மலையாற்றுப்படை – 1 : பேரிசை நவிரம்

”நம்மை நாம் சுமக்கும் அரிய வாய்ப்பை, இயற்கை மலையேறும்போது மட்டுமே கொடுக்கிறது.’’

              (ஜனவரி 31, 2026)

                         ***

மலையாற்றுப்படை – 1 : பேரிசை நவிரம்

சரித்திர நூல்களில் கூறப்படுவது போல இந்த ஆண்டின் இன்ன தேதியில் என்று குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை என்றாலும், மிகச்சிறிய வயதிலேயே, ஏழு அல்லது எட்டாக இருக்கலாம். மலையேறத் தொடங்கிவிட்டேன். அதுவும் முதல் மலையே எங்கள் கிராமத்தில் உள்ள பெரிய மலையான அரசங்கல்தான்.

அதன் அடிவாரத்தில் இருக்கும் பூங்காவனம் ஆச்சாரி நிலத்தில் அன்று தளவு போட்டார்கள். அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன. ஐயாவுடன் சென்றிருந்தவன், என் வயதுடைய சிறார்களுடன் கூடிக்கொண்டு ஞானாப்பழம் பறித்துத் தின்னப் போனேன். முதல் செடி, அடுத்த செடி என்று எங்களை அறியாமல் ஏறி, ஒருகட்டத்தில் பாதி மலையை எட்டிவிட்டோம். ஒருபக்கம் ஐயா தேடுவாரோ, திட்டுவாரோ என்ற பயம். இன்னொரு பக்கம் முதல் மலையேற்றம் தந்த ஈர்ப்பு; பரவசம் மீதியையும் ஏறி உச்சியை தொடத் தூண்டியது. இப்படித்தான் முதல் கன்னி மலையேற்றம் எம் வாழ்வில் நிகழ்ந்தது. இதுவே அதன் சுருக்கப்பட்ட வரலாறு.

தொடர்ந்து எங்களூரில் உள்ள மற்ற மலைகள், பக்கத்து ஊரில் இருக்கும் மலைகள் என்று பள்ளிக்காலம் முடிவதற்குள் கண்ணுக்கெட்டின அனைத்தையும் ஏறிவிட்டேன். பிறகு கல்லூரிக் காலத்திலும், அதன் பிறகான பணிக் காலத்திலும் அப்பித்து தொடர, இப்போது ‘மலையாற்றுப்படை’ பெருங்கனவு வரைக்கும் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

                        *

திருவண்ணாமலை மாவட்டம் – கலசபாக்கம் வட்டத்தில் தென்மாதிமங்கலம், கடலாடி, வீரளூர், சீனந்தல் கிராமங்களுக்கு இடையில் சுமார் 5500 ஏக்கர் பரப்பளவில் உள்ளது பர்வதமலை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கிய பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான மலைபடுகடாமில், ‘பேரிசை நவிரம்’ என்று பாடப்பட்ட வரலாற்றுப் பெருமை மிக்கது.

‘நீர் அகம் பனிக்கும் அஞ்சு வரு கடுந்திறல்,

பேர் இசை நவிரம் மேஎய் உறையும்,

காரி உண்டிக் கடவுளது இயற்கையும்,            

பாய் இருள் நீங்கப் பகல் செய்யா எழுதரும் 

ஞாயிறு அன்ன, அவன் வசை இல் சிறப்பும்’ (81 – 85)

ஆற்றுப்படை நூலான இவற்றில், நவிரமலை பற்றியும், அதனை சிறப்புடன் ஆட்சி செய்த நன்னன் சேய் நன்னன் பற்றியும், இம்மலையில் இருக்கக்கூடிய நஞ்சை உணவாகக் கொண்ட ஈசனின் கோயில் பற்றியும், அதன் ஆற்றலை எண்ணி உலகம் அஞ்சிக்கிடந்த காலத்தையும், இருள் நீக்க எழும் இளஞாயிறு போன்ற புகழுடையோன் நன்னன் என்றும் பாடப்பட்டுள்ளது.

கூடவே, அக்கால மக்களின் வாழ்க்கை முறை, இசைக் கருவிகள், மலை நாட்டில் பெறக்கூடிய பொருட்கள் என இன்னும் பல்வேறு குறிப்புகள் காணப்படுகின்றன.

