுவிட்டு, மெதுவாக ஏறி வந்து நண்பரை கூட்டிக்கொண்டு இன்னும் மேலே வந்து, அங்குள்ள புதிய சிவன் கோயிலையும், அதையொட்டின இடிந்த கட்டடங்களையும், தரை மட்டமாகி அடித்தளம் மட்டுமே எஞ்சிய பகுதிகளையும், ஆங்காங்கே செங்கற்களும் கருங்கற்களும் சிதறிக் கிடப்பதையும், ஆங்கிலேயர்கள் வேலூரின் வெப்பத்தை பொறுக்கமாட்டாமல் இந்தக் கோட்டையை தங்கள் கோடை வாழிடமாகப் பயன்படுத்த எண்ணிக் கட்டிய பாழடைந்த பங்களாவையும், ஆங்காங்கே புதையல் தேடி வந்தவர்கள் தோண்டிய குழிகளையும், விந்தையான இடுப்பு உயர செடி ஒன்றில் நூற்றுக்கணக்கான பட்டாம்பூச்சிகளும், அவற்றின் நடுவே சில விஷக் குளவிகளும் ஒருசேர மொய்ப்பதையும் பார்த்துக்கொண்டு, அங்கிருந்த விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் எப்படி காலவெள்ளத்தில் களவாடப்பட்டிருக்கும் எனக் கற்பனையில் ஓட்டிக்கொண்டு, அடுத்துள்ள பெரிய பாறையில் ஏறி உச்சி மலை அடைந்தோம்.

அங்கேயும் ஒரு சிவன் கோயில் இருந்தது. பழைமையானதாக இல்லாமல் மிக அண்மையதாக இருந்ததால், ‘இது நிச்சயம் நண்பர் சொன்ன ஆதி கைலாசநாதர் கோயிலாக இருக்காது. அதையும் களவாடிப் போயிருப்பார்கள்’ எனப் பேசிக்கொண்டு, அங்கிருந்த சிவரை சென்று வணங்கினோம்.

பிறகு ஆளுக்கொரு திசையாகப் போய் நின்றுகொண்டு, முதலில் தென்பக்கமாகக் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை நீண்டு விரிந்திருந்த ஜவ்வாது மலைத்தொடரையும், சுற்றிலும் தெரிந்த சமவெளிகளையும், கிராமங்களையும், நீர்நிலைகளையும், வேலூர் மாநகரையும், கீழே மலையை ஒட்டிக் கட்டப்பட்டிருந்த தங்கக் கோயிலையும் கண்டு ரசித்துவிட்டு, இறுதியாக அங்கிருந்து சற்று தொலைவில் இருக்கும், ‘சூரிய ஒளியிலிருந்து மணி காட்டும் கடிகையும், தலத்தாவரமாக பனையும் கொண்ட விரிஞ்சிபுரம் சிவக்கோயில் தெரிகிறதா?’ என்று பார்த்தேன். இல்லை.

மறுபடியும் தென்திசை நோக்கி நீலமும் பச்சையுமாக விரிந்திருந்த ஜவ்வாது மலைத்தொடரைப் பார்த்துக்கொண்டு மெல்ல விழி மூடி உளத்துள், ‘வழியில் கண்டுவிட்டு வந்த ஆதண்டையை தலத் தாவரமாக உடைய சிவக்கோயில் கொண்ட, கடையேழு வள்ளல்களில் ஒருவனான; முல்லைக்கு தேர் ஈந்த குறுநில மன்னனான வேள் பாரி ஆண்ட பறம்பு மலை என்னும் பிரான்மலையை அடுத்ததாகச் சென்று ஏறுவோம்’ என்று கூறிக்கொண்டேன்.

உடனே, எனது எண்ணத்தை ஆமோதிப்பது போல பின்னால் வற்றாத சுனை அருகில் நின்றிருந்த நண்பர் கூப்பிட்டு, ”அடுத்து நாம பிரான்மலை ஏறிடுவோம், சகோ’’ என்றார்.

இது நான் சற்றும் எதிர்பாராத பதில்தான் என்றாலும், எதுவும் கூறாமல் வெறுமே இதழ் மட்டும் அசைத்து முறுவலித்தேன்.

                                                            ***

மலைகள் சொற்களாக இருந்தபோது

கவிதையாக இருந்தோம்.

மலைகள் இசையாக இருந்தபோது

ராகமாக இருந்தோம்.

மலைகள் பூக்களாக இருந்தபோது

வாசமாக இருந்தோம்.

இறுதியில்,

மலைகள் பேசத் தொடங்கியபோது

மெளனமுற்றது

இதயம்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=