ஆதிரையில் ஆதிரையான் – 2

ஆதிரையில் ஆதிரையான் – 1

நேரம் நள்ளிரவு ஒரு மணி. ”படுத்து கொஞ்சநேரம் தூங்குங்க. எழுந்து குளிச்சிட்டு மூணு மணிக்கு போனாக்கா சாமி வெளிய வர்றத பார்க்கலாம்’’ என்றார் சிவதீபன்.

எங்கள் யாருக்கும் தூக்கம் வரவில்லை. அதிலும் நான் தூங்கினால் அவ்வளவு சீக்கிரத்தில் எழமாட்டேன் என்பதை நன்கறிந்தவன். அதனால் தூங்காமல் விழித்திருந்து இரண்டு மணிக்கு ஜோதிடரை கூட்டிக்கொண்டு மண்டபத்தின் மேற்பகுதியில் இருந்த குளியளறையில் போய் குளித்துவிட்டு வந்து சரவணக்குமாரையும், ரத்தினவேலையும் அனுப்பி வைத்தோம்.

சரியாக இரண்டு முப்பதுக்கு நால்வரும் கிளம்பி கொட்டும் பனியில் இன்னோர் சிறுகுளியல் போட்டுக்கொண்டு போய் சுடச்சுட ஆளுக்கொரு தேநீர் அருந்துவிட்டு கிழக்கு கோபுரம் வழியாக கோயிலுக்குள் நுழைந்தோம்.

ஓரளவுக்கு கூட்டம் இருந்தது. அதிலும் அதிகமானோர் இரவு முழுக்க அங்கேயே இருந்தவர்கள். நேராகப் போய் நடன மண்டபத்தின் முன்னால் நின்று மின் விளக்குகளால் ஒளிர்ந்த ராஜகோபுரத்தையும், அதன் மேலே தெரிந்த தெளிவானையும், அதில் ஆங்காங்கே மிளிர்ந்துகொண்டிருந்த நட்சத்திரங்களையும், அதன் நடுவில் வெண்பொட்டு போல் அழகிட்டுக்கொண்டிருந்த வட்டநிலவையும் பார்த்துவிட்டு, அருகிலிருந்த படிக்கட்டு ஒன்றில்போய் சிறிதுநேரம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு உள்ளே போனோம். 

நள்ளிரவு வரைக்கும் முகம் மட்டுமே காட்டிக்கொண்டிருந்த நடராஜர் இப்போது முழு அலங்காரத்துடன் தன் மொத்த வடிவத்தையும் காட்டிக் கொண்டிருந்தார். மெல்ல ஒவ்வொருவராகச் சென்று பார்த்து ரசித்துவிட்டு வந்து ஓரிடத்தில் வரிசையாக புறப்பாடு ஆனால் காண ஏதுவாக உட்கார்ந்து கொண்டோம்.

நொடிக்கு நொடி பக்தர்கள் கூடிக் கொண்டிருந்தார்கள். சிறுவர் முதல் பெரியோர் வரை அனைத்து வயதினரும் கலந்திருந்தனர். சரியாக மூன்று முப்பது மணி இருக்கும். சட்டெனக் கூட்டத்தினர் மத்தியில் ஓர் ஆர்ப்பரிப்பு. பின்னாலிருந்த இரு பெரும் மணிகள் மேள நாதஸ்வரத்தோடு சேர்ந்து ஒலிக்கத் தொடங்கியது.

இவ்வளவு நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தவர்கள் சொல்லிவைத்ததுபோல் எழுந்து நிற்க, விண்ணைக் கிழிக்கும் அளவுக்கு ஓம் நமச்சிவாய கோசம் ஒலிக்க ஆரம்பித்தது. சட்டென்று சிற்றம்பலம் முன்னிருந்த பொன்னம்பலம் திறக்கப்பட்டு கிழக்குப் பக்கமாக நடராஜரை வெளியில் எடுத்து வந்தார்கள்.

இதுவரை பார்த்திடாத அலங்காரத்தில் அதுவும் கண்டதும் மெய்சிலிர்க்கத் தூண்டும் வகையில் வைரம் பதித்த கிரீடம் தொடங்கி முத்து மாலை வரைக்கும் அவ்வளவு நேர்த்தியாக ரசித்து ரசித்து அணிவித்திருந்தார்கள். சட்டென்று கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைபோல் அங்குமிங்கும் திமிரியது. சிலநிமிடம் பார்த்தவன் என்னை அறியாமல் கண்கலங்கி அழத் தொடங்கிவிட்டேன். பின்னாலேயே சிவகாமி அம்மனையும் முழு அலங்காரத்தில் தூக்கி வந்தார்கள்.  