வள்ளலாகிய பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்து வேள் நன்னன் சேய் நன்னனிடம் பரிசு பெற்றுத் திரும்பும் கூத்தன்  ஒருவன், வழியில் எதிர்ப்பட்ட வறுமை நிலையில் இருந்த மற்றொரு கூத்தனுக்கு, நன்னனது மலை வளத்தோடு, அவனது கொடைத் திறத்தை சொல்வதாக இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது.

செங்கண் மாத்து வேள் நன்னன் என்பதில் செங்கண்மா என்பது நகர். அதுவே இப்போதிருக்கும் செங்கம். இங்கே ஓடும் சேயாறு இன்றைய செய்யாறு. பல்குன்றக் கோட்டம் இப்போதைய திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி.

சங்க காலத்துக்கு முந்தைய புதிய கற்காலம், பெருங்கற்காலம் தொடங்கி, பிந்தைய பல்லவ, சோழர், இராஷ்டிரகூட, பிருதிவி கங்க, பாண்டிய, சம்புவராய, விஜயநகர, ஆற்காடு நவாப், ஆங்கிலேய காலம் வரைக்குமான தடயங்களைக் கொண்டது.

பத்துப்பாட்டு நூல்களில் பெரும்பாணாற்றுப்படை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் குறிப்பிடும் தொண்டைமான் இளந்திரையன் ஆண்ட காஞ்சிபுரத்திற்கும், சிறுபாணாற்றுப்படை பாடிய நத்தத்தனார் குறிப்பிடும் நல்லியக்கோடன் ஆட்சி செய்த திண்டிவனம் பகுதிக்கும், சங்க கால மலையமான் திருமுடிக்காரி ஆண்ட திருக்கோவலூருக்கும் நடுவில், செங்கத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆண்டுவந்த நன்னன் சேய் நன்னன் ஆட்சிப் பகுதியில் உள்ள நவிர மலையை, ‘குறவரும் மருளும் குன்றம்’ என்கின்றது மலைபடுகடாம் (275). அதுவே இன்றைக்கு பர்வதமலை என வழங்கப்படுகின்றது.

பர்வதம் என்றால் மலை என்று பொருள். பர்வதமலை எனில் மலைகளுக்கெல்லாம் மலை, மலைகளின் அரசன்.2782 அடி உயரம் கொண்ட (4560 அடி என்று இணையத்தில் தவறாக இருக்கும்) செங்குத்தான பாறைகளையும், ஆபத்தான பாதையையும் உடைய இம்மலைக்கு, திரிசூல பர்வத மலை, திரிசூல மலை, சூலமலை, தென்கயிலாயம், திரிசூலகிரி, சஞ்ஜீவிகிரி, பர்வதகிரி, கந்தமலை, மல்லிகார்ஜுனமலை என வேறு பல பெயர்களும் உண்டு.

முன்னமே நான்காண்டுகளுக்கு முன்பு ஏறிய மலை என்பதால் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் போனோம். வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்ததால் சோதனைகள் சற்று கடுமையாகி இருந்தன. நெகிழி போத்தல் ஒவ்வொன்றிலும் ஸ்டிக்கர் ஒட்டி, அதற்கு தனியாக பத்து ரூபாய் கட்டணம் வசூலித்தார்கள்.

அதிகாலை மிகச் சீக்கிரமே கிளம்பி, சென்னையிலிருந்து போளூர் சென்று, அங்கிருந்து நேராக தென்மாதிமங்கலம் பேருந்தில் ஏறியதால் வழியில் எங்கும் சாப்பிடவில்லை. வெறும் தேநீர் மட்டுமே அருந்தியிருந்தேன். நண்பர் வாங்கி வந்த ஆரஞ்சிப் பழங்களையும், அவித்த சோளக் கதிரையும் குரங்குகளிடம் இருந்து காப்பாற்றி ருசித்து உண்டுவிட்டு, மலையை நோக்கிய சமதளத்தில், இருபக்கமும் முட்புதர்கள் சூழ நடந்தோம்.

