ஆதிரையில் ஆதிரையான் – 3

ஆதிரையில் ஆதிரையான் – 1

ஆதிரையில் ஆதிரையான் – 2

ஆருத்ரா தரிசனம் குறித்து ஏற்கனவே பல தடவை கேள்விப்பட்டிருக்கிறேன். எனினும் நேரில் கண்டது கடந்தாண்டுதான். அதுவும் வடாரண்யம் (வடம் எனில் ஆலம். ஆரண்யம் எனில் காடு) எனச் சொல்லப்படும் திருஆலங்காட்டில். பஞ்ச சபைகளில் ரத்தின சபை அமைந்துள்ள தலம். நடராஜர் ஊர்த்துவத் தாண்டவம் ஆடும் இடம். காரைக்கால் அம்மையார் முக்தி பெற்ற கோயில்.

வெகு விமர்சையாக இருந்தது. ‘இங்கேயே இப்படின்னா, சிதம்பரத்தில் எப்படி இருக்கும்?’ என்று மனமானது வியப்போடு கேட்டது. அந்தக் கேள்விதான் இந்தாண்டு என்னை சிதம்பரம் நோக்கி வரத் தூண்டியதாக மனத்துக்குள் எண்ணிக் கொண்டேன்.

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து குளித்துக் கிளம்பி ஒரு தேநீர் மட்டுமே பருகிவிட்டு கோயிலுக்குப் புறப்பட்டோம். சரவணக்குமாருக்கும் ரத்தினவேலுக்கும் விடுமுறை இல்லை என்பதால் எனக்கு முன்னாலேயே எழுந்து, ”வடிவரசு எழுந்தார்னா சொல்லிடுங்க” என ஜோதிடரிடம் சொல்லிவிட்டு சென்னைக்கு கிளம்பியிருந்தார்கள்.

”வேட்டி கட்டிக்கங்க… அப்பதான் ராஜசபைக்குள்ள எளிதா போக முடியும்’’ என்றார் சிவதீபன். ”வேண்டாம்’’ என்றேன்.

ராஜசபைக்குள் செல்ல வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. வருடத்தில் இருதினங்கள் மட்டுமே திறக்கப்படுவது. அவ்வளவு எளிதில் யாரும் நுழைய முடியாதது. அதற்குள் நுழைந்திட அடியார் வேடமே உகந்தது என்றபோதும், ஏனோ பொய்யாக அவ்வேடம் பூண மனம் இடம் தரவில்லை. அதனால் உறுதியாக மறுத்துவிட்டு எப்போதும்போல் அவர்களுடன் சென்றேன்.

ராஜசபையின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த நடராஜருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் ஒவ்வோர் அபிஷேகமாக நடந்து கொண்டிருந்தது. சென்றவர்கள் சபையின் வலதுபுறம் அமைக்கப்பட்டிருந்த பாதையில் ஏறிப்போய் அங்கிருந்த சிறு வாயிலருகே நின்றுகொண்டு உள்நுழைய ஏதேதோ சொல்லி முயன்றுகொண்டிருந்தார்கள். நீண்ட முயற்சிக்குப் பின் சிலர் உள்ளேயும் போனார்கள். சற்று தள்ளி நின்று பார்த்தவன், ”இது நமக்கு சரிப்பட்டு வராது… வாங்க போகலாம்” என ஜோதிடரை கூட்டிக்கொண்டு கோபுரத்தருகில் வந்துவிட்டேன்.

ஓர் அரை மணிநேரம் சென்றிருக்கும். உள்ளுக்குள் ‘ராஜசபைக்குள் இப்போது விட்டால் வேறெப்போதும் செல்ல வாய்ப்பில்லை’ என்று தோன்றியது. கூடவே ‘இப்போது போனால் உள்ளே சென்றுவிடலாம்’ என்றும் தோன்றியது. சரி, என ஜோதிடரை அழைத்துக்கொண்டு திரும்பவும் போய் வாயில் முன் நின்றேன். அங்கிருந்த காவலாளிப் பெண் என் முகத்தை பார்த்தார். என்ன நினைத்தாரோ, எதுவும் கேட்காமல் சட்டெனக் கதவைத் திறந்து உள்ளே விட்டுவிட்டார்.

