ஐபக்கம் – 051 : ஐ நூலகம்

#மே12,2024
வாழ்வில் நிகழும் அரிய ஒன்று, மிகச் சாதாரண ஒன்றில் அதுவும், எதிர்பாராத நேரத்தில் துவங்கும் என்பார்கள். அப்படியான ஒன்று இன்றைய தினம் நிகழ்ந்திட்டது. ஆம்!
மதியம் வீட்டிலிருக்கும் நூலகத்தில் தேவையான ஓர் உதவி நூலை தேடிக் கொண்டிருக்கையில், தற்செயலாக இரண்டு புத்தகங்கள் (நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியிட்ட ரவி பரஞ்சபே எழுதிய ‘நீரின் கதை’ மற்றும் மார்டி எழுதிய ‘மரம் என்பது என்ன?’) கண்ணில் பட்டன.
இரண்டுமே குழந்தைகளுக்காக வெளியிடப்பட்ட மிக அற்புதமான ஓவியங்கள் அடங்கிய புத்தகம் என்பதால், உடனே எடுத்துவந்து ஐ அருகில் படுத்துக்கொண்டு, ஒவ்வொரு பக்கமாக திறந்து காட்டினேன்.
முழுக்க முழுக்க வண்ணப் படங்களாக இருக்கக் கண்டதும் பெரிதாய் மகிழ்ந்திட்டவன், கூடவே, அதில் இருக்கும் ஒவ்வொன்றையும் காட்டி மதி கதை சொன்னது கேட்டு இன்னும் இன்னும் உற்சாகமானான். ஆம்!
ஏற்கனவே மதி படிக்கையில் சேர்ந்து படித்திட்டவன் (!), இன்று இரண்டு புத்தகங்களை ஒருசேர படித்திட்டான் (பார்த்திட்டான்!).
மதியிடம் சொன்னேன். ”பேசாம நாம… ஐ’க்கு தனியா ஒரு நூலகம் உருவாக்கலாமா?’’
”ஆமா, எனக்கும் அதான் தோணுது’’ என்றாள்.
”இப்ப இருந்தே கொஞ்ச கொஞ்சமா… அவனுக்குத் தேவையான நல்ல புத்தகங்கள வாங்கி வைக்கலாம்.’’
”அப்போ, முதல் கட்டமா… நாம ஏற்கனவே கொடுத்த மகவே வருக, திருக்குறள், குட்டி இளவரசன் புத்தகங்களோட… இந்த ரண்டையும் சேர்த்து, இன்னிக்கே உருவாக்கலாம்.’’
‘சரி’ என்று தலையசைத்துவிட்டு, ஐந்து புத்தகங்களையும் எடுத்துப் போய் அவன் கட்டிலில் வைத்து, ‘ஐ நூலகம்’ என்று பெயரிட்டோம். ஆம்!
இப்படியாக இன்று ஐ’க்கு நூலகம் உருவானது.
*