ஆதிரையில் ஆதிரையான் – 1

மன்னிய நாள்மீன் மதிகனலி என்றிவற்றை
முன்னம் படைத்த முதல்வனைப்பின்னர்தாம்
ஆதிரையான் ஆதிரையான் என்றென்று அயருமால்
ஊர்திரை நீர்வேலி உலகு

என்பது முதுபெரும் நூல்களில் ஒன்றான முத்தொள்ளாயிரத்தின் கடவுள் வாழ்த்துப் பாடல்.

அசுவினி முதலான நட்சத்திரங்களையும், திங்களையும், கனலுதலைச் செய்கின்ற கனலியையும் முற்காலத்திலேயே படைத்தவன் சிவன். ஆனால் இச்சுருண்டு வருகின்ற அலைகளையுடைய கடல் சூழ்ந்த உலகமானது அவன் ஆதிரைமீன் ஒன்றை மட்டுமே படைத்தது போல ஆதிரையான் ஆதிரையான் என்று சொல்லி மயக்கம் அடைகிறது என்பது இப்பாடலின் பொருள்.

ஆதிரைமீன் சிவனைப் போன்று எப்பொழுதும் ஆடிக் கொண்டிருப்பதாலும், சிவந்த நிறம் உடையதாலும், பிறை நிலவினோடு நோக்குங்கால் அரன் போல் தோன்றுவதாலும் ஆதிரை நாள்மீன் இறை இயல்பைக் கொண்டதாகச் சொல்வர் மூத்தோர்.

சிறுவயது முதல் எத்தனையோ கோயில்களுக்குச் சென்றிருக்கிறேன். எத்தனை எத்தனையோ கடவுளர் வடிவங்களை கண்டிருக்கிறேன். ஆனால் எந்தவோர் வடிவமும் செய்யாத ஒன்றை ஒவ்வொரு தடவை சென்று காணும்போதும் நிகழ்த்தி விடுகிறது சிதம்பரம் கோயில் நடராஜர் வடிவம்.

என்னை அறியாமல் மெய்சிலிர்க்க உள்ளம் உருகி கண்ணீர் தாரைதாரையாகக் கொட்டத் தொடங்கிவிடும். மிதமிஞ்சின பக்தியா என்று கேட்டால் சொல்லத் தெரியாது. எந்தக் கடவுளர் மேலும் மிதமிஞ்சிய பக்தி கொண்டவன் அல்லன் என்றபோதும் நடராஜர் மீது மட்டும் இப்படியோர் ஈர்ப்பு உண்டாகக் காரணம் யாதென்பதை இதுநாள் வரை என்னால் அறியமுடியவில்லை.

சிறுவயதில், சரியாக பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு – பத்தாவது படிக்கும்போது முதல் தடவையாக பள்ளிச் சுற்றுலா சென்றிருந்தபோது போகிறபோக்கில் சிதம்பரம் கோயிலுக்குள் கூட்டிப் போயிருந்தார்கள். அப்போது சரிவர கோயிலையும், கோயில் கருவறையில் இருந்த நடராஜர் வடிவத்தையும் உள்வாங்க முடியவில்லை. அதனால் அது வெறும் நினைவாக ஒரு புள்ளி போல் மனத்தின் ஓரத்தில் நின்றுவிட்டது.

அதன்பின் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனியாகப் போயிருந்தேன். அதுவும் மாணிக்கவாசகரின் சிவபுராணத்தை அங்கே போய் உட்கார்ந்து படித்தால் எப்படி இருக்கும் என்னும் மனப்பேச்சை கேட்டு [இதுகுறித்து ஏற்கெனவே என் ‘அகத்திரியில் ஏற்றிய நெருப்பு’ நூலில் விரிவாக எழுதியிருக்கிறேன்].