என் எத்தனை நாள் ஆசை நிறைவேறியதாய் உள்ளுக்குள் துள்ளிக் குதித்துக்கொண்டு ராஜசபைக்குள் கம்பீரமாய் நடந்துபோய் நடராஜருக்கு அபிஷேகம் நடப்பதை பின்பக்கமாக இருந்து பார்த்தேன்.

”எப்படி உள்ள வந்தீங்க?’’ என்றார் சிவதீபன். சொன்னேன். ”சுவாமி மேல உங்களுக்கும், உங்க மேல சுவாமிக்கும் அவ்ளோ அன்பு’’ என்றுவிட்டு புன்னகைத்தார். உடனே அவரருகில் நின்றிருந்த படர்சடையான், ”ஐயா, என்கூட வாங்க” எனக் கூட்டிக்கொண்டு மலர் மூட்டையை உள்ளே வைக்கப் போவதுபோல் ராஜசபையின் உட்பகுதிக்கு அழைத்துப் போனார். ‘ப்பா… என்ன பிரம்மாண்டம்’ என வியந்து பார்த்துக்கொண்டு போனேன்.

”இங்கேதான் அபிஷேகம் முடிந்ததும் சாமிய கொண்டு வந்து வைப்பாங்க’’ என்றார். அதுதான் சபையின் உச்ச இடம். தலைமைக்கு உரியது. நடனத்தின் அதிபதி நடராஜாவுக்கானது. அதன் முன்புதான் சோழச் சக்கரவர்த்தி அநபாயன் கேட்டதற்கிணங்க சேக்கிழார் திருத்தொண்டர்களின் கதைகளை பெரியபுராணமாக யாத்து,

‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்

நிலவுலாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்

மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்’

என நடராஜரை வாழ்த்தி வணங்கிப் போற்றிப் பாடித் தொடங்கி அரங்கேற்றம் செய்தது.

மெல்ல பதினோராம் நூற்றாண்டில் நிகழ்ந்ததாகச் சொல்லும் அரங்கேற்ற நிகழ்வை மனத்திற்குள் கற்பனைக் காட்சிகளாய் விரித்து ஓட்டிப் பார்த்தேன். மெய்சிலிர்த்தது.

”ஐயா, வாங்க போகலாம்’’ என படர்சடையான் சபையின் முன்பகுதிக்கு கூட்டி வந்தார். சட்டென ஒருவர் வந்து என் நெற்றியில் திருநீரு பூசாமல் கழுத்தில் ருத்ராட்சை அணியாமல் இடுப்பில் வேட்டி கட்டாமல் மிகச் சாதாரணனாய் கருப்பு நிற டீசர்ட் அணிந்துகொண்டு (கருப்பு நிறம் சிவனுக்கு பிடிக்காத நிறம் வேறாம்!!) அந்த இடத்துக்கு சற்றும் சம்பந்தமில்லாதவனாய் இருப்பதை பார்த்துவிட்டு ஒருவித எள்ளல் தொனியில், ”உங்கள எப்படி உள்ள விட்டாங்க?’’ என்று கேட்டார்.

எதுவும் சொல்லாமல் மெலிதாகப் புன்னகைத்துவிட்டு சேக்கிழாரின்,

‘எந்நிலையில் நின்றாலும்

எக்கோலம் கொண்டாலும்

மன்னிய சீர்ச் சங்கரன் தாள்

மறவாமை பொருள் என்றே’

எனும் வரிகளை உள்ளுக்குள் மென்குரலில் எனக்கு மட்டும் கேட்கும் சத்தத்தில் சொல்லிக்கொண்டேன்.