இரண்டு கிலோமீட்டர் சென்றிருப்போம். அங்கே இருந்த வீரபத்திரர் கோயில் ஒட்டி அன்னதானம் போட்டார்கள். கொஞ்சமாக வாங்கி மர நிழலில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, வழியில் ஆங்காங்கே சூரப் பழம் பறித்துத் தின்றபடி கதை பேசிக்கொண்டு போய் படிக்கட்டுகளில் ஏற ஆரம்பித்தோம்.

கூட்டம் அதிகம் இல்லையென்றாலும் ஓரளவுக்கு இருந்தது. அதிலும் குறிப்பாக இள வயதினர் மிகுதியாகக் காணப்பட்டார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஏறப்போகும் பெரிய மலை என்பதால், வேகம் காட்டாமல் மெதுவாகவே ஏற ஆரம்பித்தேன். அதோடு, மலை ஏறும்போது முடிந்தவரை நீர் அருந்தக்கூடாது என்பதை கொள்கையாகவே வைத்திருப்பதால், இருவருக்கும் சேர்த்து ஒரு தண்ணீர் போத்தலே கொண்டுபோயிருந்தோம்.

உயரம் அதிகமாக அதிகமாக தாவரங்களின் அடர்த்தி அதிகமாகி, வெளிச்சம் குன்றத் தொடங்கியது. இன்னொரு பக்கம் மனிதச் சத்தம் மங்கி பல்லூயிரோசை கேட்க ஆரம்பித்தது. சட்டென்று மலைபடுகடாமில் தெய்வ மகளிர் நீராடும்போது தோன்றும் ஒலி தொடங்கி, பன்றிகளை விரட்டும் பறை ஒலி வரையாக தாழ் வரையிலும், உயர் வரையிலும் ஒலிக்கும் இருபது விதமான ஒலிகளும் (292 – 348) நினைவுக்கு வந்தன.

கற்கள் கொண்டு நேர்த்தியாக அடுக்கி ஆயிரம் அடி உயரம் வரை அமைக்கப்பட்டுள்ள படிகளில் ஏறியபடி, நெடுகிலும் இருந்த தாவரங்களை ரசித்துக்கொண்டு, நடுநடுவில் பேசியும் பேசாமலும், அவ்வப்போது பின்னால் திரும்பி வந்த வழியையும், மேலே கம்பீரமாய்த் தெரியும் உச்சியையும் பார்த்துக்கொண்டு நடந்தோம். மெல்ல ஊரெல்லாம் சிறிதாகி, ஆறெல்லாம் கோடாக மாறியது.

இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய முக்கிய மலையேற்றங்களில் அதிலும் குறிப்பாக, உயரமான கடினமான மலையேற்றங்களில் ஒன்றாக சொல்லப்படும் இம்மலை, இப்போது இருப்பது போல எவ்வசதிகளும் இல்லாமல் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் எப்படி இருந்திருக்கும்? அதற்கும் முன்னால் எவ்வாறு கோயில் கட்டியிருப்பார்கள், வணங்கியிருப்பார்கள் என்றெல்லாம் பேசிக்கொண்டு நடந்தோம்.

திடீரென ஓரிடத்தில் நின்று வழியோரம் இருந்த ஒரு மரத்தைக் காட்டி நண்பர் கேட்டார், ”இதென்ன மரம்னு தெரியுதா, சகோ?’’

நொடியில் அடையாளம் கண்டவனாய்ப் புன்னகைத்து, ”ஒட்டந்தழை மரம்’’ என்றேன்.

அவரும் எங்கள் நிலப்பகுதியை சேர்ந்தவர் என்பதால், அம்மரத்தின் இலையை அரைத்துத் தின்றோ, நீரில் கலந்து குடித்தோ கிராமத்தினர் தம் உயிரை மாய்த்துக்கொள்வதை சொல்லத் தேவையிருக்கவில்லை.

என் வயதொத்த தம்பதியர் இருவர் தம் ஒரு வயதுகூட நிறையாதக் குழந்தையை தூக்கிக்கொண்டு முன்னால் ஏற முடியாமல் ஏறுவதை பார்த்து மனத்துக்குள் திட்டிக்கொண்டு, குளிர்காற்று இதமாக வீசுவதைக்கூட ரசிக்க மறந்து ஏறினேன்.

