ஐபக்கம் – 012 : ஐ பாட்டு

#ஜனவரி16,2024
ஐ’க்கு வைத்திருக்கும் பெயரையும், அதற்கான பொருளையும் கேட்டு பலரும் வியந்தார்கள். அதிலும் குறிப்பாக, அவன் பெயரை அறிவிக்கும்போது அரச இலையில் இருப்பது போல வடிவமைத்து, கீழே அதற்கான பொருளையும் தந்திருந்தது கண்டு சிலர் ஆச்சரியப்பட்டார்கள்.
‘ஐயின் பெயரையும், பொருளையும் ஊருக்கெல்லாம் சொல்லிவிட்டோம், சரி. அவற்றை ஐ’க்கு எப்படி சொல்வது?’ என்ற கேள்வி எழுந்தது. உடனே, ‘அதை ஒரு பாடலாக எழுதி… அவனுக்குப் பாடிக் காட்டினால் என்ன?’ என்று பதில் கேள்வியும் பின்னாலேயே முளைத்தது.
அதனால் கையோடு எழுந்து வந்து என் எழுத்து மேசையில் உட்கார்ந்து, அவன் பெயருக்கான பொருளுடன், சொல்ல நினைத்த சிலவற்றையும் சேர்த்து ஓர் அழகான பாடலாக எழுதி எடுத்துக்கொண்டு போய் பாடிக் காட்டினேன்.
ஒவ்வொரு வரியாகக் கேட்டு, கை கால்களை அசைத்தும்; கண்களை அகல விரித்தும் காட்டி மகிழ்ந்திட்டான். ஆம்!
ஐ பெயர் குறித்து ஐ’க்காக எழுதிய அந்த ‘ஐ பாட்டு’ இதுதான் :
‘ஐ-பாப்பா ஐ-பாப்பா –
நீ அழகு பாப்பாடா…
ஐ-பாப்பா ஐ-பாப்பா –
நீ வியப்பு பாப்பாடா…
ஐ-குட்டி பாப்பா நீ –
மென்மை பாப்பா…
ஐ-குட்டி பாப்பா நீ –
நுண்மை பாப்பா…
ஐ-குட்டி பாப்பா நீ –
இனிமை பாப்பா…
ஐ-குட்டி பாப்பா நீ –
தலைவன் பாப்பா…
ஐ-குட்டி பாப்பா நீ அரசன்டா –
ஐ-குட்டி பாப்பா நீ ஆசான்டா…
ஐ-குட்டி பாப்பா நீ தங்கம்டா –
ஐ-குட்டி பாப்பா நீ வைரம்டா…
ஐ-குட்டி பாப்பா நீ சக்கரடா –
ஐ-குட்டி பாப்பா நீ சமத்துடா…
ஐ-குட்டி பாப்பா நீ செல்லம்டா –
ஐ-குட்டி பாப்பா நீ வெள்ளம்டா…
(ஐ-பாப்பா…)
*
அம்மா மடியில படுத்து நீ –
அழகாய் அம்மம் உண்டிட வேண்டும்…
அப்பா தோளில் சாய்ந்து நீ –
இனிதாய் உலகை கண்டிட வேண்டும்…
மலைமேல் ஏறி நின்று நீ –
வானை இறங்கி வரச்சொல்ல வேண்டும்…
சுழலும் பூமியை நிறுத்தி நீ –
திரும்பி சுழல பணித்திட வேண்டும்…
மரங்களை கட்டி அணைத்து நீ –
கதைபல பேசி மகிழ்ந்திட வேண்டும்…
உயிர்களை என்றும் மதித்து நீ –
உள்ளத்துள் போற்றி சிறந்திட வேண்டும்…
(ஐ-பாப்பா…)
*