ஐபக்கம் – 044 : மூத்தோர் மொழி

#ஏப்ரல்28,2024
ஐ பிறந்த நான்காம் மாத 28 ஆம் தேதியில், மூத்தோரை அதாவது, வயதில் முதிர்ந்த பெரியோரை அறிமுகம் செய்திட எண்ணினோம்.
அதனால், கடந்த ஏப்ரல் ஐந்தாம் தேதி ஊருக்குப் போயிருந்தபோது, ஒட்டுமொத்த மூத்தோர் சார்பாக ஐயாவைக் காட்டி இவ்வாறு அறிமுகம் செய்திட்டோம்.
”ஐ, பாப்பா… தோ, இருக்காரே நம்ம தாத்தா… இவர மாதிரி இந்த பூமியில, வயசுல மூத்த பல கோடி பேரு இருக்காங்க. அவங்க வயசுல மட்டும் மூத்தவங்க இல்ல, சாமி… அனுபவத்திலும் மூத்தவங்க. அதனால என்னிக்கும் மதிச்சி நடக்கணும், சரியா?
நம்மத் தாத்தா அளவுக்கு உழச்ச மனிதர… நான் பார்த்ததே இல்ல. அதுவும், தனக்குன்னு எதயும் வச்சுக்காம… மத்தவங்களுக்கு அதுலயும் குறிப்பா, இந்த ஊர் மக்களுக்கு… எத்தனயோ நல்லது செய்திருக்காரு. ஆமா, மகனே.
இப்படி இவர மாதிரி… இந்த மண்ணோடவும், மக்களோடவும், மரம், செடி, கொடி, ஆடு, மாடு, கோழி, நாய், பூன, ஈ, எறும்போடவும்… அர்த்தமுள்ள வாழ்க்கய வாழற எத்தனையோ பேரு இருக்காங்க. அவங்களோட ஒவ்வொரு வார்த்தையும் அனுபவமொழி. இன்னும் சொல்லனும்னா… அவங்க இந்த பூமியில வாழற தெய்வங்கள். அதனால எப்பயும் போற்றி வணங்க மறந்துடாத, மகனே.
நாம வாழற இந்த வாழ்க்க இருக்கே… ரொம்ப விசித்திரமானது. அதனாலதான் பிறக்குறப்போ ஒண்ணுமே தெரியாத குழந்தையா பிறக்க வச்சு… வயது முதிரும்போது தெரிஞ்சுகிட்ட எல்லாத்தையும் மறக்க வைக்குது.
உன்ன மாதிரி குழந்தைகங்க எப்படி தெய்வமோ… அதுபோல முதியவங்களும் தெய்வம்தான், மகனே. ஆனா, இங்க இருக்கவங்க… குழந்தை செய்ற தவறுகளக் கண்டு ரசிப்பாங்க. அதையே முதியோர் செய்தா வெறுப்பாங்க.
ஒண்ண மட்டும் நல்லா புரிஞ்சுக்கோ. அவங்கள்ல ஒருத்தனா என்னிக்கும் நீ இருக்கக்கூடாது. முதியவங்கள மதிக்காத இளையவங்க… என்னப் பொருத்தவரை மனிதர்களே இல்லன்னுதான் சொல்வன். அதனால, என்னிக்கும் மூத்தோர மதிச்சு; அவங்க சொல் கேட்டு நட. அது எப்பவும் உன்ன… நல்லா வாழ வைக்கும். அதுக்கு மிகச் சிறந்த உதாரணமா, என்னையே சொல்வேன். ஆமா, மகனே.
அதனாலதான், உன் தாத்தாவக் கொண்டாடி… அவரோட 95 ஆவது பிறந்தநாளுக்கு, அவரப் பத்தியே ஒரு புத்தகம் எழுதி பரிசா கொடுத்தன். அத பல்லாயிரம் பேர் படிச்சிருக்காங்க; படிக்கிறாங்க.’’
ஐ’யின் பிஞ்சு விரல்களைப் பற்றியும், மென் தலையில் வருடியும் ஐயா ஆசி வழங்கியது கண்டு, ஒட்டுமொத்த தெய்வங்களும் அதாவது, இப்பூமியில் வாழும் ஒட்டுமொத்த முதியவர்களும், ஒன்றுகூடி வந்து ஆசிர்வதித்ததாய் உணர்ந்திட்டோம். ஆம், ஆம்!
*