தொடர்ந்து நடராஜருக்கும் சிவகாமியம்மைக்கும் சந்தன அபிஷேகமும், பொன் அபிஷேகமும் நடைபெற்றது. இரண்டையும் மிகப் பக்கத்தில் பின்புறமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

சிதம்பரம் நடராஜர் வடிவம் குறித்து பலரும் பலவாறு சொல்லிக் கேட்டிருக்கிறேன். என்றபோதும் இதுதான் மிகப் பக்கத்தில் இருந்து பார்த்தது. நிஜ மனிதர் ஒருவர் கண்களால் அளவிட முடியாத வேகத்தில் நடனமாடிக் கொண்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அவ்வடிவம்.

உடலசைவுகள், இடையின் மென் வளைவுகள், முகபாவனை யாவும் அவ்வளவு தத்ரூபமாக இருந்ததைக் கண்டு வியந்தேன். உலகில் இதுவரை உருவாக்கப்பட்டுள்ள தத்துவ வடிவங்களில் தலையாயது நடராஜர் என்கிறார்கள். அது எந்தளவுக்கு உண்மை என்பதை உணர்ந்துகொண்டேன்.

‘தோற்றந் துடியதனில் தோயுந் திதியமைப்பிற்

சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்ஊற்றமா

ஊன்று மலர்ப்பதத்தி லுற்றதிரோ தம்முத்தி

நான்ற மலர்ப்பதத்தே நாடு.

(உண்மை விளக்கம்)

‘தான்அந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல்

தேன்உந்தும் ஆனந்த மாநடம் கண்டீர்

ஞானம் கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்கு

ஆனந்தக் கூத்தாட ஆடரங்கு ஆனதே.’

‘அம்பலம் ஆடரங் காக அதன்மீதே

எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொளி

உம்பர மாம்ஐந்து நாதத்து ரேகையுள்

தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே.’

(திருமந்திரம்)

‘தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்

தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ

தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம்

ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ.’

(திருவாசகம்)

இப்படி நடராஜர் பற்றியும் அவரது வடிவம் குறித்தும் இன்னும் எத்தனை எத்தனை பேர் என்னென்ன பாடியிருப்பார்கள்? எண்ண எண்ண வியப்பாக இருந்தது.

கூடவே, கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சிதம்பரம் சென்று சிற்றம்பலம் முன்னால் நின்று நடராஜரைக் கண்டு என்னையறியாமல் கண்கலங்கி அழுத சம்பவத்தை வைத்து,

‘மழை வான் மறப்ப –

மரம் மண் மறப்ப –

தேன் வண்டு மறப்ப –

பண் யாழ் மறப்ப…

அலை கடல் மறப்ப –

நீர் மீன் மறப்ப –

வேர் மலர் மறப்ப –

சேய் தாய் மறப்ப…

எல்லாம் இங்கு மறப்ப –

உன்னை யான் நினைப்ப…

என்னை நான் மறப்ப… ஆ…’

என்று ஈராயிரமாண்டு முந்தைய சங்க காலத் தலைவி தன் தோழியிடம், தலைவனைக் கண்ட மாத்திரத்தில் தன்னையே மறந்துபோய் நின்றதை உள்ளது உள்ளவாறு உரைப்பதுபோல் பாடலாக எழுதியதை நினைத்து உள்ளுக்குள் மகிழ்வுற்றேன்.

‘மழை வான் மறப்ப’ பாடல்

அடுத்த கொஞ்ச நேரத்தில் அபிஷேகம் முடிந்து திரையிட்டு மூடி நடராஜரையும் சிவகாமியம்மனையும் அலங்கரித்து ராஜசபைக்குள் தூக்கி வந்தார்கள். மிகப் பக்கத்தில் கை நீட்டினால் தொடக்கூடிய தூரத்தில், என்னை ஒவ்வொரு தடவை வந்து பார்க்கும்போதும் அழவைக்கும் வடிவத்தை (அபிஷேகம் செய்ததால் கருநிறம் மறைந்து தன் ஆதிநிறம் திரும்பியிருப்பதை) கண்டேன். ‘ப்பா… என்ன ஓர் வடிவம்’ என சிலிர்த்துப் போனேன்.

