அகத்திரியில்ஏற்றியநெருப்பு – 2 : நான்குபேர்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 1 : பிரிவின் தூரம்
அன்புள்ள ஐயாவுக்கு,
‘நாம் ஒருபோதும் நினைக்கவே கூடாது, தவிர்க்க வேண்டும்’ என நினைக்கும் விஷயம்தான் திரும்பத் திரும்ப நினைவுக்கு வரும், தவிர்க்க முடியாமல் போகும் என்பார்கள். அப்படித்தான் ஐயா இருக்கிறது இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னால் தாங்கள் மரணம் குறித்து என்னிடம் உரையாடிய விஷயம்.
நானும் எவ்வளவோ முயன்று பார்க்கிறேன். ஆனாலும் முடியவில்லை. எங்காவது மரண ஊர்வலம், மரணவீடு, மரணச்செய்தியைக் காணவும் கேட்கவும் நேர்ந்தால் மனம் தானாக அதனை நினைக்க ஆரம்பித்துவிடுகிறது.
அதிலும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிச்சேரியில் உள்ள தோழியின் அப்பா மரணத்திற்கு சென்று வந்ததிலிருந்து இவ்வெண்ணம் பலமடங்கு அதிகமானதை என்னால் உணரமுடிகிறது.
ஒரு மரணம் எப்படியெல்லாம் இருக்கக் கூடாதோ அப்படியெல்லாம் இருந்தது அவரது மரணம். வீட்டாருடன் சண்டையிட்டு அவர்களை வீட்டைவிட்டு துரத்திவிட்டு வேதனை தாளாமல் விஷம் அருந்தி எரியும் மின்விளக்கைக் கூட அணைக்காமல் இறந்திருக்கிறார்.
ஒருநாள், இருநாள் அல்ல… மூன்று நாட்கள் கழித்தே துர்நாற்றம் வீச அக்கம் பக்கத்து வீட்டார் சொன்னதன் பேரில் போலீசார் வந்து கதவை உடைத்துப் பார்த்தனர். தலை, கால் தெரியாத அளவுக்கு உடல் அழுகிப்போயிருந்தது. உடல்கூறாய்வு செய்ய மருத்துவமனைக்கு சாக்குப்பையில் வாரியெடுத்துப் போனார்கள்.
ஆய்வு முடிந்து பொட்டலமாக கட்டி எடுத்து வந்த உடலைப் பார்த்ததும் பதறிப் போனேன். அதுவும் மனதுக்கு மிக நெருக்கமான ஒருவரின் மரணம் இப்படியா இருக்கவேண்டும்? இறந்தவரின் முகம் கூட பார்க்கமுடியாத மரணங்கள்தான் வாழ்வின் உச்சபட்ச வாதையெனத் தோன்றியது அப்போது.
அதிலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வரிசைகட்டி வந்த அவருடனான நினைவுகள் என்னை பாடாய்ப் படுத்தின. பேசிய வார்த்தைகள், நடந்த சாலைகள், ஆசை ஆசையாய் வாங்கிவந்து எனக்காக சமைத்துப் பரிமாறிய மீனும், கோழிக்கறியும், சாப்பாடும் மாறிமாறி வருகிறது. நிலா வெளிச்சத்தில் உட்கார்ந்து பேசிய வேப்பமர சன்னலும், படிக்கத் தந்த திருக்குறள் புத்தகமும் மனக்கண்ணில் வந்து வந்து போகிறது.
சின்னச் சின்ன விஷயங்களுக்கே மனமுடைந்துபோகும் என்னால் அப்பெரும் வாதையை சில நிமிடங்களுக்குமேல் எதிர்கொள்ளமுடியவில்லை. அங்கிருந்து யார் கண்ணிலும் படாமல் வெகுதூரம் வேகவேகமாக கால்வலித்து உடல்சோர்ந்து அடுத்த அடி எடுத்துவைக்க முடியாத அளவுக்கு நடந்து போகவேண்டும் போலிருந்தது.
