சொல்லன்றி எதுவுமற்றவன்! – 335
கிட்டத்தட்ட நேர்காணலின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம். அதாவது, இறுதி மாதம். இன்னும் சரியாக எண்ணி 31 நாட்கள் மட்டுமே உள்ளன. இதுவரை பல விஷயங்கள் குறித்து மிக விரிவாக பேசியிருக்கிறோம். இன்னும் பேச ஏராளம் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பற்றி இனி பேசலாம் என நினைக்கிறேன்.
முதல் படைப்பில் ஆரம்பித்து தாவரங்கள் பற்றி தொடர்ந்து பதிவு செய்து வருகிறீர்கள். அவ்வகையில் இதுவரை பதிவுசெய்யாத ஒரு தாவரம் பற்றி சொல்லமுடியுமா?
பேய்மிரட்டி என்று சொல்லக்கூடிய பெருந்தும்பை மருத்துவ குணம் மிக்கதாக குறிப்பாக, ஆடு மாடுகளுக்குப் பயன்படுவதாக, சிறுவயதில் ஐயா சொல்லக் கேட்டிருக்கிறேன்.
மிக சாதாரணமாக சாலை ஓரங்களிலும், கரம்புகளிலும், மரிசிகளிலும், புதர்களிலும், கல்லாக்குட்டைகளிலும், மலைகளிலும் முளைத்து வளரும் இந்தத் தாவரத்தின் மற்றொரு குணத்தை மிக அண்மையில்தான் அறிந்துகொண்டேன். அதுவும், என் மனைவி கோமதி சொல்லி. அவருக்கு அவரது அப்பா சொல்லியிருக்கிறார்.
முழு இலையை அப்படியே சுருட்டி திரியாக வைத்து விளக்கு எரிக்கப் பயன்படுகிறது. இதனை சமீபத்தில் நிகழ்ந்த எங்கள் வளையணி விழாவில் பார்த்த பலர் அதிசயித்துப் போனார்கள்.
இப்படித்தான் நம்மைச் சுற்றியுள்ள தாவரங்கள் ஒவ்வொன்றும் பல குணங்களை கொண்டது. அவை அறிய அறிய வியத்துவது என்பதை இன்னொரு தடவை உணர்ந்துகொண்ட அற்புதத் தருணம் அது.
[இன்னும்]
*