ஐபக்கம் – 021 : ஐ வைத்த பெயர்கள்

#பிப்ரவரி22,2024
ஐ’க்கு நாங்கள் ஓரெழுத்தில் பெயரிட்டது போல அவனும் எங்களுக்கு ஓர் எழுத்தில் பெயரிட்டிருக்கிறான்.
‘அதெப்படி இரண்டு மாதக் குழந்தை போய் பெயரிடும்?’ என்று கேட்கலாம்.
அவன் தனது அம்மாவை பார்த்தால் ‘ஊ…’ என்கிறான். என்னைப் பார்த்து ‘ஒள…’ என்கிறான்.
‘இது சாதாரணமாக நிகழும் ஒன்றுதானே?’ என்று நினைக்கலாம்.
நாங்களும் ஆரம்பத்தில் அப்படித்தான் நினைத்தோம். ஆனால், இன்று மதியம் நானும் மதியும் ஒருசேர அவன் பக்கத்தில் படுத்து விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது அவன் மதி இருக்கும் பக்கமாகப் பார்த்து ‘ஊ’ என்றும், நான் இருக்கும் பக்கம் பார்த்து ‘ஒள’ என்றும் மாறிமாறி சொல்லக் கண்டு வியந்திட்டோம். ஆம்!
‘இப்படிக் கூட சாத்தியமா?’ என நம்ப முடியாமல் இருந்த நாங்கள், இன்று முழுமையாக நம்பினோம்.
சற்றுநேரம் ஆனதும் ஒரு கேள்வி எழுந்தது. ‘இவன் ஏன் எங்களைப் பார்த்து ஊ என்றும், ஒள என்றும் சொல்ல வேண்டும்?’
உடனே போய் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ் லெக்சிகன் பேரகராதியில் தேடிப் பார்த்தேன். ஊ என்பதற்கு உணவு. அதாவது, அவன் அம்மா அவனுக்கு வேண்டிய உணவு (பால்) தருவதால் அவளை உணவு எனப் பொருள் தரும் ஊ என்கிறான். ஒள (ஒளகம்) என்பதற்கு இடைப்பாட்டு. அதாவது, நான் அடிக்கடி பேச்சுக்கு நடுவில் அவனுக்கு பாட்டு பாடுவதால் இடைப்பாட்டு எனப் பொருள் தரும் ஒள என்கிறான். ஆச்சரியமாக இருந்தது.
‘நாங்கள் எப்படி அவனுக்கு அர்த்தமுள்ள பொருள் தரக்கூடிய தனித்துவமான பெயரை வைத்தோமோ அதேபோல, அவனும் எங்களுக்கு வைத்திருக்கிறான்’ என்னும் வியப்போடு சென்று அவனது நெற்றியிலும் கன்னத்திலும் முத்தமிட்டேன்.
உடனே, தனது பொக்கை வாய் காட்டிச் சிரித்து ‘ஒள’ என்றிட்டான்.
*