பெற்ற பிள்ளைகளும், உறவினர்களும் சுற்றிலும் கதறிக் கதறி அழுகிறார்கள். அவசர அவசரமாக அரைகுறையாக செய்யவேண்டிய சடங்குகளை எல்லாம் செய்கிறார்கள். வந்தவர்களில் பலரும் அவர் இவ்வளவுநாள் வாழ்ந்த வாழ்க்கையை பேசாமல், இறந்த விதத்தையே பேசுகிறார்கள்.
எது முகம், எது கால் எனத் தெரியாமல், ‘அவரது உடல் இது, அவ்வளவுதான்’ என்ற நினைப்போடு ஒருவரது உடலை கடைசியாகப் பார்க்கும் கொடுமை இவ்வுலகில் வேறு யாருக்கும் வரவேகூடாதெனத் தோன்றியது.
‘எப்பா… நான் ஒண்ணு சொல்லணும். நான் செத்ததுக்கப்பறம் ஐஸ் பெட்டியிலலாம் என்ன வக்காதீங்க. அப்பறம் வண்டியில வச்சிலாம் தூக்கிட்டுப் போவாமப் பாடகட்டி நாலுபேர் தூக்கிட்டுப்போய் அடக்கம் பண்ணணும். இத மட்டும் மறக்காம எனக்கு செய்ங்க போதும்..’ என்றீர்கள்.
இதுகுறித்து குறைந்தது நூறு தடவையாவது யோசித்திருப்பேன் ஐயா.
‘ஏன் ஐயா அப்படிச் சொன்னார்? இப்டியெல்லாம் கூடவா ஒரு மனிதருக்குத் தோன்றும்? ஒருவேளை மனதில் எதையாவது நினைத்துச் சொல்லியிருப்பாரா?’
இப்படி எத்தனை எத்தனையோ கிளைக் கேள்விகள். யோசிக்க யோசிக்க ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்ததய்யா.
நீங்கள் எதைச் சொன்னாலும், செய்தாலும் அதற்குப் பின்னால் நிச்சயம் ஒரு காரண காரியம் இருக்கும். அது உடனே புரியவில்லை என்றாலும் காலப்போக்கில் புரியவரும். ஆம்! ஐயா.
தாங்கள் அப்படிச் சொன்னதற்கான காரணமும் எனக்கு ஒரு கட்டத்தில் புரிய ஆரம்பித்தது. அப்புரிதல் கொஞ்சம் கொஞ்சமாக விரிய தங்கள் விருப்பத்தின் பின்னாலுள்ள உள்ளார்ந்த ஆழமான ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், ஆசைகள், அர்த்தங்கள் யாவும் துலங்க ஆரம்பித்தன.
பெற்று வளர்த்த பிள்ளைகள், கட்டிய மனைவி, சொந்த பந்தங்கள், பேரப்பிள்ளைகள், நண்பர்கள், ஊரார் என யாவரும் சூழ நடுவில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் உடலை கடைசியாக தொட்டு அழ, தொட்டுப் பார்க்கக் கூட வாய்ப்பு தராத கொடுமையை, நவீன மனிதர்கள் ஐஸ் பெட்டி வடிவில் மாநகரம் தொடங்கி குக்கிராமம் வரைக்கும் எங்கும் பரப்பியுள்ளதாக தாங்கள் நினைத்திருக்கலாம்.
விபத்தில் அல்லது கொடும் நோயில் இறந்தவர்கள், தூர தேசத்திலிருந்து மகன் அல்லது மகள் வருகைக்காக வைத்திருப்பவர்கள் போன்ற தவிர்க்க முடியாத காரணங்களுக்கென்றால்கூட சரி. பெருமைக்காக நினைத்துக்கொண்டு இன்றைக்கு பலரும் இறந்த பத்து நிமிடத்தில் ஐஸ்பெட்டி வரவழைத்து உடலை உள்வைத்து மூடுவதை ஏற்கமறுத்து நீங்கள் சொல்லியிருக்கலாம்.
