முகங்கள் – 2 : அம்மணள்

முகங்கள் – 1 : பாட்டையா

**

‘முணு முணுத்துக் கொண்டும்

தொண்டையை செருமிக் கொண்டும் கேட்டேன்…

”அது ஓர் சொல்லா?’’

”அது ஒரு நீளமான வார்த்தையா?’’

… … …

இல்லை

அது ஒரு ”சப்தம்” என்றான்’

 – அனார்.

**

அம்மணம் என்பதை இன்றைக்கு நாம் அசிங்கமாக, அவமானமாகப் பார்க்கிறோம். ஆனால் நம் மூதாதையர்கள் ஆடை என்பதை அறியாதவர்கள், அம்மணமாக காடு மேடு மலை என எங்கும் சுற்றித்திரிந்தவர்கள். காலமாற்றத்தில் உடலின் ஒவ்வொரு பாகங்களாக தாவரங்களின் இலைகள் கொண்டும், விலங்குகளின் தோல்கள் கொண்டும் மறைக்க ஆரம்பித்து, இன்றைக்கு நாம் விதவிதமான ஆடைகள் அணிந்து உடலையும், உடல் உறுப்புகளையும் மறைக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம்.

இது ஒருபக்கம் நாகரிகம், வளர்ச்சி என சொல்லிக்கொண்டாலும், இன்னொரு பக்கம் இதற்கு அப்படியே நேர்மாறாக மனிதரின் பிறப்பானது இன்னமும் அம்மணத்தோடுதான் நிகழ்கிறது. அதாவது, ஒரு மனிதன் முதன்முதலில் இப்பூமிக்கு வருகையில் அம்மணம் என்னும் நிர்வாணத்தை அணிந்துகொண்டுதான் வருகிறான். ஆக, இயற்கையின் பார்வையில் நிர்வாணம் என்பது ஒருபோதும் அவமானமல்ல, அசிங்கமல்ல. அது மனிதர்களுக்குத் தான் என்பதை நன்குணர முடிகிறது.

ஆதிகாலம் தொட்டு துறத்தல் உயர்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அது ஆடை, உறவுகள், பதவி, பணம், வீடு எதுவாக இருந்தாலும் சரி. முற்றும் துறந்தவன் என்பார்கள் அனைத்தையும் துறந்தவர்களை. துறவியாகவும் யோகியாகவும் சித்தராகவும் பார்க்கப்படுவார்கள், வணங்கப்படுவார்கள். அப்படிப்பட்டோர் பலரை நாம் நூல்கள் வழியாகவும் கதைகள் வழியாகவும் அறிவோம்.

ஆக, நிர்வாணம் என்பது உண்மையில் அசிங்கம்தானா? அவமானம்தானா? என்றால், இல்லை என்பதுதான் பதிலாக இருக்க முடியும்.

மனிதன் தவிர இயற்கையின் எந்த படைப்பும் ஆடைகள் அணிவதில்லை. தம் உடல் உறுப்புகளை மறைப்பதில்லை. உடல் உறுப்புகள் மறைக்கப்பட வேண்டும், அதிலும் சில உறுப்புகளை கட்டாயம் மறைத்தே ஆக வேண்டும் என கற்பித்தவர்கள் மனிதர்கள் தான். அதற்குப் பழகியதும் மனிதர்கள்தான். இப்போது அவற்றில் சிறுவிலகல் ஏற்பட்டாலும் அதை அவமானமாகவும் அசிங்கமாகவும் கருதுவதும் மனிதர்கள்தான்.

ஆக, நிர்வாணம் என்பது உடல் சார்ந்ததல்ல, மனிதரின் மனம் சார்ந்தது, பார்க்கும் பார்வை சார்ந்தது என்பதை இதன் மூலம் நன்கறியலாம்.