மலையில் ஏற இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று நாங்கள் ஏறும் இந்த தென்மாதிமங்கலம் வழி. இன்னொன்று கடலாடி வழி. இவை இரண்டும் சந்திக்கும் அடுக்கங்கல் என்று வழங்கப்பட்ட மட்டமலை என்னும் இடத்தில், பக்தர்கள்; மலையேறிகள் இளைப்பாறுவதற்காக கட்டி வைத்துள்ள சிறிய மண்டபத்தின் அருகே போய் அமர்ந்து சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

பிறகு நான் மட்டும் தனியாக எழுந்து கொஞ்ச தூரம் நடந்துபோய் அங்கிருந்த பெரிய பாறை ஒன்றில் நின்றபடி, அங்கே எங்கேயோ உள்ள ஒரு குகையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட ராஜராஜனின் பிறப்பைப் பற்றிய [அதாவது, வாசுதேவனின் மகனாக மகாவிஷ்ணு அவதரித்தது போல இப்பூமியில் ராஜராஜன் அவதரிப்பார் என்றும், ஜெயந்தன் என்னும் இந்திரனுக்கு வாக்பதி என்னும் பிருகஸ்பதி மந்திரியாக இருந்ததைப் போல, ராஜராஜனுக்கு ராஜேந்திரன் மந்திரியாக இருக்கப் போகிறார் என்றும், அவர் காலத்தில் மகாவிஷ்ணுவைப் போல ராஜராஜன் உலகை அளந்து திரிசூலகிரியின் மேல் தன்னுடைய பெயரில் ஒரு நகரத்தை நிர்மாணிப்பார் என்றும் ஆருடம் கூறுவது போல இருக்கும்,] வரலாற்று சிறப்பு மிக்க,

‘வாசுதேவோ மகாவிஷ்ணு ராஜராஜோ பவிஷ்யதி

ஜெயந்தோ வாக்பதிந் மந்திரி தஸ்ய ராஜேந்திர பவிஷ்யதி

தத்காலே ஜகதோ மானம் கரிஷ்யதி ஜகதாத்

தன்நாம்ந நகராம்பம் கர்ஷ்யதி திரிசூலோகிரி பர்வதே’

என்ற நான்கு வரி சமஸ்கிருத கல்வெட்டை மனத்துள் ஒரு தடவை அசைபோட்டுவிட்டு, அதே குகையில் கல்வெட்டுக்கு மேற்புற விதானத்தில் ஒன்றும், கீழ் உள்ள பாறையில் ஒன்றுமாக தீட்டப்பட்ட புதிய கற்கால மற்றும் வரலாற்றுக் கால ஓவியங்களை கண்கள் மூடி மனத்திரையில் ஓட்டிப் பார்த்தேன்.

பிறகு அங்கிருந்த சிறிய சரக்கொன்றை மரத்தில் இருந்து ஒரு காய்ந்த காயை எட்டிப் பறித்துக்கொண்டு போய் நண்பரிடம் காட்டிவிட்டு, இக்கல்வெட்டு குறித்தும், ஓவியங்கள் குறித்தும் விரிவாகப் பேசியபடி, மேலும் உற்சாகமாக ஏற ஆரம்பித்தேன்.

காரை, சூரை, பூலா, கள்ளி, வசம்பு, வாகை, காட்டு எலுமிச்சை, எருவாழி, இலுப்பை, கருமத்தை, களிச்சிக்கை, செந்தனம், காட்டு முடக்கத்தான், வண்டுகொல்லி, நாவல், குங்கிலியம், வெள்ளை கடுக்காய்… என எத்தனை எத்தனையோ தாவரங்களும், அழிந்து வரும் பட்டியலில் இருக்கக்கூடிய மஞ்சள் தொண்டைச் சின்னான் தொடங்கி மஞ்சள் மூக்கு குக்குறுவான் வரை… பல பத்து பறவையினங்களும், எறும்பு, நத்தை முதல் குரங்கு வரையான நூற்றுக்கணக்கான வகை சிற்றுயிர்களும்; பேருயிர்களும் வாழக்கூடிய மிக முக்கிய பல்லுயிர் சூழ் மண்டலத்தில் இருக்கிறோம் என்ற எண்ணமே சிலிர்ப்பை உண்டாக்கியது.  