ஒரு மனிதனின் வாழ்வில் நடக்கும் இறுதி ஊர்வலமானது அவன் வாழ்ந்த மொத்த வாழ்க்கைக்கான இறுதிசாட்சி என்பார்கள். அப்படிப்பட்ட ஊர்வலம் தான் பெற்ற பிள்ளைகள், உற்றார் உறவினர், ஊரார் என ஆயிரக்கணக்கானோர் இருக்க, நான்குபேர் தூக்கிப் போகக் கூட வக்கற்று, ஏற்கனவே நூற்றுக்கணக்கானவர்களை ஏற்றிப்போன ரெடிமேடு பாடையில் (பிணம் ஏற்றிப் போகும் வாகனம்) வைத்து எடுத்துப்போய் புதைத்தோ, எரித்தோ வருவது தன் இத்தனை ஆண்டுகால அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு பேரிழுக்கு என நினைத்து நீங்கள் கூறியிருக்கலாம்.
குறிப்பாக தங்களால் பயன் பெற்றவர்கள் தங்களின் காலைத் தொட்டு வணங்க நினைக்கலாம். தங்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ தீங்கு செய்தவர்கள் கூட கடைசியாக ஒருதடவை வந்து உங்கள் பாதத்தை தொட்டு மன்னிப்பு கோரலாம். ஒற்றைத் துளி கண்ணீரால் பாதம் கழுவ நினைக்கலாம்.
சிறுவயது முதல் தங்கள் கைப்பிடித்து காடு, மேடு, ஆறு, ஏரி, குளம், குட்டை, கால்வாய், மலை என எங்கும் சுற்றித் திரிந்த நான் கடைசியாக உங்கள் கரம்பற்றி கண்ணீர் உகுக்கலாம். இறுகக் கட்டி அழலாம். நெஞ்சோடு முகம் சேர்த்து உங்களுக்கு மட்டும் கேட்கும் குரலில் ஏதேனும் சொல்லலாம். இப்படி இன்னும் எவ்வளவோ நீங்கள் நினைத்திருக்கலாம்.
‘எப்பா… நான் ஒண்ணு சொல்லணும். நான் செத்ததுக்கப்பறம் ஐஸ் பெட்டியிலலாம் என்ன வக்காதீங்க. அப்பறம் வண்டியில வச்சிலாம் தூக்கிட்டுப் போவாமப் பாடகட்டி நாலுபேர் தூக்கிட்டுப்போய் அடக்கம் பண்ணணும். இத மட்டும் மறக்காம எனக்கு செய்ங்க போதும்..’
தங்களது இவ்விரு விருப்பத்தை முதலில் கேட்டபோது கோபமாக இருந்தாலும், அதற்குப் பின்னான காரணத்தை யோசிக்க யோசிக்க கோபம் தானாக மறைந்து நியாயமான விருப்பமாகத் தோன்ற, உங்கள் மீதான மதிப்பும், பாசமும் இன்னும் அதிகமானதை என்னால் உணரமுடிந்ததய்யா.
‘ஏன்டா இப்டி ஒரு வாழ்க்கைய வாழறம்னு தோணறதுக்கு முன்னாடியே ஒரு மனுசன் செத்துப்போயிடணும். அப்டி செத்தாதான் அது நல்ல சாவு’ என்றீர்கள் ஒருநாள்.
இன்னொரு நாளோ, ‘ஒரு மனுசன் உச்சகட்ட சந்தோசத்துல இர்க்கும்போதே உசுர வுட்டுடணும். அதான் நெறவான சாவு..’ என்றீர்கள் இன்னொரு நாள்.
என்றபோதும் தங்களை பழனிக்கும், மதுரைக்கும் அழைத்துப் போகையில் நடந்த இரு நிகழ்வுகள் இந்நாள்வரை என்னை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது. அதுவும், வெண்ணிற சுருக்குக் கயிறை ஒரு கையிலும், பளீரென ஒளிரத் தீட்டிய நீள்வாளை மறு கையிலுமேந்தி செல்லும் இடந்தோறும் விரட்டி வருகிறது.
மாலை ஐந்து மணி இருக்கும். புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போய் சாமிதரிசனம் முடித்துவிட்டு, அங்குள்ள பொற்றாமரைக் குளத்தருகில் தங்களையும், அம்மாவையும் நிற்கச் சொல்லி பக்கத்தில் ஏதோ வாங்கிவரப் போனவன், வாங்காமல் பாதியிலேயே திரும்பி வர, தங்களை மறந்தவராய் தாங்கள் எதிர் திசையில் வேகமாக நடந்துபோவதைப் பார்த்து,
”ஐயா” என்றேன் சத்தமாக.