அப்போது நான் ஐந்தாம் வகுப்பு முடித்திருந்தேன். ஆறாம் வகுப்பில் சேர்க்க ஐயாவும் அவரது நண்பரும் என்னை பக்கத்து கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, எங்கள் கிராமத்திலிருந்து கிழக்கு நோக்கிய ஒற்றையடிப்பாதையில் நடத்தி, முரம்பு மேடு ஏறி இறங்கி, தென்பெண்ணை ஆற்றங்கரையின் மறுபக்கம் இருக்கும் பள்ளிக்கு ஆற்றிலோடிய முட்டி அளவு தண்ணீரில் இறக்கி நடக்கவைத்துக் கூட்டிப்போனார்கள்.

அவ்வழி அவ்வளவு அழகானது. மனதுக்கு மிகப் பிடித்தமானது.

அன்றைய தினம் நான் கண்ட காட்சி இப்போதும் கண்முன் வந்தோடுகிறது. பள்ளியை ஒட்டி ஆற்றிலிருந்து மேலேறும் இருபக்கமும் முட்புதர்கள் நிறைந்த ஒற்றையடிப்பாதையில், பள்ளியின் பாதி கட்டி கைவிடப்பட்ட மதில் சுவருக்கு அருகில் ஓர் அம்மா, எப்படியும் அவருக்கு 50 வயதிருக்கும், உடலில் பொட்டுத் துணியில்லாமல் அம்மணமாக நின்று சேலைத்துணி ஒன்றை (அதுவும் பழைய, மிகவும் சிறிய அளவுடைய) கையில் உயரத் தூக்கிப் பிடித்து காற்றில் காய வைத்துக்கொண்டிருந்தார்.

வருபவர் போபவர் குறித்த எவ்வித சலனமும் அவர் முகத்தில் இல்லை. அதிர்ச்சியாக இருந்தது அவரை அப்படி, அதுவும் பள்ளிக்கு அருகில் பார்த்தது.

அதற்கு அடுத்த நாள் காலையில் எங்களூர் பயல்களுடன் சேர்ந்துகொண்டு பள்ளிக்குப் போகும் போதும் அதேபோல் அவர் நின்றிருக்க, உடன் வந்த பத்தாம் வகுப்பு படிக்கும் அண்ணன் ஒருவரிடம் கேட்டேன்.

”அவங்க ஏன் தெனமும் இங்க அம்மணக்கட்டயா நின்னுட்ருக்காங்க?’’

”அவங்களா… அவங்க இந்த ஊர்தான். ஏன்னு தெர்ல, ஆனா தெனமும் இப்டிதான் நின்னுட்ருப்பாங்க’’ என்றார்.

காலையில் பள்ளிக்கு செல்லும்போது, நடுவில் சிறுநீர் கழிக்க, சிலநாள் மலம் கழிக்க, மதியம் உணவு சாப்பிட (பெரும்பாலும் அப்போது மதிய உணவை ஆற்றின் நடுவில் உள்ள புல் தரையிலோ, கற்களின் மீதோ, மணலின் மீதோ வட்டமாக அமர்ந்து, சில நாட்கள் வரிசையாக ஆற்று நீருக்குள் கால்களை நீட்டியபடி பாறையில் உட்கார்ந்து, பகிர்ந்து உண்போம்.), மாலை பள்ளி விட்டு புறப்படும்போது என ஒரு நாளைக்கு குறைந்தது நான்கைந்து தடவையாவது பள்ளியருகில் உள்ள அவ்வழியில் சென்று வருவேன். அப்படி செல்லும்போதெல்லாம் பெரும்பாலும் அவர் கண்ணில் பட்டுவிடுவார்.

அந்த வழியின் இருபுறமும் முள் வேலி மரங்கள் (எங்களூரில் பீ வேல மரம் என்போம்) அடர்ந்த காடுபோல் இருக்கும். ஆற்றிலிருந்து ஒரு வழியாகத் தொடங்கி, சிறிது தூரத்தில் இரண்டாகப் பிரியும். அதில் பெரிய வழி நேராக பள்ளியை ஒட்டி மேலேறி ஊருக்குள் நுழையும். அந்த வழியில்தான் நாங்கள் பள்ளிக்குச் செல்வதும், வருவதும்.

