சொல்லன்றி எதுவுமற்றவன்! – 351
இதைக் கொஞ்சம் புரியும்படி விளக்கமாக சொல்லமுடியுமா?
அதாவது, அரசியல் ஆதாயத்திற்காக அரசியல்வாதிகள் என்ன செய்தாலும் அதிலும் குறிப்பாக, இதுபோன்ற பெயர் மாற்றங்கள், ஒருபோதும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக, அண்மையில் பெயர் மாற்றப்பட்ட சென்னை மத்திய ரயில் நிலையத்தையும், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தையும் சொல்லலாம்.
மக்களில் ஒருவர்கூட புரட்சித் தலைவர் டாக்டர். எம். ஜி. ராமச்சந்திரன் ரயில் நிலையம் என்றோ, புரட்சித்தலைவர் டாக்டர். எம். ஜி. ராமச்சந்திரன் பேருந்து நிலையம் என்றோ சொல்லி நான் பார்த்ததில்லை; கேட்டதில்லை.
இந்த இடத்தில் இதை அவசியம் சொல்ல வேண்டும் என நினைப்பதால் சொல்கிறேன். 1853இல் திறக்கப்பட்ட சென்னை மத்திய ரயில் நிலையத்தைக் கட்டின வெள்ளையர்கள், அதற்கு தம்மில் யார் பெயரையும் சூட்டவில்லை. மாறாக, அது சென்னையின் மத்தியில் இருப்பதால் அதனைக் குறிப்பதுபோல இடத்தின் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள். அதுதான் அவர்களது பெருமைக்கு எடுத்துக்காட்டு.
ஆனால் நம்மவர்களோ, அதாவது, நம்மூர் அரசியல்வாதிகளோ, அந்த ரயில் நிலையத்திற்கு ஒரு சிறு செங்கல்லைக்கூட எடுத்துத் தராதவர் பெயரை அரசியல் லாபத்திற்காக அதிகாரத்தை பயன்படுத்திச் சூட்டுகிறார்கள்.
புதிதாகக் கட்டும் ஒன்றுக்கு இதுபோல் பெயர் சூட்டுவது சரி. அதை விடுத்து யாரோ, எப்போதோ கட்டிய ஒன்றுக்குப் போய், சம்மந்தம் இல்லாதவர்கள் பெயரைச் சூட்டுவது எந்தவிதத்தில் நியாயம்?
இன்னொரு முக்கியமான விஷயம். அந்தந்தப் பகுதிகளில் இருந்தவர்கள் அதாவது, வாழ்ந்தவர்கள் பெயர்களையும், அந்த இடத்துக்கு ஏற்றவர்கள் பெயர்களையும் சூட்டுவதுதான் முறையாக இருக்கும். அதனை விட்டுவிட்டு எந்த ஊரில் என்ன கட்டினாலும் குறிப்பிட்ட சிலரது பெயரை மாத்திரமே எல்லாவற்றுக்கும் வைப்பது என் பொருத்தவரை ஏற்புடையதல்ல.
[இன்னும்]
*