படிக்கட்டு இல்லாமல் கரடுமுரடாக, ஆங்காங்கே நடுவில் பிடிக்க இரும்புப் பழுப்பு பொறுத்தப்பட்ட வழியில் சற்று தூரம் ஏறியதும் ஐரோப்பாவை சேர்ந்த ஐம்பது வயதுடைய வெளிநாட்டினர் ஒருவர் எதிர்பட்டார். புன்னகைத்து ஆர்வத்தோடு அவரிடம் உரையாடினோம்.

”எத்தனையாவது தடவை இந்த மலைக்கு வர்றீங்க?’’ என்று கேட்டதற்கு, அவர் சொன்ன பதில் எங்களை வெகுவாக யோசிக்க வைத்தது. ”எப்படி அதை உறுதியாக சொல்லமுடியும். ஒவ்வொருவரும் முன்னூறு வருடத்துக்கு ஒரு தடவை மீண்டும் பிறந்து வருகிறோம். இதற்கு முன்பு எத்தனை தடவை பிறந்தேன்; வந்தேன் என்று தெரியாது. இப்படி வேண்டுமானால் சொல்லலாம். இந்தப் பிறவியில் முதல் தடவை.’’

மகிழ்வோடு கைகுலுக்கி அனுப்பிவிட்டு, அவர் பின்னாலேயே துணையாகப் போன நாயை பார்த்தேன். பிறகு பக்கத்தில் இருந்த கள்ளி ஒன்று பூத்திருப்பதைக் கண்டதும்தான் தோன்றியது. இவ்வளவு தூரம் வந்து இத்தனைத் தாவரங்களைப் பார்த்தும் இப்போதுதான் முதல் மலரை பார்க்கிறோம் என்று. வியப்போடு நண்பரிடம் சொல்ல, அவரும் ஆமாம் என ஆமோதித்தார்.

சுமார் ஈராயிரம் அடி உயரத்தை அடைந்ததும், வலப்புறமாக இரண்டு பெரும்பாறைகள், அதன் பக்கவாட்டில் இருந்த இரு குன்றுகள் ஒன்று சேர்ந்து அப்படியே பார்க்க திரிசூலம் போன்று இயற்கையாகக் காணப்பட்டது. இதுதான் மலைக்கான பெயர் காரணமோ? என எண்ணிக்கொண்டு, பெரும்பாறையின் செங்குத்தான கடப்பாறை நெட்டு வழியாக, பாறைகளில் துளையிட்டு நட்டு வைத்திருக்கும் கடப்பாறைகளையும், அதில் பிணைத்திருக்கும் சங்கிலிகளையும் பிடித்துக்கொண்டு, நடுநடுவில் வைத்திருந்த இரும்பு ஏணிகளில் ஏறி (அவற்றில் சில ஆபத்தான நிலையில் இருந்தன) மிகக் கடினமான பாதை வழியாகச் சென்று, அங்கிருந்த குறவன் கோட்டை வாயிலில் உட்கார்ந்தோம். மிகக் குளிர்மையாக; இதமாக இருந்தது.

பிறகு கோட்டை சுவர்களையும், அதன் மத்தியில் இருந்த ஒற்றை பனையையும், அதனையொட்டி இருக்கக்கூடிய பாறையில் பெரிய மண் குளவிக் கூண்டு இருப்பதையும் பார்த்துக்கொண்டு போய், பெரும் பாறையை ஒட்டிய பிளவில் குகை போன்று மிக ஆழத்தில் சுனை ஒன்று உள்ளதைக் கண்டோம்.

இறங்க படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு இருந்தாலும், நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருந்தது. அருகில் சென்று எட்டிப் பார்த்தோம். உள்ளே சுனைதான் உள்ளது என்றாலும், அதனையொட்டி பெரிய ரகசியக் குகை அல்லது சுரங்கப்பாதை ஏதாவது இருக்கலாம் என்றே தோன்றியது.

அடுத்தநாள் தைப்பூசம் – வெள்ளுவா நாள் என்பதால் ஆட்கள் இன்னும் அதிகமாக வரத் தொடங்கி இருந்தார்கள். மெதுவாக மேலே ஏறி அங்கிருந்த பெரும் பாறைகளில் இடப்பக்க பாறையில் இருந்த மடத்துக்குப் போகாமல், நேராக வலப்பக்க பாறையின் உச்சி நோக்கி நடந்தோம்.