ஒரு தடவை பக்கத்து ஊர் நண்பனுடன் சேர்ந்து வகுப்பு நேரத்தில் ஆசிரியரிடம் சொல்லிவிட்டு அவ்வழியாக இறங்கி ஆற்றுக்குள் மலம் கழிப்பதற்காகச் சென்றேன். அப்போது எதிரில் ஓரமாக நின்றபடி தன் சேலையை காற்றில் உலர்த்திக்கொண்டிருந்த அந்த அம்மாவைக் காட்டி, அவர் குறித்து சொல்லுமாறு கேட்டேன்.

”அவங்க சின்ன வயசுல ரொம்ப அழகா இருப்பாங்களாம். வெதவெதமா டிரஸ்லாம் போடுவாங்களாம். ஒருநாள் திடீர்னு அவங்க மண்டைல அடிப்பட்டு பைத்தியமாயிட்டாங்களாம்..’’ என்றான் நண்பன்.

அதுமுதல் அவ்வம்மாவின் மீது தனித்த பரிதாபமும், மறைமுக அக்கறையும் உருவானது.  அவர் தன் உடம்பில் ஒட்டுத் துணி அணியாத போதும், அவரது நிர்வாணம் அவ்வழியாக செல்லும் ஒருவருக்கும் அருவருப்பு தந்ததாகவும், ஆசையைத் தூண்டியதாகவும் நான் கேள்விப்பட்டதில்லை.

தினந்தோறும் காலை, முற்பகல், மதியம், பிற்பகல், மாலை என அவர் பாட்டுக்கு நான்கைந்து தடவை ஆற்றுக்கு வருவார். தான் வழக்கமாக குளிக்கும் இடத்துக்குப் போய், தன் சேலையை அவிழ்த்து எப்போதும் வைக்கும் கல்லின் மீது வைத்துவிட்டு, தண்ணீரில் இறங்கி முங்கிமுங்கி குளிப்பார். சில நிமிடங்கள் கழித்து தன் சேலையை எடுத்து அலசி கையில் எடுத்துக்கொண்டு அம்மணமாக கரையேறி அப்படியே நடந்து வருவார். விருப்பமாக நிற்கும் இடங்களில் ஓரிடத்தில் நின்று குறைந்தது அரை மணி நேரமாவது தன் சேலையை நன்கு விரித்து உயரத் தூக்கி காற்றில் காயவைப்பார். பின் அச்சேலையை அரைகுறையாகப் போர்த்திக் கொண்டு அவர் வீடு நோக்கி நடந்துபோவார். அல்லது மீண்டும் இறங்கி ஆற்றுக்குப் போய் குளிப்பார். இதுதான் அவரது தினசரி வேலை.

ஏன் இப்படி நடந்துகொள்கிறார்? என பல தடவை யோசித்திருக்கிறேன். அதுவும் ஒரு செயலை, அவர் திரும்பத் திரும்ப செய்வதைப் பார்த்தால் அச்செயல் மூலம் அவர் எதையோ, யாருக்கோ சொல்ல முற்படுகிறார் என்றெல்லாம் தோன்றும். சில நேரம் அவர் ஆடையை வெறுக்கிறார் என்றும், நிர்வாணத்தை விரும்புகிறார் என்றும் கூட தோன்றியதுண்டு.

ஒரு நாள் நானும் என் வகுப்பு நண்பனும் தனியாக நடந்து பள்ளிக்குச் செல்லும்போது, அவர் சரியாக ஆற்றில் குளித்துவிட்டு கரை ஏறினார். உடனே அவரைப் பார்த்த நண்பன்,

”ஹேஹே அம்மணக்கட்ட… ஹேஹே அம்மணக்கட்ட..’’ என்று கத்தி கேலி செய்ய, அவர் பயந்துபோய் அங்கிருந்து வேக வேகமாக நடக்க ஆரம்பித்தார்.

இவனும் விடாமல் வேகமாக அவரைப் பின்தொடர்ந்து கத்த, அவர் இன்னும் அதிகமாக பயந்து ஓடினார். அப்போதும் இவன் விடாமல் பின்னால் துரத்த எனக்கு ஏதோ மாதிரி ஆகிவிட்டது. வேகமாக ஓடிப்போய் அவனிடம்,

”டேய் டேய் வேணான்டா… அவங்க பாவம்டா… வேணாம்டா வேணாம்டா..’’ என எவ்வளவோ கெஞ்சியும் அவன் கேட்கவில்லை. அதுமுதல் அவனிடம் பேசுவதையே நிறுத்திக்கொண்டேன்.

