ஐபக்கம் – 003 : முதல் வார்த்தை

#டிசம்பர்28,2023

மனைவிக்கு சற்றும் எதிர்பாராத விதமாக பனிக்குடம் உடைந்து உடனே அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க வேண்டிய சூழல் உண்டானது.

”பெண் உதவியாளர் ஒருத்தர எவ்வளவு சீக்கிரம் முடியுமோ கூட்டிட்டு வாங்க’’ என்றார்கள் மருத்துவமனை ஊழியர்கள்.

‘இந்த நள்ளிரவு நேரத்தில் என்ன செய்வது?’ என்று தெரியாமல் தோழி சௌந்தர்யா எண்ணுக்கு அழைத்து, ”ரொம்ப ரொம்ப அவசரம். உடனே கிளம்பி மருத்துவமனைக்கு வரமுடியுமா?’’ என்றேன். அடுத்த அரை மணி நேரத்தில் வந்துவிட்டார்.

உடனிருந்து மதியையும், ஐ’யையும் நன்றாக கவனித்துக் கொண்டவர், அதிகாலை மூன்றரை மணி இருக்கும், என் எண்ணுக்கு அழைத்து, ”தம்பி இப்பதான் பால் குடிச்சிட்டு நல்லா தூங்குறான். மதியும் தூங்கிட்டாங்க’’ என்றார்.

மகிழ்வோடு கேட்டுக்கொண்டு, ”ரொம்ப ரொம்ப நன்றி சௌந்தர்யா… இந்த அவசர நேரத்துல வந்து பெரிய உதவி பண்ணீங்க. நீங்க இல்லனா இன்னிக்கி என்ன ஆகி இருக்குமோ, தெரியல’’ என்றேன்.

நான் சொல்லி முடிக்கும் வரை காத்திருந்தவர், ”டேய் லூசு… என் நண்பனுக்காக இதுகூட செய்யலன்னா எப்படி? இதுக்கு போயி நன்றி சொல்றாராம்… நன்றி’’ என்று திட்டிவிட்டு, ”பாத்தியா, உன்னால நான் சொல்ல வந்ததையே மறந்துட்டேன். உன் பையன் உன்னத் தாண்டி நல்லா வருவான், பார்த்துக்க. பிறந்த கொஞ்ச நேரத்துலயே ‘அம்மா’ன்னு சொல்லிட்டான்’’ என்றார்.

”அப்படியா?” என்று வியப்புடன் கேட்க, ”ஆமா, அத சொல்லதான் கூப்பிட்டேன்’’ என்றுவிட்டு, சற்றுமுன் எடுத்த ஒளிப்படங்களையும், காணொளிகளையும் அனுப்பி வைத்தார்.

மருத்துவமனை வளாகத்தில் இருந்த மா மரத்தடி இருக்கையில் உட்கார்ந்துகொண்டு, ஒளிரும் முழு நிலவையும், திருவாதிரை நட்சத்திரத்தையும் நடுநடுவில் கண்டபடி ஒவ்வொன்றாக விடியும் வரைக்கும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன்.

முன்மதியம் 12 மணி இருக்கும். மதியை பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்திருந்த உதவியாளர் அம்மா வந்ததும் அவரை உள்ளே அனுப்பிவிட்டு, சௌந்தர்யாவிடம் புறப்படும் முன்பாக சொன்னேன். ”தம்பிக்கு ஐ’ன்னு ஓரெழுத்துல பெயர் வைக்கலாம்னு இருக்கோம்.’’

சிலநொடி அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தோடு என்னைப் பார்த்துவிட்டு சொன்னார். ”பிறந்த கொஞ்ச நேரத்துலயே அம்மா’ன்னு சொல்லி ஆச்சரியப்படுத்தினான். இப்போ அதுக்கு ஏத்தமாதிரி அவனுக்கு ஐ’னு பெயர் வைக்கப் போறதா சொல்ற. என்ன சொல்றதுன்னே தெரியல. ரொம்ப ரொம்ப சந்தோசம்.’’

தோழி சென்று வெகுநேரம் ஆன பிறகும், அவர் சொல்லிப் போன வார்த்தைகள் மனக்காதில் நிற்காமல் ஒலித்துக்கொண்டிருந்தன.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=