சட்டென நினைவு வந்தவராய் திரும்பி என் முகத்தை எதிர்கொள்ளத் தயங்கியபடி தலையைக் கீழே தொங்கப்போட்டு அருகில் வந்தீர்கள்.
”என்னாச்சியா?’’ என்றதற்கு,
”ஒண்ணுல்ல’’ என்றீர்கள்.
அதேபோல் பழனியிலிருந்து திருப்பரங்குன்றம் நோக்கி காரில் போகும்போது சட்டென எதிர்பாராத நேரத்தில் கார் கதவைத் திறந்தீர்கள். அதைப் பார்த்துப் பதறிப் போய்,
”என்னய்யா” என்று கேட்டதற்கு,
”எச்சி துப்பணும்’’ என்று சொன்னீர்கள்.
இவ்விரு சம்பவங்களையும் ஏனோ என் மனம் ஏற்க மறுத்தது. மனத்துக்குள் சென்று ஆழமான கேள்விகளை திரும்பத் திரும்ப எழுப்பியபடி இருந்தது. எப்படியாவது இதுகுறித்து ஒருநாள் தங்களிடம் கேட்டுவிடவேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன்.
அப்படி ஒருநாள் கேட்க நினைத்து… நிலத்தில் மாமரத்தடிக் கட்டிலில் உட்கார்ந்து கயிறு திரித்துக்கொண்டிருந்த தங்களருகில் வந்து அமர்ந்தபோது, உள்ளிருக்கும் கேள்வி வெளியில் வர மறுப்பதை உணர்ந்தேன். எவ்வளவு முயன்றும் வரவில்லை. அதைத் தங்களிடம் காட்டிக் கொள்ளக் கூடாதென நினைத்து தென்னை மரத்தில் ஏறும் அணிலைப் பார்க்கிறேன். திரும்பி கைக்கெட்டும் தூரத்திலிருக்கும் மணத்தக்காளி செடியிலிருந்து நான்கைந்து பழுத்த கருநிறப் பழங்களை எட்டிப் பறிக்கிறேன். மாமரத்தில் எங்கேனும் தப்புக் காய்கள் இருக்கின்றனவா என ஒவ்வொரு கிளையாக உற்றுப் பார்க்கிறேன்.
என்னையும், எனதச்செயலையும் எதுவும் சொல்லாமல் அமைதியாகப் பார்த்த நீங்கள்… எதையோ யோசித்தவராய்,
”எப்பா..’’ என்றீர்கள்.
”சொல்லுய்யா..’’ என்றேன்.
சில நொடிகள் மீண்டும் எதையோ யோசித்துவிட்டு,
”அன்னிக்கு கார்லர்ந்து குதிச்சிடலான்னு தோணுச்சு. அதான் கதவத் தொறந்தன். ஒடனே ஒன் கொரலக் கேட்டதும், தப்புன்னு பட்டுச்சு. அதேமாரி மீனாச்சி கோயில்ல கூட்டத்தோடக் கூட்டமா கலந்து தொலஞ்சிப் போய்டலான்னு தோணுச்சு. அப்பயும் ஒன் கொரல் கேக்க நாம இன்னும் இர்க்கவேண்டிய நாளு நறயா இர்க்குபோலன்னு பட்டுச்சி..’’ என்றீர்கள்.
இதை நான் ஒருபோதும் தங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. கனவில், கற்பனையில் கூட.
ஒருபக்கம் நான் கேட்க நினைத்த கேள்விக்கு தாங்களாகவே பதில் சொன்னது சிறு சந்தோசமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் பேரதிர்ச்சியாக இருந்தது. எதையோ கொண்டு ஓங்கி அடித்ததுபோல் உணர்ந்தேன். கண்கள் தானாகக் கலங்கின. கை, கால்கள் நடுங்கின.
எழ முடியாமல் எழுந்து, எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சுயநினைவற்று நீங்கள் சொன்ன வார்த்தைகளையே திரும்பத் திரும்பக் கேட்டபடி இருபக்கமும் எள்ளுச் செடிகள் பூத்திருக்கும் மரிசி மீது மெதுவாக நடந்து கிணற்றருகில் போய் நின்றேன்.