ஒரு வாரம் கழிந்திருக்கும். பள்ளி தலைமையாசிரியரிடம் சென்று அவன் அந்த அம்மாவிடம் அப்படி நடந்துகொண்டது பற்றி யாரோ சொல்லிவிட்டார்கள். பெரும் கோபத்தோடு அன்றைய இறைவழிபாட்டுக் கூட்டத்தில் பேசிய தலைமை ஆசிரியர்,

”யாரோ நம்மப் பள்ளி மாணவர் ஒருத்தர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறா நடந்து கொண்டதா புகார் வந்திருக்கு. அது யாருன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் தனியாக் கூப்பிட்டு கண்டிக்காம, இங்க எல்லார் முன்னாடியும் சொல்லக் காரணம், இனி யாரும் அதுமாதிரி நடந்துக்கக் கூடாது. அப்படி ஏதாவது புகார் வந்ததுன்னா டி.சி கொடுத்து வீட்டுக்கு அனுப்பிடுவன்..’’ என்றதும், எனக்கு முன்னால் வரிசையில் நின்றிருந்த அவன் பயந்து வெலவெலத்துப் போய்விட்டான்.

அன்று தலைமையாசிரியர் சொன்ன இன்னொரு விஷயமும் நன்றாக நினைவில் உள்ளது.

”எல்லாரும் நல்லாப் படிச்சி பெரியாளா வரணும்னு நெனச்சிதான் உங்க அப்பா அம்மா கஷ்டப்பட்டு உங்கள பள்ளிக்கூடம் அனுப்பி வச்சிருக்காங்க. இங்க படிப்புங்கறது புத்தகத்துல இருக்குறது மட்டும் கிடையாது. அதைத் தாண்டி நம்மள சுத்தி உள்ளவங்க ஒவ்வொருத்தரையும் மதிச்சு நடந்துக்கிறதும்தான்..’’

அன்று மாலை பள்ளி முடிந்து நண்பர்கள் சிலருடன் வீட்டுக்குப் போகும் போது எதிரில் நின்றிருந்த அந்த அம்மாவிடம் போய், ”இனிமேலு ஒன்ன அம்மணக்கட்டன்னு சொல்ல மாட்டன். சாரி… சாரி..’’ என அவன் சொல்ல, வழக்கம்போல் அவனைக் கண்டு அந்தம்மா பயந்து ஓட ஆரம்பித்தார். அவன் தினந்தோறும் அப்படி செய்துசெய்து அவனைக் கண்டாலே அவருக்கு பயம் வர ஆரம்பித்தது.

அதுமுதல் அவன் அவரை தொந்தரவு செய்யவில்லை. அவன் மட்டுமல்ல… பள்ளியில் படிக்கும் ஒரு மாணவரும். அதோடு ஒருவரும் அவரது அம்மண உடலைப் பார்த்து ரசிக்கவோ, கேலி பேசவோ செய்யவில்லை. காரணம் எங்களுக்கு அவரது அம்மணமும், அவரது சலனமற்ற முகமும் பார்த்துப் பார்த்துப் பழகிவிட்டது. அதோடு அது காமத்தைத் தூண்டும் நிர்வாணம் அல்ல. ஒரு வேதனையின், இயலாமையின், வலியின், கண்ணீரின் நிர்வாணமாகத் தெரிந்தது தான்.

