ஐபக்கம் – 043 : எதிர்க்குரல்

#ஏப்ரல்26,2024
இன்று காலை ஐ குளித்த பிறகு நானும் குளித்துவிட்டு வந்தேன். என்னைப் பார்த்து எப்போதும் போல சிரித்திட்டான். நானும் சிரித்து ‘ஒள’ என்று சொன்னேன். பதிலுக்கு அவனும் ‘ஒள’ என்று சொன்னான். உடனே ‘ஊ’ என்றேன். அவனும் ‘ஊ’ என்றான். ‘ஆ’ என்றிட்டேன். ‘ஆ’ என்றிட்டான்.
அத்தோடு நிறுத்திக்கொண்டு, அடுத்து என்ன சொல்லப்போகிறேன் எனப் பார்த்தவனிடம், ”அப்பு பாப்பா… பப்பு பாப்பா… குக்கு பாப்பா… குட்டி பாப்பா… ஐ பாப்பா… தங்க பாப்பா… தம்பி பாப்பா…” இப்படி என்னென்னவோ சொல்லிக் கொஞ்சிட்டேன். பதிலுக்கு அவனும் தனக்குத் தெரிந்த மொழியில் ஏதேதோ கூறி சிரித்திட்டான். அல்லது கொஞ்சிட்டான்.
நானும் விடுவதாக இல்லை. அதனால், அவனுக்காக எழுதிய ‘ஐ பாட்டை’ பாடினேன். என்ன ஆச்சரியம், ஒவ்வொரு வரி பாடி முடித்ததும் அவனும் பாடுவது போல எதையோ சொல்லிட்டான். அல்லது பாடிட்டான். ஆம்!
இன்று ஐ முதல் தடவையாக எனது பேச்சுக்கு எதிர்பேச்சு மட்டுமல்ல… எதிர்பாட்டும் (அதாவது, எசப்பாட்டும்) பாடிட்டான்.
அது முதல் எப்போது பேசுவான் என்றிருக்கிறது. அப்போதானே, என்னை எதிர்த்துப் பேச ஒருத்தன் அதுவும், யான் பெற்றவன், வந்திட்டான் என்று முழுதாய் அகம் மகிழ முடியும்.
*