பிற்பகல் கடந்த கொளுத்தும் வெய்யில். எனினும் வீசக்கூடிய சில்லென்ற காற்றில் துளியும் தெரியவில்லை. சுமார் ஏழு கிலோமீட்டர் தூரத்தை (தரையில் மூன்று கிலோ மீட்டர், மலையில் நான்கு கிலோமீட்டர்) மூன்று மணி நேரமாக நடந்து மலை உச்சியை அடைந்தபோது, பெரும் சாதனை ஒன்றை செய்ததைப் போல மனத்துள் உற்சாகம் பிறந்தது.

நான்கைந்து இடங்களில் இடிதாங்கி பொறுத்தியிருந்தார்கள். அவற்றில் இரண்டு சிதிலமாகி விழுந்து கிடந்தன. கூடவே, இடியின் பாதிப்பால் கோயில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டும், சிலைகள் சில உடைந்தும் காணப்பட்டன. அதோடு, பாறை எங்கிலும் திருநீறு கொட்டி வெண்ணிறமாக இருந்தது.

சிறிது நேரம் ஆசுவாசமாக நின்று வேடிக்கை பார்த்துவிட்டு, அதிலும் குறிப்பாக நாங்கள் வந்த வழி ஒரு கோடாக இருப்பதை, அண்மையில் கட்டினது போன்று தெரிந்த கதவுகள் இல்லாத கோயிலுக்குள் சென்று நுழைந்தோம்.

வெளியே உள்ளதற்கு மாறாக உள்ளே கருவறை ஒட்டி இருந்த தூண்கள் தொன்மையானதாக இருந்தன. யாவற்றையும் நுணுகப் பார்த்துக்கொண்டு, சிறு லிங்கமாக வீற்றிருந்த காரியுண்டிக் கடவுளை (இப்போது மல்லிகார்ஜுனர்) தொட்டு வணங்கிவிட்டு, முன் மண்டபத்தில் வந்து உட்கார்ந்து கண்மூடி சற்று நேரம் லயித்திருந்தோம்.

உடனே, மலைபடுகடாமில் காரிஉண்டிக் கடவுளைத் தொழுதல் பற்றி பெருங்கெளசிகனார் விவரித்திருக்கும் வரிகளும், அதற்கான பொருளும் உளத்துள் பீரிட்டு வந்தன.

’உயர்நிலை மாக்கல், புகர்முகம் புதைய,

மாரியின் இகுதரு வில்உமிழ் கடுங்கணை,

தாரொடு பொலிந்த, வினை நவில் யானைச்

சூழியின் பொலிந்த, சுடர்ப்பூ இலஞ்சி,

ஓர் யாற்று இயவின், மூத்த புரிசைப்

பராவு அரு மரபின் கடவுள் காணின்,

தொழாநிர் கழியின் அல்லது, வறிது

நும் இயம் தொடுதல் ஓம்புமின் மயங்கு துளி

மாரி தலையும், அவன் மல்லல் வெற்பே.’ (225 – 233)

அழகான புள்ளிகளையுடைய தம் முகம் மறையுமாறு முகபடாத்தால் பொலிவு பெற்றதும், உயர்ந்த நிலையை உடையதும், பெருமையுடையதும், மலை போன்ற தோற்றம் உடையதும், போர்த்தொழில் பயின்றதும் ஆகிய யானையையும், மழை போலத் தாழ்ந்து விழும் வில்லிலிருந்து கான்று விழும் கடிய அம்பினையும் உடையது தூசிப்படையால் பொலிவுபெற்ற பழைய மதில். ஆங்கே ஒளியுடைய பூக்களைக் கொண்ட மடுக்களை உடைய ஆற்றின் கரையில், ஒரு வழியினையுடைய ஊர் ஒன்று உள்ளது. அவ்வூரில் உள்ள கோயிலில், பராவுதற்கு அரிய முறைமையுடைய கடவுளை (காரிஉண்டிக் கடவுளை) கண்டீராயின், நீவிர் வணங்கிப் போகும் செயலைத் தவிர, சிறிதும் உம்முடைய இசைக்கருவிகளைத் தீண்டுதலைத் தவிர்ப்பீராக. ஏனெனின், அவனது வளம் பொருந்திய நவிரம் என்னும் மலையில் மயங்கிய துளிகளைக் கொண்ட மழை இடைவிடாமல் பெய்த வண்ணம் இருக்கும். இதனால் நும் இசைக்கருவிகளும் நனைந்து பழுதுபடும். நமக்கும் போதல் அரிதாகும்.