அதிலும் மாணிக்கவாசகர் சொல்ல திருவாசகத்தை தன் கைப்பட எழுதிய கரத்தையும், ‘பாவை பாடிய வாயால் கோவை பாடுக’ எனக்கேட்டு பாடவைத்து மகிழ்ந்த வாயையும் சில நொடிகளே கண்டாலும் வாழ்வில் எப்போதும் மறக்க முடியாத அளவுக்கு அழுத்தமாக உள்ளத்துள் பதித்துக் கொண்டேன்.

அவ்வெண்ணத்திலேயே, கண்ட காட்சியையே திரும்பத் திரும்ப மீட்டிக்கொண்டு விருப்பின்றி ராஜசபைக்குள்ளிருந்து வெளியே வந்து அடியார்கள் கூட்டத்தில் தனியனாய் நடந்து மண்டபத்தை அடைந்து பசியின்றி உண்டுவிட்டு, முன்தினம் மாலை நடை திறக்காமலிருந்த இளமையாக்கினார் கோயிலுக்கு ஜோதிடரை கூட்டிக்கொண்டு சென்றேன்.

இளமையாக்கினார் கோயில் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் முதல் தனியடியாராகிய திருநீலகண்ட குயவனாரையும் அவரது மனைவியையும் இளமையாக்கி அருளிய ஈசன் குடியிருக்கும் ஆலயம்.

தன்னை விட்டுவிட்டு பரத்தையிடம் சென்றுவிட்டு வந்த கணவர் திருநீலகண்டர் தம்மைத் தீண்ட வரும்போது ‘எம்மை தீண்டுவீராயின் திருநீலகண்டம்’ என சிவபெருமானின் நீலகண்டத்தின் மீது சத்தியம்செய்து சொன்னதால் ‘அவரை மட்டுமின்றி அவர் சார்ந்த பெண் குலத்தையே இனி தன் வாழ்நாளில் என்றும் தொடமாட்டேன்’ என சபதம் மேற்கொண்டு, அதை அயலறியாவண்ணம் எந்நாளும் பின்பற்றி இளமை கழிந்து முதுமை எட்டியதை உலகுக்குக் காட்ட எண்ணிய சிவபெருமான் அடியார் வேடத்தில் வந்து திருவோடு ஒன்றை அவரிடம் தந்துவிட்டுப் போய் திரும்பவும் வந்து கேட்க (அவரே அதை மறைத்தும்விட்டு), சென்று பார்த்தவர் வைத்த இடத்தில் அத்திருவோடு இல்லாததை சங்கடத்தோடு சொல்ல, ‘அதை நீதான் எடுத்தாய்’ என அடியவர் கோபத்துடன் கூற, ‘இல்லவே இல்லை’ என அவர் மறுக்க, ‘அப்படியாயின் உன் மனைவியின் கையைப் பிடித்துக்கொண்டு இக்குளத்திலே மூழ்கிச் சொல் நம்புகிறேன்’ என ஊர் மக்கள் முன்னால் அடியார் சொல்ல, அப்போதும் தான் கொண்ட சபதத்தில் உறுதியோடு நின்று தன் மனைவியைத் தீண்டாமல் ஒரு கோல்கொண்டு அதை ஆளுக்கொரு பக்கம் பிடித்துக்கொண்டு உள்ளே மூழ்கி அவர் எழ, இளமையாக்கினார் இருவரையும் இளமை ஆக்கினார் என்பார் சேக்கிழார்.

மிகப் பழமையான கோயில். சென்று திருப்புலீஸ்வரர் என்னும் இளமையாக்கினாரையும் திரிபுரசுந்தரியையும் தரிசித்துவிட்டு வந்து பெரிய கோயிலுக்குள் போய் இன்னொரு சுற்று சுற்றிவிட்டு, வெளியில் தேரடி அருகில் போட்டிருந்த புத்தகத் திருவிழாவுக்கு சென்றுவிட்டு மறுபடியும் மண்டபத்திற்கு வந்தோம்.

