ஐபக்கம் – 025 : பத்து விரல் பத்தவில்லை

#மார்ச்12,2024
குழந்தைகள் தம் வாழ்வில் முதல் முறையாக செய்யும் ஒவ்வொன்றும் கவிதை அலர்வதற்கு நிகரானவை. அதனால் அவை வெறுமே கண்டு மகிழ்வதோடு மட்டுமல்லாமல், திரும்பத் திரும்ப மனத்திரையில் ஓட்டி ரசிக்கத்தக்கவை; உவகையுற வேண்டியவை.
அந்த வகையில் கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு (அதாவது, மார்ச் ஆறாம் தேதி) முதல் தடவையாக தன் ஒரு கையால் இன்னொரு கையை பிடித்திட்ட ஐ, சில தினங்களாக கொஞ்சம் கொஞ்சமாக விரல்களை வாயருகில் கொண்டுபோய் வைத்து சப்ப முயற்சித்து, இப்போது நன்றாகவே கற்றுக்கொண்டான்.
அதிலும் இன்று ஒருபடி மேலே போய், ஒரு விரல் பத்தவில்லை என்று இரண்டு கைகளில் இருக்கக்கூடிய பத்து விரல்களையும் மாறி மாறி சப்பிவிட்டு, மொத்த விரல்களையும் ஒன்றாக வாய்க்குள் விட்டு சப்ப முயற்சித்திட்டான்.
குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலையில் (எல்லாமே முக்கியம்தான் என்றாலும்) கை சப்புவதை மிக முக்கியமான ஒன்றாகச் சொல்வார்கள். அதனை அருகில் இருந்து கண்டிட்ட நாங்கள், காலை முதல் சொல்லிச் சொல்லி மகிழ்கிறோம்; மனத்திரையில் ஓட்டி ஒட்டி உவகையுறுகிறோம். ஆம், ஆம்!
*