ஐபக்கம் – 002 : குட்டி நடராசர்

#டிசம்பர்28,2023
நேற்றைய தினம் மார்கழி திருவாதிரை என்பதால், தில்லை – நடராசர் கோயிலில் தேரோட்டம் முடிந்து ஆருத்ரா தரிசனம் வெகு விமர்சையாக நடந்துகொண்டிருந்தது.
தமிழர் சிற்பக்கலைத் திறனை உலகுக்குக் காட்டிய சிற்பங்களில் முதன்மையான நடராசர் (அதிலும் ஆனந்த தாண்டவம்) சிற்பத்தின் மீது அளவு கடந்த அன்பும் ஈர்ப்பும் கொண்டவன் என்பது எனது எழுத்துகளை வாசித்த யாவரும் அறிந்திருப்பர். அந்த நடராசர் மூலவராக இருக்கும் தலைமைக் கோயிலில் நடக்கும் இத்திருவிழாவில் சென்றாண்டு நானும், மதியும் கலந்துகொண்ட நினைவு முன்தினம் முதலே அடிக்கடி வந்துபோனது.
‘அய்யோ இந்த வருசம் திருவிழாவுக்குப் போயி… நடராசர பாக்க முடியலயே’ என ஏங்கிக் கொண்டிருந்த எனக்கு, அதே தினமான நேற்றிரவு அதாவது, இன்று அதிகாலை 1.23-க்கு, ஐ வந்து ஒரு குட்டி நடராசராக பிறந்ததைக் கண்டு வானளவு துள்ளிக் குதித்து ஆனந்தித்தேன்; ஆர்ப்பரித்தேன். மனத்தால் பூசித்து ஆராதித்தேன். ஆம்!
வருடம்தோறும் மார்கழி மாதத்தில் ஏதாவது முக்கியமான ஒன்றை வாசிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தவன், இந்த ஆண்டு மார்கழி முதல் தேதி தொடங்கி தினம் ஒரு திருவாசகம் படித்து வந்தேன். இதனை சில தினங்களுக்கு முன்பு கன்னிமாரா நூலக வளாகத்தில் உட்கார்ந்து வாசித்துக்கொண்டிருக்கையில் பார்த்த தம்பி சிரஞ்சீவி நினைவில் வைத்திருந்து, இன்று ஐ பிறந்து சிறிது நேரம் ஆனதும் சொன்னார்.
”அண்ணா… இன்னைக்கு சிவனுக்கு உகந்த; அவர் பிறந்ததா சொல்லப்படற மார்கழி திருவாதிரை. இந்த நாள்ல உங்களுக்கு மகன் பிறந்ததும்… நீங்க சில நாட்களா திருவாசகம் வாசித்து வர்றதும்… ஏதோ, காரணத்தோடதான் நடந்திருக்குன்னு தோணுதுண்ணா. ரொம்ப சந்தோசமா இருக்கு.’’
எதுவும் சொல்லாமல் மெல்லிதாய் புன்னகைத்துவிட்டு, சென்றாண்டு கண்ட தில்லை நடராசரையும், சற்றுமுன் பார்த்துவிட்டு வந்த ஐ’யையும் ஒருசேர எண்ணிக்கொண்டு போய் அங்கிருந்த சாளரத்தருகில் நின்று வெளியில் பார்த்தேன்.
வானத்தில் மார்கழித் திங்கள் நிறை மதியும், திருவாதிரை நட்சத்திரமும் கூடுதல் பொலிவுடன் ஒளிர்ந்துகொண்டிருந்தன.
*