பிறகு எழுந்து போய் இன்னொரு தடவை ஈசனாரை வணங்கிவிட்டு வெளியில் வந்து, அருகில் இருந்த மற்றொரு பெரிய பாறை மீது ஏறிச் சென்று உச்சி மலையில் நின்று சுற்றிலும் பார்த்தேன். சேயாறு நீரின்றி வெற்று மணல் ஆறாக வளைந்து நெளிந்து போவதைக் கண்டதும் வருத்தமாக இருந்தது. மறுபக்கம் இன்னும் திருடப்படாமல் நீள விரிந்தும், உயர்ந்தும் காணப்பட்ட சவ்வாது மலைத் தொடரைப் பார்த்து மகிழ்வுற்றேன்.

பக்கத்தில் இருந்த எட்டு இலைகளைக் கொண்ட வில்வச் செடியையும், அதன் பக்கத்தில் இருந்த தடித்த இலையுடைய சிறு நாவல் மரத்தையும் தொட்டு வருடிவிட்டு, தென் திசையில் மிக மெல்லிதாய்த் தெரிந்த திருஅண்ணாமலையை வணங்கினேன்.

பின் அங்கிருந்த சிறு கல்லின் மீது உட்கார்ந்து கண்கள் மூடி, பதினேழாம் நூற்றாண்டில் சைவ எல்லப்ப நாவலர் இயற்றிய அருணாசல புரணத்தில், அண்ணாமலைக்கு நாற்புறமும் இருக்கக்கூடிய மலைகள் பற்றி பாடியிருக்கும் வரிகளை, குறிப்பாக ‘தோற்றிடும் வடதிசைச் சூல மால் வரை’ என்ற வரியையும், அருணாசல மஹாத்மியம் என்ற நூலில் அருணாச்சலத்தின் எல்லைகளைக் குறிப்பிடும்போது பர்வதமலையை திரிசூலதேவன் வடக்கில் இருப்பதாக சொன்னதையும், திரிசூலகிரி புராணத்தில் இம்மலையை திரிமூர்த்தி மலை, வேதமலை, மங்கள மலை, மல்லீகார்ச்சுன மலை, சிவ மலை, மகாலிங்க மலை, திருமலை, திரிசூல மலை, தென் கைலாய மலை, தேவ மலை, கந்த மலை போன்ற பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் எண்ணிவிட்டு கண்களைத் திறந்து மேலே பார்த்தேன்.

மலைபோல் பெருத்திருந்த கார்மேகங்களுக்குப் பின்னால் இருந்து வெய்யோன் தன் ஒளிக்கரங்களால் எங்களை மானசீகமாக ஆசிர்வதித்தான். உடனே, உளமகிழ்ந்து நண்பரிடம் சொன்னேன். ”அடுத்த மாதம் சிவராத்திரி அன்னைக்கு, ஆந்திர மாநிலம் – புத்தூர் அருகே உள்ள சதாசிவ கோணே மலை ஏறலாம் சகோ.’’

நண்பரோடு சேர்ந்து, அமர்ந்திருந்த பேரிசை நவிரமலையும் மெல்லிதாய் தலையசைத்ததை உணர்ந்தேன்.

                        ***

மலையுச்சியில் நின்றுகொண்டு

நாற்புற விரிகாட்சி காண்கையில்

மாறியிருந்தேன்

மலையாக

மலையின் அங்கமாக

மலையும் மனிதரும் வேறல்ல

கல்லும் காலும்

நிசப்தமும் சொல்லும்

இசையும் மூச்சும்

மலையே நான்

நானே மலை

ஏறப்பட்டதும் ஏறியதும்

சுமந்ததும் சுமக்கப்பட்டதும்

களித்ததும் களிப்புற்றதும்

என்னில் இருப்பவன்

மலையானபோது

நானாகியிருந்தது

மலையுச்சி.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=