தொடர்ந்து நடராஜரை தீப தூபங்கள் அணிவகுக்க மேள தாளம் வெளிநிறைக்க பக்தர்களின் நமச்சிவாய கோஷங்களுக்கு மத்தியில் உட்பிரகாரத்திலும் அதற்கடுத்த பிரகாரத்திலும் எடுத்துவந்து இருபத்தோராம் படிக்கட்டு வழியாக வெளியில் தூக்கிப்போய் நடன மண்டபத்துள் நுழைந்து வலது பக்கம் வளைந்து திரும்பி கிழக்கு கோபுரம் தாண்டி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வீதி வழியாகச் சென்று தேரில் ஏற்றினார்கள்.

சிதம்பரம் கோயிலும் அதன் நடராஜர் திருமேனியும் எவ்வளவு பார்த்தாலும் தீராதது. இன்ன காலத்தைச் சேர்ந்தது என ஒருவராலும் உறுதிபட சொல்ல முடியாதது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் சேர சோழ பாண்டிய பல்லவ என ஒவ்வொரு நாட்டு மன்னர்களும் போட்டி போட்டுக்கொண்டு திருப்பணி செய்த ஒரே கோயில்.

ஆதியில் தில்லைவனமாக இருந்ததாகவும், அதன் நடுவில் ஒரு மரத்தடியில் மூலநாதராக சிவபெருமான் லிங்கவடிவில் வீற்றிருந்ததாகவும், உலக நன்மைக்காக வியாக்ரபாதரும் பதஞ்சலி முனிவரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க அங்கே வந்து மன்றத்தில் ஆனந்த நடனம் ஆடியதாகவும், அது பின்னாளில் இத்தனைப் பெரிய ஆலயமாக உருவெடுத்ததாகவும் சொல்கிறது கோயில்புராணம்.

‘கட்டிடங்கள் கண்களால் பார்க்கத்தக்க வரலாறு’ என்பார் கிப்பன் பிரபு, தான் எழுதிய புகழ்பெற்ற ’ரோமப் பேரரசின் வீழ்ச்சியும் சரிவும்’ எனும் நூலில். ஒரு கட்டிடமானது அக்கட்டிடத்தை உருவாக்கிய சமூக அமைப்பின் இயல்பினைக் கொண்டிருக்கும். அவர்களது எண்ணங்களின் வெளிப்பாடு குறியீடுகளாக அக்கட்டிடமெங்கும் உறைந்திருக்கும். அதோடு, அங்கே புழங்கிய மனிதர்களால் அவர்களது நினைவுகளால் காலப்போக்கில் அக்கட்டிடத்தையே ஒரு மாபெரும் குறியீட்டுத்திரளாக மாற்றியிருக்கும்.

அதனால்தான் படையெடுப்பின்போதெல்லாம் கட்டிடங்கள் முதலில் குறிவைத்து சிதைக்கப்படுகின்றன. மீண்டும் திருத்தியும் மாற்றியும் கட்டப்படுகின்றன. இன்றுள்ள பெரும்பாலான ஆலயங்களின் ராஜ கோபுரங்களும், மண்டபங்களும் நாயக்கர்களால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்லல் தகுமென நினைக்கிறேன். பெரும் பாரம்பரியத்துக்கும் பண்பாட்டுக்கும் பெருமைக்கும் சொந்தக்காரர்களான நாம் இப்போது அவற்றின் சாட்சியங்களாக எஞ்சியிருக்கும் கட்டிடங்களை, அதிலும் குறிப்பாக ஆலயங்களை கண்முன்னால் கொஞ்ச கொஞ்சமாக அழியவிட்டுக்கொண்டிருக்கிறோம் [கிராமங்களில் இருக்கும் சிறு கோயில்கள் தொடங்கி சிதம்பரம் போன்ற பேராலயங்கள் வரைக்கும் அவற்றுள் அடக்கம்].

