இளம் படைப்பாளர் விருது…

கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான கொடிசியா ‘இளம் படைப்பாளர் விருது’ (அபுனைவு பிரிவில்) எனது ‘நிலைத்திணை’ நூலுக்கு வழங்கப்பட்டிருந்ததை பலரும் அறிந்திருப்பீர்கள். ஆனால், அதற்கு அடுத்த ஆண்டுகளான 2023 மற்றும் 2024 இல் இவ்விருது யாருக்கும் வழங்கப்படவில்லை.
காரணம், அதற்கு தகுதியான நூல் எதுவும் வரவில்லை. அதாவது, நிலைத்திணை நூலுக்கு நிகராக அல்லது அதற்கும் மேலாக, அல்லது அப்பிரிவுக்கு அவர்கள் வைத்துள்ள தரத்துக்கு ஏற்ப நூல் வரவில்லை. அதனால் அபுனைவு பிரிவுக்கான விருது கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்கப்படவில்லை.
ஆக, தெரிந்தவர் தெரியாதவர், ஆனவர் ஆகாதவர், அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர் இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர், அவர் சொன்னவர் இவர் சொன்னவர்… முதலான எப்பாகுபாடும் பார்க்காமல்; அரசியல் கீழ்மைகளில் ஈடுபடாமல், மற்ற விருது குழுக்களைப் போல ‘வந்த நூல்களில் ஒன்றுக்கு தர வேண்டுமே’ என்று கடமைக்கு தராமல், ‘குறிப்பிட்ட பிரிவுக்கு விருது வழங்கவில்லை என்றாலும் பரவாயில்லை. தகுதியற்ற படைப்புக்கு ஒருபோதும் தரக்கூடாது’ என்னும் உறுதியான முடிவோடு இருக்கிறார்கள்.
இத்தகைய நேர்மையும், உறுதியும் கொண்ட கொடிசியா வழங்கிய ‘இளம் படைப்பாளர் விருது – 2022’ பெற்றதற்கு மகிழ்வும் பெருமையும் கொள்கிறேன்.
கூடவே, இன்று கொடிசியாவில் தொடங்கும் ‘கோவை – புத்தகத் திருவிழா – 2024’ சிறக்க மனத்தார வாழ்த்துகிறேன்.