படியின் கீழ் வழிந்திறங்கும் ஊற்றுநீர். அடித்தரையில் தெரியும் பாசிபிடித்த ஓட்டை வாளி. ஓரமாக மிதக்கும் கசங்கு கட்டு. விட்டுவிட்டு கேட்கும் கொலஞ்சிமரக் கிளிகளின் கீச்சொலி. தூரத்தில் பசியால் கத்தும் கன்றுக்குட்டி. காற்றின் பேச்சைக்கேட்டு சலசலக்கும் தென்னை ஓலை.
பின்னால் யாரோ நடந்துவரும் சத்தம் கேட்டது.
அது நிச்சயம் நீங்களாகத்தான் இருக்கும் என உள்ளுணர்வு சொன்னது.
”எப்பா..’’
ஆமாம்! நீங்கள்தான்!
எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.
”வடுவரசு’’
மெல்லத் திரும்பி உங்கள் முகத்தை நேருக்குநேர் பார்த்து,
”ஏன்யா ஒனக்கப்டி தோணுச்சி? ஒருவேள அப்டி எதனா நடந்திருந்தா ஒன் ஆசய நெறவேத்தக் கூட்டுனுபோன என் மனசு என்ன பாடு பட்ருக்கும்? வாழ்க்க முழுசுக்கும் அத நெனச்சி எப்டிலாம் நான் துடிச்சிர்ப்பன்?’’ என கண் கலங்கி அழுதபடி கேட்டதற்கு,
எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்த நீங்கள்,
”அந்த ஒரு கார்ணத்துனாலதான் அப்டி எதுவும் நடக்கல..’’ என்று சொல்லிவிட்டு, திரும்பி வந்தவழியே வேகவேகமாக நடந்து போனீர்கள்.
மொத்த உலகமும் சட்டென நின்றுவிட்டதுபோல் உணர்ந்தேன். மரம் செடி கொடி புல் பூண்டு பறவை ஆடு மாடு கோழி மனிதர்கள் எல்லாம் மரத்துக் கல்லாகிவிட்டதுபோல் இருந்தது.
நீங்கள் மட்டும்தான் தெரிந்தீர்கள். ஆமாம், நீங்கள் மட்டும்தான். கொஞ்ச கொஞ்சமாக சிறுத்து, புள்ளியாக மறைந்துபோனீர்கள்.
‘படீர்ர்ர்ர்ர்..’ என சத்தம். காய்ந்த தென்னை மட்டை மேலிருந்து விழுந்தது. சட்டென நினைவு வந்தவனாய் ஓடோடி தங்களிடம் வந்து,
”ஐய்யா, சாய்ந்தர பஸ்சுக்கு நான் மெட்ராஸ் போறன்..’’ என்றேன்.
எழுந்து பக்கத்தில் வந்து, ”பாத்து பத்தரமா போய்ட்டு வா..’’ என்று மட்டும் சொல்லி, தோளைத் தொட்டு அனுப்பி வைத்தீர்கள்.
அப்போது உங்கள் கண்ணிரண்டும் லேசாக கலங்கியிருப்பதைப் பார்த்தேன். ஏனெனக் கேட்க புத்தி சொன்னாலும், மனம் வேண்டாமெனத் தடுத்தது. அதனால் தெரிந்ததுபோல் காட்டிக்கொள்ளாமல் வீடுநோக்கி நடந்துவந்தேன்.
‘ஏன்டா இப்டி ஒரு வாழ்க்கைய வாழறம்னு தோணறதுக்கு முன்னாடியே ஒரு மனுசன் செத்துப்போயிடணும். அப்டி செத்தாதான் அது நல்ல சாவு’
‘ஒரு மனுசன் உச்சகட்ட சந்தோசத்துல இர்க்கும்போதே உசுர வுட்டுடணும். அதான் நெறவான சாவு..’
தாங்கள் சொன்ன இவ்வார்த்தைகள்தான் வீடு வரும்வரைக்கும் திரும்பத் திரும்ப என் காதில் ஒலித்தது.