அதன்பின் அவர் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்து உள்ளூர் நண்பர்கள் சிலரிடம் கேட்டிருக்கிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை சொல்வார்கள். அதில் எது நிஜம், எது பொய் என்றெல்லாம் பிரித்தறியும் வயதில்லை அப்போது எனக்கு. ஆனாலும் அவர்கள் சொன்ன கதையில் ஒன்று இப்போது நினைத்தாலும் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

”அழகுன்ன அவ்ளோ அழகா இருப்பாங்களாம். அவங்க பின்னாடி சுத்தாத ஆளே இல்லயாம் அப்போ. ஒருநாளு அவங்க தனியா ஆத்துக்கு வந்து துணி தொவச்சிட்டு, குளிச்சிட்டு போவும்போது அந்த பொதர்ல வச்சி நாலஞ்சிபேர் சேந்து அவங்களக் கெடுத்துட்டாங்களாம். அப்போ பைத்தியமானவங்கதான்’’ என்ற நண்பன் சொன்ன கதை எனக்கென்னவோ இப்போது உண்மையாக இருந்திருக்கும் என்றே படுகிறது.

அன்றைக்கு அது பயம் தரக்கூடிய கதையாகவும், இப்படியெல்லாம் கூட நடக்குமா என்பது போன்றுதான் இருந்தது. ஆனால், இன்றைக்கு நடக்கும் அதைவிடக் கொடூரமான சம்பவங்களை பார்க்கும்போது, அது நிச்சயம் உண்மையாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

எங்கள் பள்ளி இருந்த இடத்தை இப்போது நினைத்தாலும் பசுமை மாறாமல் அப்படியே மனத்தின் அடி ஆழத்தில் உள்ளது. பெரிய அரசமரம் ஒன்றும், சிறிய அரசமரம் ஒன்றும், புளியமரம் ஒன்றும் அவ்வளவு ரம்மியமாக இருக்கும். ஆறாம் வகுப்பு என்பதால் எங்களுக்குத் தனியாக வகுப்பறையெல்லாம் கிடையாது. எப்போதும் அரசமரத்தடியில்தான் வகுப்பு நடக்கும். மழை வந்தால் ஏழாம் வகுப்பும் எட்டாம் வகுப்பும் உட்காரும் கட்டடத்தின் நடுவிலிருக்கும் காலி இடத்தில் உட்கார வைப்பார்கள்.

வாரத்தில் ஒருநாள் மட்டும் எங்களுக்கு மாலை நேர வகுப்பு நடக்கும். அப்போது ஆற்றங்கரை ஓரத்தில் வரிசையாக இருக்கும் முள்வேலி மரத்தடியில் குழு குழுவாக உட்கார்ந்து படிப்போம்.

கிட்டத்தட்ட ஒண்ணேகால் வருடம்தான் எங்கள் பள்ளி அங்கே இருந்தது. பின் பள்ளிக்கு புதுக் கட்டடமும், பெரிய இடமும் ஒதுக்கப்பட்டதால் அங்கிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள இன்னோர் இடத்துக்கு பள்ளியை மாற்றிவிட்டார்கள். அங்கேயும் எங்களுக்கு மரத்தடி வகுப்புதான். அதனால் பள்ளிக்கு நடந்து செல்லும் வழி மாறிவிட, அவரை அடிக்கடிப் பார்க்கும் வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது. இருந்தும் மாதத்தில் ஓரிரு நாள் மதிய உணவு வேளையில் உள்ளூர் நண்பர்களுடன் சேர்ந்து ஊருக்குள் சைக்கிளில் சுற்றும்போது அவரை பார்க்க நேரிடும். அப்போதும் அவர் அப்படியேதான் இருப்பார்.

எனக்குத் தெரிந்து அவருக்கு நன்கு அடையாளம் தெரிந்த ஒருவர் எனில் வீட்டார் தவிர்த்து அவரை வம்பிழுத்த நண்பன் மட்டும்தான். அதனால் நானும் இன்னோர் உள்ளூர் நண்பனும் சேர்ந்து ஒரு நாள் அவனைக் கூட்டிக்கொண்டு, அவர் நின்றிருக்கும் வழியாக ஆற்றுக்குள் இறங்கினோம். அப்போது அவனைக் கண்டு பயப்படுவார் என எதிர்பார்த்த எனக்கு ஆச்சரியம்தான் பரிசாகக் கிடைத்தது.