சரியாக நான் கிழக்கு கோபுரம் வழியாக உள்நுழைந்து நடன மண்டபம் கடந்து இருபத்தோராம் படியில் இறங்கி கம்பீரமான கற்கோயிலை கண்டு ரசித்துக்கொண்டு உள்பிரகாரம் சென்று பொன்னம்பலம் முன்னால் நின்று சிற்றம்பலத்தில் குனித்த  புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணீறும் இனித்த முடைய வெடுத்த பொற் பாதம்’ சகிதமாக ஆடிக் கொண்டிருக்கும் ஆடல்வல்லானைக் கண்டதும் என்னையறியாமல் முதல் தடவை கண் கலங்கியது இன்னமும் கண்முன்னால் அப்படியே உள்ளது.

அன்று மட்டும் காலை தொடங்கி முன்னிரவு வரைக்கும் குறைந்தது ஐம்பது தடவை நடராஜர் வடிவை கண்டிருப்பேன். துளியும் திகட்டவில்லை. திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டியது. ஒவ்வொரு தடவை பார்த்துவிட்டு கிளம்பும்போதும் இன்னொரு தடவை என மனம் கேட்கும்.

அதுமுதல் மூன்று முறை தனியனாய்ச் சென்று கண்டுவிட்டு வந்திருக்கிறேன். ஒவ்வொரு தடவையும் இதே கதைதான். ஏதோவோர் புள்ளியில் நடராஜரை சிவபெருமானுக்கு உரிய மார்கழி திருவாதிரையில் அதுவும் சிற்றம்பலத்தில் இருந்து புறப்பாடு கொண்டு வெளி வந்து தேரேறி உலா செல்வதை பார்க்கவேண்டும் எனத் தோன்ற, சென்றாண்டே செல்ல திட்டமிட்டிருந்தேன். ஏதோ காரணத்தால் கடைசிநேரத்தில் போக முடியாது போனது.

‘சரி, இந்த ஆண்டாவது செல்லலாம். அதுவும் சிவன் மீது பெரும் பக்தி பூண்ட அடியார் கூட்டத்தோடு செல்லலாம்’ என்ற முடிவோடு ரத்தினவேல், சரவணக்குமார், ராஜேஷ், கிருஷ்ணன் என்கிற நான்கு அடியார்களோடு சென்னையிலிருந்து டிசம்பர் பதினெட்டாம் தேதி பிற்பகலில் புறப்பட்டேன்.

செல்லும் வழியெங்கும் திருமுறைகள், சிவபெருமான், கோயில்கள், நாயன்மார்கள் பற்றிய பேச்சுதான். இரவு எட்டு மணிக்குள் சிதம்பரத்தை அடைவது எங்கள் திட்டம். அதற்குள் போகும் வழியில் இருக்கும் ஓரிரு பாடல் பெற்ற தலங்களுக்கு சென்று பார்த்துவிட்டு போகலாம் என நினைத்தோம்.

முதலில் பண்ருட்டி அருகில் பெண்ணையாற்றின் கரையோரத்தில் சுந்தரர் தவநெறி வேண்டிப்பெற்ற திருத்தளூர் என்னும் திருத்துறையூர் கோயிலுக்குச் சென்றோம். வழிதெரியாமல் எதிர்பட்டோரிடம் கேட்டுக் கேட்டுச் சென்றதில் பின்பக்க வழியைக் காட்டிவிட்டார்கள். மிகக் குறுகலானத் தெருவில் சிறியதொரு கோயில் போன்றிருந்தது. உள்ளே நுழைந்து பார்த்தால் ஓரளவுக்கு பெரிய கோயிலாகவே இருந்தது.

சென்று அங்குள்ள சிஷ்டகுருநாதேஸ்வரர் என்னும் பசுபதீஸ்வரரையும் சிவலோகநாயகி என்னும் பூங்கோதைநாயகியையும் தரிசிக்கும் வரை சைவ சந்தானக் குரவர்களுள் ஒருவரான அருணந்தி சிவாச்சாரியார் அவதரித்த தலம் அது என்பது எங்கள் யாருக்கும் தெரியாது. நான்தான் அங்கிருந்த பலகை ஒன்றைப் பார்த்துவிட்டு சரவணக்குமாரிடம் சொன்னேன். வியப்போடு வந்து பார்த்தவர், அவரது சமாதிக்கோயில் இருக்கும் இடம் கேட்டு விசாரித்து எங்களை அங்கே கூட்டிப் போனார்.

