ஐபக்கம் – 022 : ஐயா என்றது

#பிப்ரவரி27,2024

இன்றைய தினம் என் வாழ்வில் ஒருபோதும் மறக்க முடியாத நாள்.

பிற்பகல் ஒரு மணி இருக்கும். ஐ’யை மடியில் படுக்க வைத்துக்கொண்டு, நடுநடுவில் அவனோடு பேசியவாறு மடிக்கணினியில் ‘ஆடூஉ மகடூஉ’ எழுதிக் கொண்டிருந்தேன். சட்டென்று என்னைப் பார்த்து மெல்லிய சத்தத்தில் சிரித்திட்டவன், சற்றும் எதிர்பாராத வகையில் முதல் தடவையாக ‘ஐயா’ என்று அழைத்திட்டான். ஆம்!

‘ஐயா’ என்ற சொல் எனது வாழ்வில் எத்தனை முக்கியமானது; மகத்துவம் மிக்கது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஒருவேளை அப்பா என்றோ, தந்தை என்றோ இல்லை, வேறு ஏதேனும் சொல்லியோ அழைத்திருந்தால்கூட இந்த அளவுக்கு மகிழ்ந்திருப்பேனா, தெரியாது. ஆனால் ஐயா என்றிட்டது, சொல்லில் அடக்க முடியாத ஆனந்தத்தையும், மனச்சிலிர்ப்பையும் ஒருங்கே தந்திட்டது.

பிறந்த அன்று அம்மா என்றிட்டவன், இதோ, இந்த 62 ஆவது நாளில் ஐயா என்றிருக்கிறான் (இது எனது பி.எட் வரிசை எண்). ஆதலால் 62 என்ற எண்ணும், ஐயா என்ற சொல்லும் இன்று முதல் என் வாழ்வில் கூடுதல் மகத்துவம் பெற்றதாய் உணர்கிறேன். ஆம், ஆம்!

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=