ஐபக்கம் – 011 : பெயரிடு விழா

#ஜனவரி15,2024
மார்கழி முடிந்து இதோ, தை பிறந்துவிட்டது (ஐ பிறந்து இன்றோடு பத்தொன்பது நாள்).
ஐ பிறந்தது முதலே பலரும் கேட்டு வந்தார்கள். ”இப்படி ஊருல இருக்க குழந்தைகளுக்கெல்லாம் புதுசு புதுசா பெயர் வைக்கிறீங்களே… உங்க மகனுக்கு என்ன பெயர் வச்சிருக்கீங்க?’’
மிக நெருங்கிய நண்பர்களிடம் மட்டும் கூறிவிட்டு, மற்றவர்களிடம் தை ஒன்றாம் தேதி சொல்வதாகச் சொன்னேன்.
அந்த வகையில் இன்று காலை எழுந்து வீட்டை சுத்தம் செய்து, வாசலில் மாஇலையும் வேப்பிலையும் கட்டிவிட்டு, ஐ’யை நன்றாகக் குளிப்பாட்டி புத்தாடை அணிவித்து, நடுவீட்டுக்குள் பெயர் கோலமிட்டு, அதன் அருகில் தலைவாழை இலையில் அவனை படுக்க வைத்து, கையில் ஓர் அரசங் கொத்தைக் கொடுத்து, நானும் மதியும் ஒருசேர அவன் காதில் ‘ஐ’ எனும் பெயரை மூன்று தடவை உச்சரித்து மிக எளிய முறையில் ஆனால், மனத்துக்கு நிறைவான வகையில் பெயரிட்டுவிட்டு, பின் பொதுவில் எல்லோருக்கும் அறிவித்தோம்.
[வாழையடி வாழையாக வளமுடன் வாழ வேண்டும் என்பதற்காக வாழை இலையில் படுக்க வைத்ததும், மரங்களில் அரசு போல மனிதர்களில் இருக்க வேண்டும் என்பதற்காக அரசங் கொத்தை கையில் கொடுத்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.]
சொன்ன நிமிடத்தில் இருந்து இதோ, இரவு பதினொரு மணிக்கு உறங்கப் போகும் இந்நிமிடம் வரை, சுமார் நூற்றுக்கும் அதிகமானவர்கள் வாழ்த்தியிருப்பார்கள். கூடவே, பெயர் குறித்த தங்கள் வியப்பையும்; மகிழ்வையும் பகிர்ந்திருப்பார்கள். ஆம்!
நாங்கள் ஐ’க்கு வைத்த இந்த ஓரெழுத்து தமிழ்ச் சொல்லுக்கு, ‘வியப்பானவன்; அழகானவன்; மென்மையானவன்; நுண்மையானவன்; இனிமையானவன்; தலைவன்; அரசன்; ஆசான்…’ எனப் பல பொருள்கள் உண்டு.
நான் அறிந்தவரையில் இதுதான் தமிழில் வைக்கப்பட்ட முதல் ஓர் எழுத்துப் பெயர் என்று நினைக்கிறேன். இனி இதே பெயரை பலருக்கு வைக்கலாம். அல்லது இதுபோன்று இருக்கும் ஓரெழுத்துச் சொற்களை வைக்கலாம். எனினும், தொடக்கம் இதுதான்.
அவ்வகையில் நானும் மதியும் மிக நிறைவாக உணர்கிறோம். இனி செய்ய வேண்டியதெல்லாம் விரைந்து குழந்தைகளுக்கான புதுப் பெயர்கள் அடங்கின, ‘ஆடூஉ மகடூஉ’ நூலை முடிக்க வேண்டும். இப்போது என் உள்ளம் உரைப்பது இது ஒன்றைத்தான்.
*