ஐபக்கம் – 047 : உள்ளே வந்தாதான் தூங்குவேன்

#மே01,2024

ஏப்ரல் 24 ஆம் தேதி வலது பக்கமாக கவிழ்ந்த ஐ, இன்று காலை இடது பக்கமாக முதல் தடவை கவிழ்ந்திட்டான். அந்த மகிழ்ச்சியில் நாள் முழுக்க இருந்திட்ட எங்களுக்கு, அதைக் காட்டிலும் பெரிய மகிழ்ச்சியை சற்றுமுன் தந்திட்டான். ஆம்!

இரவு எப்போதும் போல கொசு வலை கூடாரம் போட்டு ஐ’யும், மதியும் படுத்தபிறகு, சத்தம் போடாமல் எழுந்து வெளியே வந்து நடுவீட்டுக்குள் உட்கார்ந்து, நீண்ட நாட்களாக படிக்க நினைத்த ஆனந்த குமாரசாமியின் ‘சிவானந்த நடனம்’ வாசித்துக் கொண்டிருந்தேன்.

எப்போதும் படுத்த சிறிது நேரத்திலேயே உறங்கிவிடும் ஐ, கூடாரத்துக்குள் நான் இல்லாதது கண்டு தூங்காமல் அங்கும் இங்கும் தேடிவிட்டு, எப்படியோ வெளியில் உட்கார்ந்து படிப்பதை பார்த்துவிட்டான். அவ்வளவுதான்.

உடனே ‘ஒள… ஒள…’ என்று கூப்பிட்டான்.

கேட்டும் கேட்காதது போல இருந்தேன்.

மறுபடியும் ‘ஒள… ஒள…’ என்றிட்டான்.

மெல்ல தலை நிமிர்த்திப் பார்த்தேன்.

சிரித்து ‘ஒள’ என்றான்.

‘சரி, பயபுள்ள… நாம உள்ளே போய் படுத்தாதான் தூங்குவான் போல’ என்று எண்ணிக்கொண்டு, படித்த புத்தகத்தை வைத்துவிட்டு சென்று படுத்ததும் பொக்கை வாய் காட்டிச் சிரித்தவன், அடுத்த நிமிடமே உறங்கிவிட்டான்.

உடனே மனத்திற்குள் மிக முக்கியமான கேள்வி எழுந்தது. ‘இவன் நம்மள… கூட படுத்துத் தூங்கக் கூப்பிட்டானா? இல்ல, தூங்கற நேரத்துல படிக்கக் கூடாது என்று சொல்வதற்காகக் கூப்பிட்டானா?’

உறங்கும் ஐ’யை எழுப்பிக் கேட்க முடியாது என்பதால், பதில் இல்லாமலேயே உறங்கப் போய்விட்டேன்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=