ஐபக்கம் – 050 : கருப்பு மாடு

#மே10,2024

இன்று அதிகாலை கண்ட கனவில், முரம்பு நாவலின் கருப்பு மாடு வந்து ஐ’யை பார்த்துவிட்டுப் போனது.

‘இது என்ன, நம்ம நாவல்ல வர்ற கருப்பு மாடு வந்து… ஐ’ய பார்த்துட்டுப் போற மாதிரி கனவுலாம் வருது?’ என்ற கேள்வியோடவே எழுந்து, பக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த மதியை தொந்தரவு செய்யாமல், ஐ’யை வெய்யிலில் காட்டுவதற்காக தூக்கிக்கொண்டு வந்தேன்.

அரைத் தூக்கத்தில் இருந்தவன், வெளியில் வந்ததும் விழித்து வேடிக்கை பார்க்கத் தொடங்கினான். உடனே சொன்னேன்.

”ஐ பாப்பா… தங்கமே… உன்னப் பாக்க, கருப்பு மாடு வந்துச்சு தங்கம். இந்தக் கருப்பு மாடு இருக்கே… அது முத்துசாமிக் கவுண்டரும், பூர்ணியம்மாவும் முரம்பு மண்ணுல வளர்த்த மாடு, பப்பு.

ஒருநாள் என்ன ஆச்சின்னா… மழைன்னா மழை… அப்படி ஒரு மழை. அந்த மழையில டேம் ஒடஞ்சி… தென்பெண்ணை ஆத்துல வெள்ளம் வந்து… ஊருல பாதி அடிச்சிட்டுப் போயிடிச்சி.

அந்த நேரத்துல என்ன பண்றது, ஏது பண்றதுன்னு தெரியாத மக்க… கைல கெடச்ச துணிமணி, பாத்திர பண்டங்கள எடுத்துக்கிட்டு… புள்ளக் குட்டியோட… முரம்பு கொல்லிக்கு வந்துட்டாங்க.

இத எப்படியோ தெரிஞ்சிக்கிட்ட கருப்பு மாடு… கட்டியிருந்த கவுத்த அவுத்துக்கிட்டு வந்து, கொட்டாயில தூங்கிக்கினு இருந்த முத்துசாமிக் கவுண்டர் கையில நக்கி எழுப்பிவுட்டு… கொட்டற மழையில மரத்தடியில வந்து நின்னுக்கிட்டு இருந்த மக்கக்கிட்ட… கூட்டினு போய் காட்டுச்சி.

பார்த்த கவுண்டரு… என்ன பண்ணாரு, தெரியுமா…? கண்கலங்கி, எல்லாரயும் தன் கொட்டாவுக்கு கூட்டிக்கிட்டு வந்து தங்க வச்சு… தேவையான உதவி எல்லாம் செஞ்சாரு.

இதுக்குக் காரணமான அந்தக் கருப்பு மாடுதான், தங்கம்… ஓட்டமா ஓடிவந்து உன்ன பாத்துட்டுப் போச்சு.’’

சொல்லி முடித்துவிட்டு ஐ’யின் முகம் பார்த்தேன். ஏதோ, பெரும் சிந்தனையில் ஆழ்ந்திருப்பவன் போல இருந்தான்.

ஒருவேளை எனது கனவில் வந்த கருப்பு மாடு, அவன் சிந்தையில் வந்திட்டதோ, என்னவோ!

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=