மரணம் கொடுமையானது. ஈவிரக்கமற்றது. பாரபட்சம் பார்க்காதது என்பார்கள். ஆனால் நீங்களோ, மரணத்தை ஒரு நண்பனைப் போல, காதலியைப் போல எப்போதும் பார்ப்பதாகத் தோன்றும். அதனை எதிர்கொள்ள பெரும் துணிச்சலோடு காத்திருப்பதாகத் தோன்றும்.
‘ஒர்த்தரோட சாவ விட பெரிய படிப்பினைய யாராலயும் எப்பயும் சொல்லித் தர முடியாது..’ என்பீர்கள் அடிக்கடி.
இதை முதல் தடவை நீங்கள் சொல்லக் கேட்டது முதல், அதிக சந்தோசமாக இருக்கும்போதும் வருத்தமாக இருக்கும்போதும் அருகிலுள்ள பொதுமருத்துவமனைக்குப் போய், அங்குள்ள அவசர சிகிச்சை மையத்தின் எதிரில் மணிக்கணக்காக உட்கார்ந்து, எங்கெங்கோ அடிபட்டு உயிருக்குப் போராடும் நிலையில் ஆம்புலன்ஸில் ஏற்றி வரப்படும் உடல்களையும், அவர்களது உறவினர்களின் கதறல் சத்தங்களையும் கேட்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன்.
அப்படி ஒவ்வொரு தடவை சென்று வரும்போதும் எத்தனை எத்தனையோ பாடங்களை கற்று வந்திருக்கிறேன். அப்பாடங்களை ஒருபோதும் ஆசிரியர்களோ, நூல்களோ கற்றுத் தரப் போவதில்லை, கற்றுத்தரவும் முடியாது என பலதடவை உணர்ந்திருக்கிறேன்.
‘ஒர்த்தரோட சாவ விட பெரியப் படிப்பினைய யாராலயும் எப்பயும் சொல்லித் தர முடியாது..’
இதுதான் ஐயா நீங்கள். எவ்வளவு பெரிய விஷயத்தையும் போகிற போக்கில் சொல்லிவிடும் தங்களை நினைத்து வியக்காத நாளே இல்லை. சிறுவயது முதல் நான் கேட்ட எத்தனையோ விஷயங்களை, ஆசைகளை நிறைவேற்றிய உங்களுக்கு, நீங்கள் கேட்ட அனைத்தையும் முடிந்தவரை இதுநாள்வரை நிறைவேற்றி வந்திருக்கிறேன். அதுபோல்,
‘எப்பா… நான் செத்ததுக்கப்பறம் ஐஸ் பெட்டியிலலாம் என்ன வக்காதீங்க. அப்பறம் வண்டியில வச்சிலாம் தூக்கிட்டுப் போவாம பாடகட்டி நாலுபேர் தூக்கிட்டுப்போய் அடக்கம் பண்ணணும். இத மட்டும் மறக்காம எனக்கு செய்ங்க போதும்..’
நிச்சயம் இவ்விரு விருப்பத்தையும் ஒரு மகனாக மட்டுமல்லாமல், தங்களிடம் வாழ்நாள் முழுக்க கற்ற (கற்றுக்கொண்டிருக்கும்) மாணவனாக, நண்பனாக, சக பயணியாக, கதை மாந்தனாக நிறைவேற்றி வைப்பேன் ஐயா.
வாழ்க்கை எவ்வளவு அழகானது, மனிதர்கள் எவ்வளவு மகத்தானவர்கள் என தங்களையும், தங்கள் வாழ்வையும், தங்கள் நண்பர்களையும் பார்த்துத்தான் கற்றுக்கொண்டேன்.
அப்படி நான் இதுநாள்வரை கற்றுக்கொண்ட, இனியும் கற்றுக்கொள்ளப் போகும் யாவையும் சேர்த்து இச்சமூகத்திற்கு துளியும் மிச்சம் வைக்காமல் தந்துவிட்டு, எதுவுமற்ற எளியனாய் தங்களைப் போல் ஒருநாள் நானும் மரணத்தை நண்பனாய், தோழியாய், காதலியாய் எதிர்கொண்டு காத்திருப்பேன் ஐயா.
மிக்க அன்புடன்,
வடிவரசு
(August 12, 2020)
*