ஐபக்கம் – 023 : மா மரம்

#பிப்ரவரி28,2024

ஐ பிறந்து இன்றோடு சரியாக இரண்டு மாதம் ஆகின்றன. அதனால் அவன் பிறந்த இந்த 28 ஆம் தேதியில், திருக்குறள், நூலகத்துக்கு அடுத்தபடியாக அவனுக்கு எங்கள் வீட்டருகில் இருக்கும் மா மரத்தை அறிமுகம் செய்திட்டோம்.

[மா மரம் என்பது இங்கே ஒட்டுமொத்த மரங்களின்; தாவரங்களின் பிரதிநிதி என்பது குறிப்பிடத்தக்கது.]

அதற்காக அவனை காலையில் சீக்கிரமே குளிப்பாட்டி தயார் செய்து தூக்கிக் கொண்டு போய், மா மரத்தருகில் நின்று காண்பித்து இவ்வாறு அறிமுகம் செய்திட்டோம்.

”ஐ பாப்பா… தோ, இருக்கு பாரு… இதான் மா மரம். தமிழர்களோட வாழ்வுல முக்கனிகள்னு சொல்லப்படுற… மா, பலா, வாழையில முதல் கனிய தர்ற மரம். இந்த மா மரம் இருக்கே… இது மிக உறுதியானது. பல்வேறு மருத்துவ குணங்கள் மிக்கது. எல்லா மரத்தையும் போல தன்னுடைய ஒவ்வொரு பாகத்தையும் மற்ற உயிர்களுக்காக தரக்கூடியது. ஆமா, மகனே.

மா மரத்துல பொதுவா ரண்டு வகை இருக்குன்னு சொல்லுவாங்க. ஒண்ணு, குண்டு மா. இன்னொண்ணு ஒட்டு மா. அந்த காலத்துல தேமா, புளிமா’ன்னு சுவைய வச்சி சொன்னாங்க. இதத் தாண்டி ரண்டுலயும் பல வகைங்க இருக்குறதா சொல்றாங்க. அதையெல்லாம் நீ வளர்ந்து விரிவா தெரிஞ்சிக்க, மகனே.

இன்னொரு முக்கியமான விஷயம். இந்த மா மரம் இருக்கே… இது ஏதோ, இன்னைக்கு நேத்துல இருந்து இருக்கிறதா, நெனக்காத. நம்ம மூதாதையர்கள் வாழ்ந்த ஈராயிரம் வருசத்துக்கு முன்னான சங்க காலத்திலிருந்தே இருக்கு. இத,

‘….சேறு சிறந்து,

உண்ணுநர்த் தடுத்தன தேமா’ன்னு மலைபடுகடாமிலும் (137, 138),

‘காமர் மாஅத்துத் தாது அலர் பூவின்

வண்டுவீழ்பு அயரும் கானல்’ன்னு குறுந்தொகையிலயும் (306),

‘………நீழல்

ஓங்குசினை மாவின் தீங்கனி நறும்புளி’ன்னு புறநானூறிலும் (399), நம் முன்னோர்கள் பாடியிருக்காங்க, மகனே.

அதுமட்டுமில்ல… தமிழ்நாட்டுல மாங்காடு – காமாட்சியம்மன் கோயில், கோயம்பத்தூர் பக்கத்துல இருக்க அனுவாவி – சுப்ரமணியர் கோயில், மயிலாடுதுறை – மயூரநாதர் கோயில்,  நாகப்பட்டினம் – காயரோகணேசுவரர் கோயில், அவிநாசி – அவிநாசிலிங்கேசர் கோயில், காஞ்சிபுரம் – ஏகாம்பரநாதர் கோயில்ன்னு பல கோயில்கள்ல தலத் தாவரமா வச்சி வணங்குறாங்க.

அதோட… மாமண்டூர், மாங்காடு, மாங்குளம், திருமாந்துரை, மாம்பட்டு, தேமாங்குளம்’னு பல ஊர்களோட பெயர்களும்…

மா பழுத்தா கிளிக்கு; வேம்பு பழுத்தா காக்கைக்கு, தாய் தந்தை ஊட்டாத சோற; மாங்கா ஊட்டும், கூழுக்கு மாங்கா தோக்குமா?, ஒரே கல்லுல ரண்டு மாங்கா’ன்னு நூத்துக்கணக்கான சொலவடைகளும் மா மரத்தக் கொண்டு இருக்கு, மகனே.

மா மரத்தோட பூ இருக்கே… அது பாக்க ரொம்ப அழகா இருக்கும். தோ, பாரு… எவ்ளோ அழகா இருக்குல்ல. இதோட பழத்த அப்படியேவும், சாறு பிழிந்தும் தின்னலாம். காய அப்படியேவும், உப்பு மிளகா வச்சியும், ஊறுகாய் போட்டும் திங்கலாம். இலைய வீட்டு வாசப்படியில கட்டி வச்சா… எந்தக் கிருமியும் வராதுன்னு சொல்வாங்க. இப்படி இன்னும் எத்தனயோ வகையில நமக்கு உதவக் கூடியது. அதேமாதிரி, மற்ற உயிர்களுக்கு வாழ இடமும், உண்ண காயும் கனியும் தரக்கூடியது. ஆமா, மகனே.

இப்படி இந்த மா மரம் மாதிரி… பூமியில ஆயிரக்கணக்கான மரம், செடி, கொடிங்க இருக்கு. அதையெல்லாம் நீ வளர்ந்து தெரிஞ்சுக்கனும். அதுங்கக்கிட்ட எப்பயும் அன்பா நடந்துக்கனும். மனிதர்களுக்கு நிகரா நடத்தனும்; மதிக்கனும். சரியா…?’’

இவ்வாறு மா மரத்தில் ஆரம்பித்து, தாவரங்கள் குறித்த பொதுவான விஷயங்களைச் சொல்லி மனத்துக்கு மிக நிறைவான வகையில் அறிமுகப்படுத்திவிட்டு, சிறுவயதில் எங்களூரில் மா மரம் பற்றி பாடிய இரண்டு பாடல்களை பல வருடங்களுக்குப் பிறகு ஐ’க்கு பாடிக் காட்டினேன். ஆம்!

‘மாமரமே மாமரமே பூ கொடு –

அப்பூவயெல்லாம் காயாக்கி கனி கொடு..

கனியயெல்லாம் விதையாக்கி செடி கொடு –

அச்செடியயெல்லாம் மரமாக்கி இலை கொடு…’

‘மாங்காய்டோய் மாங்காய்டோய் –

நாவில் எச்சி ஊரவைக்கும்..

மாங்காய்டோய் மாங்காய்டோய் –

மொத்தப் பல்லும் கூசவைக்கும்..

மாங்காய்டோய் மாங்காய்டோய்..’

கண்கள் விரிய மரத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், நடுநடுவில் எங்களைப் பார்த்து சிரித்திட்டான். ஆம்!

அந்தச் சிரிப்பு தமக்கு மிக முக்கியமான ஒன்றை; உறவை வாழ்வில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி உரைத்தது போல இருந்தது.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=