முனித்தூக்கம்
ஓணாங்கொடியின் ஒசரப்பார்வையில்
எப்போதும் தென்படும் லஞ்சவிளக்கு
தெரியவில்லை இப்போது
கல்யாணமுருங்கையின் சலசலப்பேச்சை
யாரும் கேட்காதது
வருத்தம்தான் இன்றைக்கு
பறந்துவரும் எருக்கு விதைகீழ்
செத்துக்கிடந்தது அணிலொன்று
பழுத்துக்கிடக்கும் எட்டிக்காயும்
குமுட்டிக்காயும்
தின்னத்தோன்றும் யாவருக்கும்
காலுடைந்த குதிரைக்கும்
தலையுடைந்த காவலனுக்குமிடையில்
சாரை நல்லன் பிணைந்திருக்க
யாரையும் மிரட்டவில்லை
சருகின் பகீர்சத்தம்
இவ்வளவும்
இருளில் நனைந்திருக்கும் முனியனுக்கு
எள்ளளவும் எட்டாதிருக்க
காய்ந்த வேலெலுமிச்சை
விழுந்தபோது
மெல்லக் கலைந்தது
புறக்கணிப்பின் வலித்தூக்கம்