இதில் வருத்தம் என்னவென்றால் ஆலயங்களுக்கு செல்லும் தனிமனிதர்கள் தொடங்கி கோயில்களை தம் கட்டுப்பாட்டின் கீழ் வைத்து ஆட்சிசெய்வதாய் சொல்லிக்கொள்ளும் ஆதினங்கள், அறநிலையத்துறை வரைக்கும் அவற்றின் மதிப்பென்ன என்பதை உணராமல் அல்லது உணர்ந்தும் உணராததுபோல் அழியவிட்டு வேடிக்கை பார்ப்பதுதான்.

உலகெங்கிலும் சிவனுக்கு எத்தனைக் கோயில்கள் இருந்தாலும் அவற்றின் தலைமையகமாக இருப்பது இச்சிதம்பரமே என்பது ஐதீகம். அதிலும் சிவபெருமான் நடஞ்செய்யும் பஞ்ச சபைகளில் (பொன், ரத்தினம், தாமிரம், வெள்ளி, சித்திரம்) பொற்சபையாகவும், பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமாகவும் இருப்பது [திருவண்ணாமலை நினைக்க முக்தி என்றால், சிதம்பரம் தரிசிக்க முக்தி].

ஒன்றை பல தடவை கவனித்திருக்கிறேன். சிதம்பரம் கோயில் கருவறையைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் எப்போது சென்று நின்றாலும் ஆகாயத்தில் நிற்பதுபோல் தோன்றும். அதிலும் குறிப்பாக தினமும் காலை ஏழு மணிக்கு நடக்கும் பள்ளியெழுச்சி பூஜையின்போது இவ்வெண்ணம் சற்று கூடுதலாக எழுவதுண்டு.

பொழுது கொஞ்சம் கொஞ்சமாகப் புலர்ந்து கொண்டிருந்தது. முதலில் விநாயகர் தேர் புறப்பட்டது. அதையடுத்து முருகன் தேர். மூன்றாவதாக நடராஜர் தேர். அதன்பின் சிவகாமியம்மன் தேரும், சண்டேசர் தேரும்.

தேர் புறப்பட்டு சற்று தூரம் செல்லும் வரைக்கும் பார்த்துவிட்டு அங்கிருந்து நடந்து தங்கியிருந்த மண்டபத்துக்கு வந்தோம். மிகச் சுவையான காலை உணவு எங்களுக்காக தயாராக இருந்தது. உண்டுவிட்டு அருகிலிருக்கும் பாடல் பெற்ற தலங்களுக்கு செல்லலாம் என நால்வரும் [ராஜேஷ் தவிர்த்து] புறப்பட்டோம்.

முதலில் சிதம்பரம் நகரின் கிழக்குப் பகுதியில் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அர்ச்சுனனுக்கு சிவபெருமான் பாசுபதம் தந்தருளிய தலமாகச் சொல்லப்படும் திருவேட்களம் கோயிலுக்குச் சென்று எங்களை சற்றும் சட்டை செய்யாமல் நகர்பேசியில் மூழ்கிப்போயிருந்த சிவாச்சாரியாரை நாங்களும் சட்டை செய்யாமல் நேராக உள்ளே போய் பாசுபதேஸ்வரர் என்னும் பாசுபதநாதரையும், சற்குணாம்பாள் என்னும் நல்லநாயகியையும் தரிசித்துவிட்டு, அங்கிருந்து சற்று தூரத்தில் வயல்வெளி நடுவில் போகும் சிறு சாலை வழியாகப் போய் சிவபுரியின் ஒரு பகுதியில் உள்ள திருக்கழிப்பாலை கோயிலை அடைந்தோம்.

ஆலய லிங்கத்தை கண்டதும் முதலில் அதிர்ச்சியானேன். முழுதும் உடைபட்டு அடிப்பக்கம் மட்டுமே எஞ்சியதுபோல், அதுவும் ஒருவகை வெண்நிறமாக இருந்தது. குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்துபோன சுயம்புலிங்கம் என்றார்கள். அதன் பின்புறம் அழகிய திருமணக்கோலத்தில் சிவனும் பார்வதியும் சிற்பமாக இருப்பதை கண்டுவிட்டு பால்வண்ணநாதரையும் வேதநாயகியையும் இன்னொரு தடவை நன்றாகப் பார்த்துவிட்டு வெளியில் வந்தோம். 

