அரம்பு போற்றுதும் – 022 :  ஞாயிறு தாத்தா புக்கு படிச்சி

ஏப்ரல் 10, 2026

*

ஐக்கு முடிந்தவரை நற்றமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்த; சொல்லித்தர முயன்று வருகிறோம். உதாரணமாக : சூரியன் என்னும் வடமொழிச் சொல்லுக்குப் பதிலாக ஞாயிறு எனும் பழந்தமிழ் சொல், நிலவு என்னும் வடமொழிச் சொல்லுக்கு மாற்றாக திங்கள் எனும் தண்தமிழ்ச் சொல், நதிக்கு பதில் ஆறு, தீபத்திற்கு பதில் விளக்கு, பாட்டிலுக்கு பதில் புட்டில், பெல்லுக்கு பதில் மணி, பேப்பருக்கு பதில் தாள், பைப்புக்கு பதில் குழாய், போர்டு – பலகை, மார்க்கெட் – அங்காடி, ஜன்னல் – சாளரம்…

கூடவே, சிலவற்றுக்கு உறவு முறைகளுடன் அதாவது, உயிருள்ள ஒருவரைப் போல உறவுமுறை இட்டும் அறிமுகப்படுத்தி; சொல்லிக்கொடுத்து வருகிறோம். உதாரணமாக : ஞாயிறு தாத்தா, திங்கள் பாட்டி…

இதனைப் பார்க்கும்; கேட்கும் பலர் எங்களை வேறுமாதிரி பார்த்தாலும், மிகச் சிலர் வாய்விட்டுப் பாராட்டவும் செய்வதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் இன்று காலைஎழுத்தறையில் உட்கார்ந்து ‘மலையாற்றுப்படை’ எழுதிக்கொண்டிருந்தேன். நடுவீட்டில் படுத்துக்கொண்டிருந்த ஐ, எழுந்து சத்தம் போடாமல் மெல்ல உள்ளே வந்து என் அருகில் நின்று வழக்கம் போல கைகூப்பி, ”காலை வணக்கம்” சொல்லிவிட்டு, நான் மறு வணக்கம் கூறியதும் கேட்டுப் பெரிதாகப் புன்னகைத்துவிட்டு புத்தக அடுக்கு நோக்கிப் போனான்.

சட்டென்று என்ன கண்டானோ; நினைத்தானோ, ஓடிவந்து என் தோள் தொட்டு, ”அப்பா… அப்பா” என்று கூப்பிட்டான்.

என்ன, ஏதோவென்று வேகமாகத் திரும்பிப் பார்த்துக் கேட்டேன். ”என்னடா, பப்பு… என்னாச்சி?’’

ஆச்சர்யக் குரலில், ”ஞாயிறு தாத்தா புக்கு படிச்சி’’ என்றான்.

அவன் சொன்னதும்தான் கவனித்தேன். சற்றுமுன் உதித்து வந்த எழுஞாயிறின் சிறு கீற்றொளி சாளரம் வழியாக நுழைந்து புத்தக அடுக்கில் நேர் ஒளிக்கோடு போல பட்டு மிளிர்ந்துகொண்டிருந்தது. இதைக் கண்டதும் அவனுக்கு, ஞாயிறோன் வந்து புத்தக அடுக்கில் உள்ள பனுவல்களை படிப்பதாகத் தோன்ற, அதனைத் தன் ஆச்சர்யக் குரலில்; இன்மிகு சொற்களில் கூறியிருக்கிறான்.

கண்டதும் விழிவழி உள்ளம் பேருவகையுற்றதை உணர்ந்து சில நொடிகள் யாதும் பேசாமல் ரசித்துவிட்டு, ஓடிப்போய் ஞாயிறொளி பட்டு மின்னும் புத்தகத்தைத் தொட்டுக்காட்டிய ஐயை அப்படியே அள்ளித் தூக்கி ஆசை முத்தம் நான்கைந்து நெற்றியிலும் கன்னத்திலும் உச்சந்தலையிலும் இட்டுவிட்டு, கனலியொளி அவன் முகத்தில் படுமாறு நிற்க வைத்தேன்.

உடனே, கண் கூசுவதாகக் காட்டிவிட்டுச் சிரித்தவன், ”அப்பா’’ என்றான்.

”என்னடா, தங்கம்?’’

”ஞாயிறு தாத்தா ஐ பாப்பா தொட்டு.”

”ஆமாம் பப்பு… ஞாயிறு தாத்தா ஐ பாப்பாவ தொடுறாரு.”

சட்டென்று விலகி நின்று, ”ஞாயிறு தாத்தா புக்கு படிச்சி” என்றான்.

”ஆமாம் பப்பு… ஞாயிறு தாத்தா புக்கு படிச்சி.”

மறுபடியும் முன்போல நின்று, ”ஞாயிறு தாத்தா ஐ பாப்பாவ தொட்டு” என்றான்.

இப்படியே மாறி மாறி செய்துகாட்டி இன்புற்றவன், தன் மகிழ்ச்சியில் கொஞ்சத்தை தன் அம்மாவுக்கும் தர நினைத்து அழைத்து வர அங்கிருந்து வேகமாக ஓடிப்போனான்.

உடனே, அவனுக்குத் தெரியாமல் நான் மட்டும் ரகசியமாக அஞ்ஞாயிறொளி எம்மீது பட நின்று மனத்துக்குள், ‘ஞாயிறு தாத்தா அப்பாவத் தொட்டு’ என்று அவனது சொற்களில் கூறி உவகையுற்று வந்து உட்கார்ந்து, விட்ட இடத்திலிருந்து எழுதத் தொடங்கினேன்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=