நண்பனைப் பார்த்து அவர் முன்புபோல் பயப்படவில்லை. மாறாக, சிரித்தார். அதுவும் அப்படி ஒரு சிரிப்பை இதுநாள்வரை நான் பார்த்ததில்லை. இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவரது அச்சிரிப்பை பார்த்து அவ்வளவு நாட்கள் ஏதேதோ சொல்லி அவரை கேலிசெய்து சிரித்த நண்பன் கண் கலங்கி அழ ஆரம்பித்ததுதான்.

இந்த வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது, இம்மனிதர்கள் எத்தகைய விந்தையானவர்கள் என இச்சம்பவம் நினைவுக்கு வரும்போதெல்லாம் எனக்குள் தோன்றும்.

உடுத்தும் உடையை காரணம் சொல்லி பெண்கள் மீது நிகழ்த்தும் கொடும் வன்முறைகளுக்கு நியாயம் கற்பிக்கும் மூடர்கள் மிகுந்த இதே சமூகத்தில், இல்லை இல்லை மனிதக் கூட்டத்தில்தானே அன்றைக்கு இந்த அம்மாவும் இருந்தார். ஏன் அவரது நிர்வாணம் கொடும் வன்முறையை நிகழ்த்தச் சொல்லி யாருக்கும் தூண்டவில்லை?

ஆக, உடை என்பதும் நிர்வாணம் என்பதும் பார்க்கும் பார்வையைச் சார்ந்தது, மனத்தை சார்ந்தது என்பதுதானே உண்மை.

அண்மையில் ஒருநாள் நான் படித்தப் பள்ளியைப் பார்க்க நண்பரோடு இரு சக்கர வாகனத்தில் சென்றிருந்தபோது, சட்டென அந்த அம்மா பற்றிய நினைவுகள் வந்தது. உடனே நண்பரிடம் அவர் குறித்த கேட்க, அவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதாகவும், அதற்கும் சில ஆண்டுகள் முன்பே அவர் தினந்தோறும் ஆற்றுக்கு வருவதையும், அம்மணமாக குளிப்பதையும், ஆடையை நிர்வாணமாக நின்று உலர்த்துவதையும் நிறுத்திக் கொண்டதாகவும், சில ஆண்டுகள் வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடந்ததாகவும், ஒரே ஒரு நாள் மட்டும் இரவு நேரத்தில் இருட்டில் தனியாக ஆற்றில் இறங்கி குளித்ததாகவும், அதற்கு அடுத்த நாள் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சேலை உடுத்தி, மஞ்சள் பூசி, தலை சீவி, பொட்டு வைத்து எல்லோரும் பார்க்கும் வண்ணம் ஆற்றங்கரைக்கு சென்று வந்ததாகவும், அன்றிரவே அவர் தூங்கும்போது இறந்துவிட்டதாகவும் சொல்ல என்னையறியாமல் கண்கலங்கி விட்டேன்.

”என்னாச்சு?” என நான் கண் கலங்குவதைப் பார்த்து நண்பர் கேட்டதும்,

”எதுவுல்ல… வா அந்த ஆத்தங்கர வரக்கும் போயிட்டு வரலாம்” எனச் சொல்ல, அழைத்துப் போனான்.

முன்பை விட இப்போது இன்னும் முள்வேலி மரங்களும், முத்துக்கொட்டை செடிகளும், ஊமத்தமும், கோரையும் அடர்ந்து முளைத்து காடுபோல் இருந்தது அவ்வழி.

அவர் குளிக்கும் இடம், புடவையை அவிழ்த்து வைக்கும் கல், அம்மணமாக நீரிலிருந்து எழுந்து நடந்துவரும் ஒற்றையடிப்பாதை, நின்று சேலையை காற்றில் உலர்த்தும் மண்மேடு எல்லாமும் அப்படியே இருந்தது. அந்த அம்மா மட்டும் அங்கே இல்லை.

கண்கள் யாவற்றையும் காண… மனமானது அவரையும், அவர் அம்மணத்தையும், யாதொரு சலனமுமற்ற அவரது விடை முகத்தையும் எப்போதும்போல் கண்டது.

ஆம்! ஆம்! ஆம்!

(ஏப்ரல் 02, 2020)

*

முகங்களின் முதலில்…

முகங்கள் – 1 : பாட்டையா

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=