ஐபக்கம் – 026 : நண்பர்களும், ஐயை அத்தையும்

#மார்ச்15,2024

ஐ’க்கு ‘கீ பாப்பா’ போல ‘வா பாப்பா’ என்னும் வாத்து பொம்மையும், ‘பின்க்கூ பாப்பா’ என்னும் முயல் பொம்மையும், ‘ஒள பாப்பா’ என்னும் புத்தர் சிலையும், ‘ஜூ பாப்பா’ என்னும் வரிக்குதிரை படமும், ‘நட்சத்திர அத்தைகள்’ என்னும் ஒரேபோன்று சிறிதில் இருந்து பெரிதாக இருக்கும் ஐந்து மர பொம்மைகளும் (காசி அருகில் உள்ள சாரநாத்தில் இருந்து வாங்கி வந்தது) முக்கிய நண்பர்களாக; உறவுகளாக தற்போது இருந்து வருகிறார்கள்.

எங்கள் இருவருக்கு அடுத்தபடியாக இவர்களோடுதான் அதிகமாக இருக்கிறான்; கதை பேசுகிறான்; விளையாடுகிறான்; சிரிக்கிறான். அதிலும் குறிப்பாக, நட்சத்திர அத்தைகளில் பெரிய அத்தைதான் ஐ’க்கு மிகப் பிடித்தமானது. விட்டால் எங்களையே மறந்துவிட்டு, அவற்றோடு மணிக்கணக்காக கதை பேசி விளையாடிக் கொண்டிருப்பான். ஆம்!

குழந்தைகள் உலகில் பொம்மைகளுக்கு தனித்த இடமுண்டு. அதிலும் ஒரு சில பொம்மைகள்தான் நெருக்கமாக இருப்பவை. அந்த வகையில் இப்பெரிய அத்தைதான் ஐ’க்கு இதுவரையான பொம்மைகளிலேயே அதிகம் பிடித்தவை; நெருக்கமானவை எல்லாம்.

[பெயர்க் குறிப்பு : ‘கீ பாப்பா’வுக்கு ஐ போல எப்படி ஓரெழுத்தில் பெயரிட்டோமோ அதேபோல, ‘வா பாப்பா’வுக்கும், ‘ஜூ பாப்பா’வுக்கும் நாங்கள் சேர்ந்து பெயரிட்டோம். ‘ஒள பாப்பா’வுக்கு அவனே இட்டுவிட்டான். பிங்க் நிறத்தில் இருந்ததால் ‘பின்க்கூ’ என்று மதியும், நட்சத்திரங்கள் மாதிரி ஒன்றுபோல வரிசையாக இருந்ததால் ‘நட்சத்திர அத்தைகள்’ என்று நானும் பெயரிட்டோம்.

பிறகு இவற்றில் பெரிதாக இருக்கும் அத்தையை மட்டும் ஐ’க்கு ஏனோ அதிகமாக பிடித்துவிட்டதால், அதற்கு தனியாக ஒரு பெயர் வைக்கலாம் என்று முடிவெடுத்து நானும் மதியும் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தோம். அப்போது சட்டென  சங்க இலக்கியத்தில் வரக்கூடிய தித்தன் மகள் ஐயை நினைவுக்கு வந்தாள். உடனே அதையே பெயராக வைத்துவிட்டோம்.]

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=