சுவையான மதிய உணவு தயாராக இருந்தது. ”இவங்க சென்னை தியாகராய நகர சேர்ந்தவங்க. ஒவ்வொரு வருஷமும் திருவிழாவுக்கு வந்து தங்கி அடியாருக்கு சமைத்துப் போடுறத தன் வாழ்நாள் பாக்கியமா நினைக்கறவங்க. சாமிய கூட போய் பார்க்க மாட்டாங்க. சாமி பார்த்துட்டு வர்ற நாமதான் இவங்களுக்கு சாமி’’ என்றார் சிவதீபன், சாப்பாடு பரிமாறிவிட்டுப் போன பெண்மணியைக் காட்டி.

வியப்பாக இருந்தது. இப்படி எத்தனை எத்தனை மனிதர்கள் என நினைத்துக்கொண்டேன்.

சிறிது ஓய்வுக்குப் பின் சரியாக மூன்று மணிக்கு மேல் மறுபடியும் கிளம்பி கோயிலுக்குப் போனோம். பெருங்கூட்டம் இருந்தது. அதிகமும் உள்ளூர்காரர்கள். ”யாரு எங்கே போயிருந்தாலும் செரி, சாமிய பார்க்க தவறாம வந்துருவோம். முடியாதவங்க சாமி பார்த்துட்டு வர்றவங்களையாவது பார்த்துருவோம்’’ என்றார் ஒரு பெரியவர்.

‘இப்போ அப்போ’வென சரியாக ஆறு மணிக்கு ராஜசபைக்குள்ளிருந்து நடராஜரையும் சிவகாமி அம்மையையும் பஞ்சமூர்த்திகளோடு புறப்பாடு செய்து மேளதாள தீபதூபங்களோடு நடன மண்டபத்துக்குள் முழு அலங்காரத்தில் தூக்கிக்கொண்டு ஆடிவந்து, இருவத்தோராம் படிக்கட்டில் இறங்கி நேராக உள்பிரகாரத்துக்குள் போய் பொன்னம்பலத்திற்குள் நுழைந்து சிற்றம்பலத்துள் வைத்தார்கள்.

ஒருபக்கம் வெளியில் நின்றிருந்த கூட்டம் வேகமாக குறைந்தாலும் உள்ளே அதிகமாகிக் கொண்டிருந்தது. ”மேற்கு வழியா போனா எளிதா உள்ளே போயிடலாம்’’ என்றேன். ஜோதிடரும், ”சரி’’ என்றார். நினைத்ததுபோல் எளிதாக உள்நுழைந்து கருவறை முன்னால் போய் கூட்டத்தை கூட்டிக்கொண்டு நின்றோம்.

திரும்பவும் மாணிக்கவாசகரை கூட்டிவந்து பொன்னம்பலம் முன்னால் நிற்கவைத்து பதிகம் பாடி கருவறைக் கதவை திறந்தார்கள். மறுபடியும் நடராஜர் வடிவை கண்ட மாத்திரத்தில் கண்ணீர் பீறிட்டு வந்தது.

ஒரு கட்டத்துக்கு மேல் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை. ‘சரி போகலாம்’ என முடிவெடுத்து மெல்ல நடந்து மண்டபத்துக்கு வந்தோம்.

மூன்று நாட்கள், எத்தனை எத்தனைக் காட்சிகள் என நினைத்துக்கொண்டு இரவு உணவை பசியின்றி உண்டுவிட்டு, அங்கிருந்து பேருந்து நிலையம் வந்து சென்னை செல்லும் பேருந்தில் ஏறி உட்கார்ந்தோம்.

‘தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்ற கோஷம் மட்டும் விடாமல் வெகுநேரமாகியும் செவிக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது.

[முற்றும்]

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=