பின் அங்கிருந்து மிக அருகில் (பக்கத்து தெருவில் என்று கூட சொல்லலாம்) இருந்த திருநெல்வாயில் என்று சொல்லக்கூடிய சிவபுரி உச்சிநாதர் கோயிலுக்கு சென்று, வெளியூரிலிருந்து வந்தவர்களை மகிழ்வுடன் வரவேற்று உபச்சாரம் செய்யாமல் எங்களிடமிருந்து பணம் பிடுங்குவதையே தன் நோக்காகக் கொண்டு அதில் ஓரளவுக்கு வெற்றியும் கண்ட சிவாச்சாரியாரை எதுவும் சொல்லாமல் சிறு புன்னகையில் கடந்துபோய் உச்சிநாதரையும் கனகாம்பிகையையும் வணங்கிவிட்டு, சிதம்பரம் ரயில் நிலையம் அருகிலிருந்த தில்லை வாழ் அந்தணர்களில் ஒருவரான உமாபதி சிவாச்சாரியார் மடத்துக்கு வந்தோம்.

உமாபதி சிவாச்சாரியார் புறச்சந்தானக் குரவர்களில் நான்காமவர். சைவ சித்தாந்த நூல்களில் அட்ட நூல்கள் எனச் சொல்லப்படும் திருவருட்பயன், சிவப்பிரகாசம், வினாவெண்பா, போற்றிப்பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மைநெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் போன்றவற்றை எழுதியவர். அவரது மடத்தை பார்த்துவிட்டு சிறிது நேரம் அங்கே உட்கார்ந்திருந்துவிட்டு கிளம்பி சிதம்பரத்துக்குள் வந்தோம்.

அதற்குள் நேரம் மதியம் ஒரு மணி ஆகியிருந்தது. சிவதீபன் எங்கள் நால்வரையும் உடனே புறப்பட்டு கோயிலின் மேற்குப் பக்கமாக இருக்கும் இன்னொரு மண்டபத்திற்கு வரச்சொன்னார். காரை அங்கேயே ஓரமாக நிறுத்திவிட்டு பொடி நடையாக நடந்து சென்றோம்.

மதிய உணவு அப்போதுதான் அங்கே தாயாராகிக்கொண்டிருந்தது. காத்திருந்து உண்டுவிட்டு சற்று நேரம் ஓய்வாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு, அருகில் இரண்டு தெரு தள்ளி இருக்கும் இளமையாக்கினார் கோயிலுக்கு செல்லலாம் எனப் புறப்பட்டோம்.

ரத்தினவேல் மட்டும் முதலில் வரவில்லை என்றார். அதன்பின் எங்களின் ஆசை வார்த்தைகளையும், ”எதுக்கும் எங்க சட்டைய நல்லாப் பார்த்துக்கோங்க. இளமையாக்கினார் கோயிலுக்குப் போயிட்டு வரும்போது சின்னப் பசங்களா மாறிட்டா அடையாளத்துக்கு உதவும்’’ எனும் எனது நகைச்சுவையையும் கேட்டுவிட்டு எங்களுக்குமுன் கிளம்பினார்.

கோயில் இன்னும் நடை திறக்காமல் இருந்தது. கேட்டால் தாமதமாகும் என்றார்கள். சரி, என முன்னாளிருந்த குளத்தில் இறங்கி கால்களை மட்டும் நனைத்துக்கொண்டு (எங்கே முழுதும் நனைந்தால் இன்னும் இளமையாகி எங்களுக்கே எங்களை அடையாளம் தெரியாமல் போய்விடுமோ எனும் தன்னலத்தால்!!!) புறப்பட்டு பெரிய கோயிலுக்கு வந்தோம்.

நடராஜர் இல்லாமல் மூடப்பட்டிருக்கும் சிற்றம்பலத்தையும் மூலநாதரையும் சிவகாமி அம்மனையும் முருகன் சன்னதியையும் பார்த்துவிட்டு வடக்கு கோபுரம் வழியாக வெளியே வந்து ஆளுக்கொரு தேநீர் குடித்துவிட்டு, தேரோடும் வீதியில் பெரும்மக்கள் திரளுக்குள் நுழைந்து தேர் நிலைக்கு வரும் இடத்தருகில் போய் ஓரமாக நின்று கொண்டோம்.

