சொல்லன்றி எதுவுமற்றவன்! – 336
மரம் என்றதும் உங்கள் நினைவுக்கு வரும் முதல் மரம் எது, ஏன்?
பிறந்து வளர்ந்த எங்கள் வீட்டின் அருகில் இருந்த துரிஞ்சி மரம்தான் நான் பார்த்த முதல் மரமாக இருக்கும். அதைப் பற்றி சொல்ல ஆரம்பித்தால் பக்கம் பக்கமாக நீண்டுகொண்டு போகும். அந்த அளவுக்கு என் வாழ்வோடு பின்னிப் பிணைந்தது. இதனை மிக விரிவாக எனது நிலைத்திணை நூலில் எழுதி இருக்கிறேன். எனினும், சிலவற்றை மட்டும் இங்கே சொல்கிறேன்.
இந்தத் துரிஞ்சி மரம் பல கிளைகள் விட்டு அடர் புதர் போல வளரக்கூடியது. அதேநேரம், ஓரிரு கிளைகளுடன் மிக நீண்டு பெரிய மரமாகவும் வளர்வது. அதிகமாக விறகுக்குப் பயன்படுத்துவார்கள். இதன் இன்னொரு சிறப்பு என்னவென்றால், இதன் தோலை உரித்துவிட்டு அப்படியே பச்சையாகவே எரிக்கலாம். தவிர வீடு கட்டும்போது வாசப்படியில் கீழ்படியாகவும், ஜன்னல்களிலும் உபயோகிப்பார்கள். பொங்கல் சமயத்தில் வர்ணக்கோல் செய்யப் பயன்படுவது. இதன் இலைகள் தலையில் தேய்த்துக் குளிக்க சீயக்காய்ப் பொடியாகவும், அப்படியே பச்சையாக கல்மீது வைத்து நசுக்கித் தேய்க்கவும் உதவக்கூடியது. இப்படி இன்னும் எவ்வளவோ சொல்லலாம்.
இந்த இடத்தில் இதுவரை யாரிடமும் சொல்லாத ஒன்றை உங்களிடம் சொல்கிறேன். இத்துரிஞ்சி மரம் குறித்தும், இதனை மையமாகக் கொண்ட எங்களூர் மக்களின் எளிய வாழ்வு பற்றியும் விரைவில் ஒரு குறுநாவல் எழுதும் திட்டம் உள்ளது. பார்ப்போம்.
[இன்னும்]
*