‘ஐ’க்கு முதல் பிறந்தநாள்…

மகன் ஐ’க்கு இன்று முதல் பிறந்தநாள். ஐயாவின் நூறாவது அகவை ஆண்டில் பிறந்திட்டவனுக்கும், ஐயாவுக்கும் சேர்த்து ‘ஆயிரம் வேர் கொண்ட மரம்’ என்ற தலைப்பில் ஓர் இரட்டை மலர் கொண்டுவருகிறோம். அதன் முகப்புப் பக்கத்தை இந்நன்னாளில் பகிர்வதில் மகிழ்வும் பெருமையும் கொள்கிறோம்.
ஐ’யின் முதல் பிறந்தநாளை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநாதர்குன்றில் வைத்து மிகச் சில அன்பர்களுடன் இன்று இனிதே கொண்டாடினோம்.
எவ்வாறெனில், நம் தமிழ் மொழியில் கிடைத்த முதல் ஐ எழுத்துருவை தமிழில் முதல் ஓரெழுத்துப் பெயர் கொண்ட மகன் ஐக்கு அறிமுகம் செய்துவைத்து. கூடவே, 1500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் எழுத்துருவில் (அதாவது, வட்டெழுத்தில். அதிலும் குறிப்பாக, தமிழியின் [; தமிழ் பிராமியின்] இறுதிக்கால; வட்டெழுத்தின் தொடக்க கால எழுத்துருவில்) பெயர் பொறித்த சிறு பானை ஒன்றினை (உலகில் முதன்முதலில் எழுத்துரு பொறிக்கப்பட்டது பானை ஓட்டில் என்பதால்) பரிசாக வழங்கியும், அவனுக்காக எழுதிய…
‘இனிய பிறந்தநாள் –
பிறந்தநாள் –
வாழ்த்துகள் ஐ குட்டி…
தாய்த் தமிழைப் போல் –
என்றென்றும் –
வாழணும் ஐ குட்டி…
நிலம் நீர் காற்று –
ஆகாயம் நெருப்பு –
அனைத்தின் ஆசியும் சேரட்டும்…
வளம் நனி சிறக்க –
நலம் பல பொலிய –
வையம் வியந்து பாடட்டும்…
புல் முதல் புள் வரை –
நெல் முதல் எள் வரை –
யாவிலும் அன்பு ஊடட்டும்…
மண் முதல் விண் வரை –
துளி முதல் வளி வரை –
எங்கும் உன்புகழ் கூடட்டும்… (இனிய…)’
என்னும் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை பாடியும். ஆம்!
தமிழ்ப் போல என்றும் ஐ வாழ்ந்திட இப்பிரபஞ்ச அன்னையின் பேரருளும், ஐயாவின் ஆசியும் வேண்டி மனத்தார இத்தருணத்தில் பிரார்த்திக்கிறோம்.
இப்படி ஒரு பிறந்தநாளை இதுவரை யாராவது கொண்டாடி இருப்பார்களா, தெரியாது. நாங்கள் கொண்டாடி இருக்கிறோம். அவ்வகையில் பேருவகை கொள்கிறோம்.
வாழ்க ஐ;
வளர்க அவனது புகழ்!
அன்புடன்,
வடிவரசு – கோமதி.