காலையில் தேர் புறப்படும்போது இருந்ததைவிட இப்போது கூட்டம் இருமடங்கு அதிகமாக இருந்தது. அதிலும் மிகுதியாக இளையோர் முகங்கள். எங்கெங்கும் கைலாய வாத்தியங்கள் முழங்க ஒரே ஆட்டம் பாட்டம் குதூகலம்தான். தமிழகத்தில் அதுவும் சிவனுக்கு மட்டும்தான் இவ்வளவு பெரும் வெறித்தனமான பக்தர்குழாம் உள்ளது என்பதை கண்ணாரக் கண்டு உணர்ந்து கொண்டேன்.

இன்னொரு பக்கம் குழு குழுவாக ஆங்காங்கே உட்கார்ந்தும், நின்றும் கைதட்டி ரசித்து தேவாரமும் திருவாசகமும் பாடிக்கொண்டிருந்தார்கள். அதிகமும் தில்லையில் வந்து திருநாவுக்கரசர் பாடிய,

அரியானை, அந்தணர் தம் சிந்தை யானை,

    அருமறையின் அகத்தானை, அணுவை, யார்க்கும்

தெரியாத தத்துவனை, தேனை, பாலை, திகழ் ஒளியை,

                  தேவர்கள்தம் கோனை, மற்றைக்

கரியானை, நான்முகனை, கனலை, காற்றை,

          கனைகடலை, குலவரையை, கலந்து நின்ற

பெரியானை, பெரும்பற்றப்புலியூரானை, பேசாத நாள்

                         எல்லாம் பிறவா நாளே’

எனும் பதிகத்தைதான் (தேவாரம் – ஆறாம் திருமுறை – பெரிய திருத்தாண்டகம்) பாடிக்கொண்டிருந்தார்கள்.

தேர் மெல்ல மக்கள் திரளுக்குள் ஆடி அசைந்து வந்து நிலையில் நின்றது. அதன்பின் கூட்டம் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. அடுத்தென்ன என எதிர்பார்த்த நேரத்தில் மாணிக்கவாசகரை கோயிலுக்குள் இருந்து அழைத்து வந்து நடராஜர் தேர் முன்னால் நிற்கவைத்து திருவெம்பாவை (அவர் சார்பாக அவரே பாடுவதுபோல்) பாடி ஒவ்வொரு பாடல் முடியும்போதும் தீபாராதனை காட்டினார்கள்.

பின் காலையில் மேளதாளம் ஒலிக்க தீபதூபங்களோடு தேருக்கு அழைத்து வந்ததுபோல் கோயிலுக்குள் நடராஜரையும் சிவகாமி அம்மனையும் அழைத்துப்போய் ஆயிரங்கால் மண்டபம் என்று சொல்லக்கூடிய ராஜசபையின் முன்னால் வைத்தார்கள்.

ஏற்கனவே அதன் முன்பு பெருங்கூட்டம் கூடியிருந்தது. சரவணக்குமாரும் ரத்தினவேலும் சோர்வாகி மண்டபத்துக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டு புறப்பட்டு போனார்கள். நானும் ஜோதிடர் கிருஷ்ணனும் மட்டும் உள்ளே சென்று என்ன செய்கிறார்கள் எனப் பார்த்துகொண்டிருந்தோம்.

சிறிதுநேரம் திரையிட்டு மூடி வைத்திருந்தவர்கள் சட்டென்று திரைவிலக்கி தீபாராதனை காட்டினார்கள். அதன்பின் லட்சம் மலர்களாலும் மந்திரங்களாலும் அபிஷேகம் தொடங்கியது.

இவ்வளவு நேரம் பசி மறந்திருந்த எங்களுக்கு சட்டெனப் பசிக்க ஆரம்பித்தது. நேரம் பார்த்தோம். இரவு பதினொரு மணி. மெல்ல அங்கிருந்து நடந்து தெற்கு கோபுரத்தருகில் வந்தோம். சாப்பிட உணவிருந்தது. ஆளுக்கு கொஞ்சம் உண்டுவிட்டு மீண்டும் அபிஷேகம் நடக்கும் ராஜசபை வழியாகப் போனோம்.

நடராஜரும் சிவகாமி அம்மையும் கழுத்து வரைக்கும் மலர்களால் இப்போது மூடப்பட்டிருந்தார்கள். தூரத்தில் இருந்து பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது. மெதுவாகப் பக்கத்தில் போய் நின்று பார்த்துவிட்டு கோயிலை இன்னொரு தடவை சுற்றிவிட்டு அங்கிருந்து வர மனமின்றி மண்டபத்துக்கு வந்தோம்.

[இன்னும்]

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=