‘அருவமே இறைவ னாகில் அறிவின்றா காய மாகும் 

உருவமே யென்னிற் பூதக் கூட்டத்தில் ஒருவ னாகும் 

மருவிய இரண்டுங் கூடி நிற்பவன் என்னின் மண்மேல் 

இருவிசும் பொருகல் லேந்தி நிற்குமோ இயம்பி டாயே’

என்பது அவர் இயற்றிய சிவஞான சித்தியார் பாடல்.

சைவ சித்தாந்தம் என்று சொல்லக்கூடிய திருவுந்தியார் முதலான பதினான்கு சாத்திர நூல்களில் சிவஞான சித்தியார், இருபா இருபது என்னும் இரண்டு நூல்களை இயற்றியவர் அருணந்தி சிவாச்சாரியார். சைவ சித்தாந்த நூல்களுள் தலையாயதாகக் கருதப்படும் சிவஞான போதத்தை இயற்றிய மெய்கண்டாரின் தலைமை மாணாக்கர். மறைஞானசம்பந்தரின் ஆசிரியர்.

ஆளரவமற்றிருந்த அவரது சமாதிக் கோயிலைப் பார்த்துவிட்டு வழியில் உள்ள பேரழகு மிக்க காளியையும் கண்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டு அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்றான திருவதிகை வீரட்டானக் கோயிலுக்கு வந்தோம்.

சிவபெருமான் வீரச்செயல் நிகழ்த்திய தலத்தினை வீரட்டானம் (வீரம் – ஸ்தானம்) என்பர். அவை எட்டுத் தலங்களில் நிகழ்ந்தமையினால் அட்டானம் (அஷ்ட – ஸ்தானம்) என்பதுண்டு. அதாவது இறைவனது வீரச்செயல்கள் நிகழ்ந்த எட்டுத்தலங்களையும் அட்டவீரட்டானம் (அஷ்டம் – வீரம் – ஸ்தானம்) என்பர். அவற்றில் திரிபுரம் எரித்த வீரச்செயல் நிகழ்ந்த தலம் திருவதிகை என்கிறது தலபுராணம்.

அப்பர் வழிபட்ட, உழவாரம் செய்த ஆலயம் என்பதால் தன் பாதம் படக்கூடாது என நினைத்து சுந்தரர் உள்நுழைய மறுத்த தலம். ஞானசம்பந்தருக்கு சிவன் திருநடனம் காட்டிய கோயில். இத்தனைக்கும் மேலாக இத்தலத்து இறைவன் அப்பருக்கு சூலை தந்து ஆட்கொண்டவர். கெடில நதிக்கரையில், சரக்கொன்றையை தலமரமாகக் கொண்டு அமைந்திருக்கும் மிகப் பிரமாண்டமானக் கோயில்.

நாங்கள் சென்ற நேரம் ஆலயத்தைச் சுற்றி வயது வித்தியாசமின்றி கூட்டம் கூட்டமாக வலம் வந்துகொண்டிருந்தார்கள். பவுர்ணமிக்கு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது போல் இங்கே கோயில் வலம் என நினைத்துக் கொண்டு காரிலிருந்து இறங்கி அற்புதமானக் கலைவேலைப்பாடுகள் நிறைந்த [கிழக்கு] ராஜகோபுரம் வழியாக கோயிலுக்குள் நுழைந்தோம்.

இருபக்கமும் நவகிரகங்கள் தொடங்கி இன்னின்ன ராசிக்கு, நட்சத்திரத்துக்கு இன்னின்ன மரம் எனப் பெயர் பலகை வைத்து, அதற்கான மரங்களையும் நட்டிருந்தார்கள். பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது. அதைவிட அழகு கோயிலும் அதன் சிற்பத்தொகுதியும்.

சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ்

  சுடர்த் திங்கட் சூளாமணியும்

வண்ண உரிவை யுடையும்

  வளரும் பவள நிறமும்…’

எனத் தொடங்கும் அப்பர் பதிகத்தை உள்ளுக்குள் பாடிக்கொண்டு நீள்வரிசையில் நின்று கோயில் கருவறைக்குள் இருந்த மிகப்பெரும் வீரட்டநாதரையும், வெளியில் அருகருகில் தனித்தனியாக இருந்த திரிபுரசுந்தரியையும், அப்பரையும் வணங்கிவிட்டு ‘இன்னொரு நாள் இக்கோயிலை பார்ப்பதற்காகவே ஒதுக்கி வருவோம்’ எனப் பேசிக்கொண்டு புறப்பட்டோம்.

சரியாக நாங்கள் வெளியில் வரும் நேரம் கோயில் வெளிப் பிரகார மண்டபத்தில் நடராஜருக்கு தீபாராதனை நடந்துகொண்டிருந்தது. சென்று அருகில் நின்று பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

எந்த சிவன் கோயிலுக்கு சென்றாலும் இப்போதெல்லாம் மறக்காமல் அங்குள்ள நடராஜரை தேடிப்போய் பார்த்துவிடுவது வழக்கமாகிவிட்டது. ஒருவேளை எங்கும் கண்ணில் படவில்லை என்றால் வலியப்போய் அங்குள்ளோரிடம் கேட்பதும், அப்படியே பூட்டி வைத்திருந்தால் திறக்கச் சொல்லி பார்ப்பதும் உண்டு. அவ்வாறு இக்கோயிலில் நடராஜர் சபையில் சிலை இல்லாமல் இருந்ததை பார்த்துவிட்டு அருகில் இருந்தவரிடம் கேட்டேன். ”சாமி இப்பதான் ஊர்வலம் போயிருக்காரு” என்றார். ‘சரி, நாம பார்க்கணும்னு இருந்தா பார்ப்போம்’ என நினைத்துக்கொண்டு வெளியில் வந்தேன். அதேபோல் பார்த்துவிட்டேன்.

சைவ சித்தாந்த ஆசிரியர் நண்பர் சிவதீபன் எங்களை எட்டு மணிக்குள் சிதம்பரத்திற்கு வரச்சொல்லியிருந்தார். நேரம் அப்போதே எட்டைத் தாண்டியிருந்தது. ரத்தினவேல் பண்ருட்டி செல்லாமல் வேறு குறுக்கு வழியில் செல்லலாம் எனக் காரை விரைந்து ஓட்டிப் போனார். இரு பக்கமும் மரங்களும் வயல்களும் மிகுந்த சாலையில் சென்று கெடில நதியைக் கடந்து ஒரு கோயில் முன்னால் போய் நின்றோம். என்ன கோயில் என்று பார்த்தால் திருமாணிக்குழி. மாலோடு நால்வரும் வந்து வழிபட்ட தலம். ஏற்கனவே இக்கோயில் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். தீபாராதனை காட்டும்போது மட்டுமே திரை விலக்கப்பட்டு கருவறையில் உள்ள வாமனபுரீஸ்வரரை பார்க்க முடியும்.

வேகவேகமாக இறங்கி கோயிலுக்குள் நுழையவும் நடை மூடப் போகவும் சரியாக இருந்தது. ஓடிவந்த எங்களைப் பார்த்துவிட்டு ”கொஞ்ச முன்னாடி வந்திருந்தா சாமிய பார்த்திருக்கலாம். இருந்தாலும் வாங்க, அம்பாள பார்க்கலாம்’’ எனக் கூட்டிப் போய் அம்புஜாட்சி என்னும் உதவிநாயகியை காட்டிவிட்டு, சர்க்கரை பொங்கலும் புளிசாதமும் சுண்டலும் தந்தார்கள். மகிழ்வோடு வாங்கிக்கொண்டு வந்து கொடிமரம் அருகில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினோம்.

