அரம்பு போற்றுதும் – 020 : விமானத்துல போ

மார்ச் 27, 2026

*

ஐக்காக வாங்கிக்கொடுத்தப் பனுவல்களில் அளவில் மிகச் சிறிய அதேநேரம், நன்கு உறுதியானத் தாளில் இருக்கும் குழந்தைகளுக்கான எளியச் சொற்கள்’, ‘தமிழ் அரிச்சுவடி’ என்ற இரண்டினை மட்டும் அவன் அவ்வப்போது எடுத்துவைத்துப் பார்ப்பதும்; படிப்பதும்; விளையாடுவதாக இருப்பது வழக்கம்.

அவ்வாறு அவன் செய்யும்போதெல்லாம் தவறாமல் அதில் இருக்கக்கூடிய எலுமிச்சம் பழத்தை மட்டும் நிஜப் பழம் போல பாவித்து நா வைத்து சுவைத்துப் பார்த்துப் புளிப்பதாக பாவனை செய்வான். நாங்களும் அதை விடாமல் ரசித்து வருவோம்.

இந்நிலையில் இன்று முதல் தடவையாக அதன் கடைசிப் பக்கத்தில் உள்ள விமானத்தின் மீது அதாவது, விமானப் படம் இருக்கும் பக்கத்தின் மீது உட்கார்ந்துகொண்டு, ”போ’’ என்றான்.

அவன் செய்வதும், சொல்வதும் புரிந்தாலும் வேண்டுமென்றே கேட்டேன். ”என்ன பப்பு, செய்யறா?’’

உடனே அவன், ”ஐ பாப்பா, விமானத்துல போ’’ என்றான்.

ஆச்சர்யமாக முகத்தை விரித்துக்காட்டிக் கேட்டேன். ”வாவ்… ஐ பாப்பா, விமானத்துல போறானா…? எங்கேப் போறான்?’’

”அங்க’’ வாசல் பக்கமாகக் கை காட்டி அழுந்தச் சொன்னான்.

”யார் யாரு போறீங்க?’’

’’ஐ பப்பா… அம்மா, அப்பா.’’

”ஓ’’ சட்டென்று கேட்டேன். ”ஐ பப்பா மட்டும்தான் விமானத்துல இருக்க. எங்கே அப்பா, அம்மாவக் காணோம்?’’

உடனே எழுந்து எனது கையைப் பிடித்து இழுத்தவன், ”அப்பா உக்காரு’’ என்றான்.

நானும் அவன் உட்கார்ந்ததுபோல விமானப் படத்தின் மீது அமர்வதாக பாவனை செய்தேன்.

ஓடிப்போய் வீடெங்கும் மதியை தேடிப் பார்த்தவன், அவள் இல்லாததால் வந்து என் மடியில் அமர்ந்துகொண்டு, ”ஐ பாப்பா, அப்பா… விமானத்துல போ’’ என்றான்.

பல் தெரியச் சத்தமின்றி சிரித்துவிட்டு அவன் சொன்னதையே சொன்னேன். ”ஐ பாப்பா, அப்பா… விமானத்துல போ.’’

திரும்பவும் சொன்னான். நானும் சொன்னேன்.

சட்டென இரு கைகளையும் மிக வேகமாக உதறியபடி கோபமாக எழுந்தவன், அருகில் இருந்த மற்றொரு புத்தகத்தை எடுத்து சுவர் நோக்கி வீசிவிட்டு, ”ஐ பப்பா, அப்பா… விமானத்துல போ’’ என்றான் இன்னும் சத்தமாக.

‘ரைட்டு, இவன் உண்மையிலேயே இப்போ விமானத்துல போகச் சொல்றானே… என்ன பண்றது?’ என்று தெரியாமல், அவனை அதிலிருந்து திசை திருப்ப நினைத்துச் சொன்னேன். ”ஐ பாப்பா… மாடியில அம்மா வந்திருக்காங்கப் பாரு. போயி கூட்டிட்டு வா. ஐ பாப்பா… அம்மா, அப்பா மூணு பேரும் விமானத்துல போலாம்.’’

உடனே ‘சரி’ என்று தலையாட்டிவிட்டு வேகமாக ஓடிப்போனவன், மதி அங்கே இல்லாததைப் பார்த்துவிட்டு திரும்பி வருவதற்குள், அப்பனுவலை எடுத்து ஒரு வாரத்திற்கு அவன் கண்களில் படாதவாறு ஒளித்து வைத்துவிட்டு, ஒன்றும் தெரியாத மாதிரி யான் பாட்டுக்கு மேசை மேல் இருந்த டேபில் திருவண்ணாமலைக் கோயில் கோபுரம் வரைய ஆரம்பித்தேன்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=