ஐபக்கம் – 013 : ஃபோட்டோஷூட்

#ஜனவரி17,2024
இன்று கருநாள் (கரிநாள்) என்னும் காணும் பொங்கல் திருநாள்.
கடந்த ஒரு வாரமாக ‘பால் பொங்கிடிச்சா?’ என்று முதலில் கேட்டு பணமோ, பரிசோ வாங்க திட்டமிட்டிருந்த மதியிடம், அவள் கேட்பதற்கு முன்பாக எழுந்ததும் கேட்டுவிட்டு, அருகில் இருக்கும் பல்லாவரம் மலையடி வரைக்கும் சிறுநடை போய்விட்டு வந்தேன்.
செல்லும்போது உறங்கிக்கொண்டிருந்த ஐ, வரும்போது விழித்து விளையாடிக் கொண்டிருந்தான். சற்றுநேரம் அவனோடு கதைபேசி விளையாடிவிட்டு, வீட்டில் இருக்கும் சின்னச் சின்ன வேலைகளையெல்லாம் முடித்து ஐ’யை குளிப்பாட்டியதும் எண்ணெய் தேய்த்துக்கொண்டு நானும் குளிக்கப் போயிருந்தேன்.
ஒரு பத்து நிமிடம்தான் இருக்கும். அதற்குள் மதி, ‘மகவே வருக’ நூல்களை எடுத்து வரிசையாக படுக்கை போன்று அடுக்கி, அதன்மீது ஐ’யை படுக்க வைத்து, ஓர் அழகான ஃபோட்டோஷூட் நடத்திக் கொண்டிருந்தாள். பார்க்கவே மிக மகிழ்ச்சியாக இருந்தது.
‘ஊரில் இருக்கும் யார் யாரோ… எப்படி எப்படியெல்லாமோ, ஃபோட்டோசூட் நடத்தி இருப்பார்கள். ஆனால், இதுபோல ஒரு ஃபோட்டோஷூட் அதுவும், பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தைக்கு… எங்கும், எப்போதும் நடந்திருக்க வாய்ப்பே இல்லை’ என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டு போய், இந்த புத்தம் புது ஐடியாவுக்காக மதிக்கு ஓர் ஈர முத்தம் தந்துவிட்டு, என் பங்குக்கு நானும் சில ஒளிப்படங்களை நகர்பேசியில் எடுத்துக்கொண்டேன்.
நாளை ஐ வளர்ந்து யாவற்றையும் பார்க்கையில், தன் வாழ்வில் நடந்த ஒவ்வொன்றும் கவிதை போல இருப்பதாக எண்ணக்கூடும்; உணரக்கூடும். ஆம்!
அவற்றில் மதி நிகழ்த்திய இந்த ஃபோட்டோஷூட் முதன்மையான சிலதில் இருக்கும் என்று சொல்லத் தோன்றுகிறது.
*