கோயிலில் இருந்த ஒருவர்தான் சொன்னார், ”இந்த வழியா போயி மாட்டிக்காதீங்க. நேரா கடலூர் போய்ட்டு போயிருங்க, அதான் நல்லது’’. சரியென்று வந்த வழியே சற்று தூரம் பின்னால் வந்து கடலூர் செல்லும் சாலையில் வளைந்து வழியில் ஓரிடத்தில் மட்டும் நின்று தேநீர் அருந்திவிட்டு பத்தரை மணி வாக்கில் தில்லையை அடைந்தோம்.

காலை முதலே சிதம்பரத்தில் தேர்த்திருவிழா நடக்காது என்னும் செய்தி தீயாய் பரவியிருந்தது. அதுவும் அரசாங்க அறிவிப்பு. ஆனால் தில்லைவாழ் அந்தணர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில் நிர்வாகமோ திருவிழா நிச்சயம் நடந்தே தீரும் எனச் சொல்லிக்கொண்டிருந்தது. ‘ஏன்தான் இந்த அரசாங்கம் தேர்தலுக்காக கூடும் கூட்டத்தால் பரவாத கொரோனா வைரஸ்… தேருக்காக கூடும் கூட்டத்தால் மட்டும் பரவும் என நினைக்கிறதோ?’ என உள்குரலில் சொல்லிக்கொண்டு கிழக்கு வாசல் வழியாக நால்வரையும் கோயிலுக்குள் கூட்டிப்போனேன்.

எங்கும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஆலயம் ஜொலித்துக் கொண்டிருந்தது. வேகமாக உள்ளே சென்றவர்கள் வழியில் ஆங்காங்கே சூழ உட்கார்ந்து தேவாரம் பாடிக்கொண்டிருந்தவர்களை பார்த்தும் பார்க்காமல் பொன்னம்பலம் முன்னால் போய் நின்று சிற்றம்பலத்துள் உடல்முழுவதும் மறைக்கப்பட்டு முகம் மட்டுமே தெரிவது போல் காட்சி தந்த கரியநிற நடராஜரைக் கண்டதும் என் கண்கள் தானாகக் கலங்க ஆரம்பித்துவிட்டது.

‘ஏன் இந்த நடராஜர் வடிவம் மட்டும் எப்போது வந்து பார்த்தாலும் என்னை அழவைத்து விடுகிறதோ?’ என எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்.

மெல்ல ஒவ்வொரு பிரகாரமாகச் சுற்றிவிட்டு கிழக்கு கோபுரம் வழியாக வெளியில் வந்து நண்பர் சிவதீபனை சந்தித்து சற்று நேரம் அவரோடு பேசிக்கொண்டிருந்தோம். பேச்சு காலையில் வெளியானச் செய்தி தொடங்கி, சற்றுமுன் கண்டுவிட்டு வந்த நடராஜர் அலங்காரம் வரைக்கும் நீண்டது.

ஒரு கட்டத்துக்கு மேல் எங்கள் ஐவருக்கும் பெரிதாய் பசிக்க ஆரம்பித்துவிட்டது. தெற்கு கோபுரத்தருகில் சென்றால் உணவு கிடைக்கும் என்றார்கள். சென்றோம் கிடைத்தது. ராஜா தீட்சிதர் என்பவர் தன் தனிப்பட்ட விருப்பின் பேரில் தினந்தோறும் அங்கே அன்னதானம் வழங்குவதாகச் சொன்னார்கள். மனதார அவருக்கு நன்றி சொல்லிவிட்டு ஆளுக்கு கொஞ்சம் உண்டுவிட்டு இன்னொரு தடவை கோயிலுக்குள் போய் அடுத்தநாள் செய்ய வேண்டிய காலபூஜைகளை முன்கூட்டியே செய்வதைப் பார்த்துவிட்டு கதைகள் பேசியபடி நடந்து அடியார்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்த மண்டபம் ஒன்றிற்கு வந்தோம்.

[இன்னும்]

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=