அரம்பு போற்றுதும் – 021 : மொட்ட அடிச்சி காது குத்தி

ஏப்ரல் 04, 2026
*
நான்கு நாட்களுக்கு முன்பு அதாவது, மார்ச் முப்பதாம் தேதி, சிலையாக இல்லாமல் நடுகல்லாக சேயோன் வீற்றிருக்கும் சீர்மை மிக்க திருப்போரூர் – கந்தசாமிக் கோயிலில் வைத்து ஐக்கு மொட்டை அடித்து காது குத்திக்கொண்டு வந்திருந்தோம்.
அது முதல் அவ்வப்போது, ‘ஐ பாப்பாக்கு… மொட்ட அடிச்சி காது குத்தி’ என்று சொல்லிக்கொண்டிருந்தவன், இன்று மாலை மதி சுட்டுக்கொடுத்த பருப்பு வடை ஒன்றில் எழுதுகோல் கொண்டு மிகத் தீவிரமாகக் குத்திக்கொண்டிருந்தான்.
அவன் என்ன செய்கிறான்; செய்வான் என்பது கண்டதும் புரிந்திட்டாலும் அதை அவனே சொல்லக் கேட்க வேண்டும் என்பதற்காக நானும் மதியும் அருகில் போய் உட்கார்ந்துகொண்டு கேட்டோம். ”ஐ பப்பு… என்ன, தங்கம் பண்றீங்க?’’
‘பார்த்தா தெரியலையா?’ என்பது போல தலையுயர்த்திப் பார்த்தவன், ”மொட்ட அடிச்சி காது குத்தி’’ என்றான்.
உடனே வியப்புக் குரலில் கேட்டேன். ”என்னது… மொட்ட அடிச்சி காது குத்தியா?’’
‘ஆமாம்’ என்று வேகமாகத் தலையாட்டினான்.
சிரிப்பை அடக்கிக்கொண்டு இப்போது மதி கேட்டாள். ”யாருக்கு, ஐ பாப்பாவுக்கா?’’
”இல்ல.’’
”அப்போ, யாருக்கு?’’
”வடைக்கி.’’
”ஓ… ஐ பாப்பா, வடைக்கு மொட்டை அடிச்சி காது குத்துறியா?’’
”ஆமா…’’ என்றுவிட்டு முன்னைவிட இன்னும் தீவிரமாக குத்தினான்.
”சரி, பப்பு… வடை பாப்பாவுக்கு வலிக்காம பாத்துக் காது குத்து’’ என்றுவிட்டு அங்கிருந்து நாங்கள் எழுந்து வந்தோம்.
அப்போது என் மனத்தில், ‘இவன் இன்னும் எது எதுக்கெல்லாம் மொட்டை அடிச்சி… காது குத்தப்போறானோ, தெரியலையே?’ என்ற கேள்வி மிகக் கூர்மையாக ஒலித்துக்கொண்டிருக்க, எனது கைகள் இரண்டும் தானாகச் சென்று காதுகளை பெரும் பீதியோடு தொட்டுப் பார்த்துக்கொண்டது.
*