ஐபக்கம் – 004 : நற்தொடக்கம்

#டிசம்பர்30,2023

ஐ பிறந்து இன்றோடு மூன்றாவது நாள். இவ்வருடத்தின் கடைசி நாளுக்கு முந்தின நாள்.

‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை  / பண்பும் பயனும் அது’ என்னும் ‘இல்வாழ்க்கை’ அதிகாரத்து குறளை வாசித்து, சென்னை – வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவரை சாட்சியாக வைத்து, மிகச் சில நண்பர்களும் அன்பர்களும் சூழ, பனை மாலை சூடி, அகரத்தாலி அணிவித்து நானும் மதியும் மணம் செய்துகொண்டது பலரும் அறிந்திருப்பீர்கள். கூடவே, இதன் மூலமாக நாங்கள் திருக்குறள் மீது எந்த அளவுக்கு மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறோம் என்றும் புரிந்திருப்பீர்கள்.

இந்நிலையில் ஐ பிறந்த முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறள் சொல்லித் தர வேண்டும் என அவன் பிறப்பதற்கு முன்பே எண்ணியிருந்தோம். அது புரிகிறதோ இல்லையோ, ஒரு நல்ல விஷயத்தை அவனது வாழ்வில் தொடங்கிவைக்க வேண்டும்; அதை நாள்தோறும் பின்பற்ற வேண்டும் என்று நினைத்தோம்.

அதனால் மருத்துவமனையில் இருந்த முதல் நாள் அதாவது, ஐ பிறந்தநாள் அன்று, அவன் காதருகில் சென்று இவ்வாறு முதல் திருக்குறளையும், அதற்கானப் பொருளையும் சொன்னேன். ”ஐ பாப்பா… உனக்கு இன்னிக்கி திருவள்ளுவர் தாத்தா என்ன சொல்லிருக்காரு, தெரியுமா…? ‘அகர முதல எழுத்தெல்லாம்

ஆதி / பகவன் முதற்றே உலகு’ன்னு சொல்லிருக்காரு தங்கம். அப்படின்னா என்ன தெரியுமா…? எல்லா எழுத்துக்களும் ‘அ’ன்ற எழுத்த முதலாக் கொண்டிருக்க மாதிரி… நாம இருக்க இந்த உலகம்… ஆதி பகவன முதலாக் கொண்டுள்ளது’ன்னு சொல்லாரு அப்பு. தாத்தா, எவ்ளோ நல்லா சொல்லிருக்காருல்ல…’’

கண்கள் மூடிக் கேட்டுக் கொண்டிருந்தவன், சட்டென தனக்குப் புரிந்ததுபோல (அது எதேற்சையாகவும் இருக்கலாம்) மென்மையாக உதடசைத்து புன்னகைத்தான். கண்டு ஒருசேர உவகையுற்றோம்.

அடுத்தநாளான நேற்று இரண்டாவது குறளும், இன்று மூன்றாவது குறளும் சொல்லித் தந்தேன். இதனை சற்று தள்ளி சுவரோரமாக உட்கார்ந்திருந்த உதவியாளர் அம்மா கவனித்துவிட்டு வந்து, என்னிடம் நேரடியாகக் கேட்காமல் ஐ’யிடம் கேட்பது போலக் கேட்டார்.

”என்ன செல்லம்… உங்கப்பா தெனம் காலையில வந்து, உன்கிட்ட மட்டும் என்னமோ ரகசியம் சொல்றாரு. அது என்னன்னு இந்த ஆயாகிட்ட சொல்லமாட்டியா…?’’

மதியும் நானும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துவிட்டு, அவரிடம் சொன்னேன். ”குழந்தைக்கு தினம் ஒரு திருக்குறள் சொல்லித் தர்றோம்மா.’’

இப்படியொரு பதிலை சற்றும் எதிர்பாராதவர், ஏதோ போல என்னை விசித்திரமாகப் பார்த்துவிட்டு, ”ஓ, திருக்குறளா…? நல்லா சொல்லிக் கொடுப்பா’’ என்றுவிட்டு போய் ஏற்கனவே அமர்ந்திருந்த இடத்திலேயே பழையபடி உட்கார்ந்துகொண்டார்.

‘யார் என்ன நினைத்தால் நமக்கென்ன?’ என்று சொன்ன குறளுக்கான பொருளை ஐ’யிடம் சொன்னேன்.

மருத்துவமனையில் வேறு வழி இல்லை என்பதால் எனது நகர்பேசியில் நிறுவியிருந்த செயலி கொண்டு அன்றன்றைக்கான குறளையும், பொருளையும் சொல்லி வருகிறோம். வீட்டுக்குப் போனதும் நூலகத்தில் இருக்கும் திருக்குறளை எடுத்து அவன் படுக்கையருகே வைத்திருந்து கூறலாம். அல்லது கரும்பலகை ஒன்று வாங்கிப்போய் மாட்டி எழுதி வைத்து (இது அவனுக்கான பக்கம் என்பதால் அதன் மேற்புறம் ‘ஐ’பக்கம் என்றெழுதி) சொல்லலாம் என்று முடிவெடுத்தோம்.

அதன்படி இன்று மருத்துவமனையிலிருந்து இரவு வீட்டுக்கு வருவதற்கு முன்பாக நேராக பிராட்வே சென்று ஒரு கரும்பலகை வாங்கிவந்து சுவரில் மாட்டிவிட்டேன்.

இனி செய்ய வேண்டியதெல்லாம் இதுதான். தினம் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக ஐ’க்கு திருவள்ளுவர் தாத்தா சொல்லும் அன்றன்றைக்கான திருக்குறளையும், பொருளையும் எழுதிச் சொல்லித்தர வேண்டும். அவ்வளவுதான்.

‘பிறந்த குழந்தைக்கு போய் யாராவது திருக்குறள் சொல்லித் தருவார்களா? அப்படியே சொல்லித் தருவதால் என்ன பயன்?’ என்று யாரேனும் கேட்கலாம். பயன் கருதி நாங்கள் இதை செய்யவில்லை; தொடங்கவில்லை. நல்ல விஷயங்களை என்றும் அவனுக்கு சொல்லித் தர நினைத்தோம். அதனால் குறளில் ஆரம்பித்திருக்கிறோம்.

வருங்காலத்தில் மொத்தத் திருக்குறளும் முடிந்ததும் அடுத்த ஒன்றைத் தொடங்குவோம். அதுவும் முடிந்தால் அதற்கடுத்தது. இப்படியே அவன் வாழ்நாள் முழுக்க எதையாவது செய்திடவே எண்ணுகிறோம் (நாளை வளர்ந்து அவனும் எங்களோடு இப்பயணத்தில் சேர்ந்துகொண்டு தனக்கானதை செய்யலாம்). ஆம், ஆம்!

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=