மெய்யாய்

பேரன்பின் மென்பிதற்றலோடு
துள்ளித் திரிந்தவனின் சோகக் கைகளை
அனுமதி கேளாதுப் பற்றிய ஏகனைக்கு
அவன்தான் விருப்ப மூச்சு

தோற்றுப்போன சொற்களை சுமந்துபோகும் நிழளிக்கு
சின்னஞ்சிறு புள்ளிதான் உலகம்

மழையில் நனைந்த நாளொன்றின் பிற்பகுதியில்
மனதின் வலியிறக்கி வைக்க
பொலபொலவெனக் கண்ணீர்

`ஓ’வென உடைந்து கதற
அர்த்தமற்ற சொற்களனைத்தும்
அர்த்தமாகிப் போனது

கடிகார முள்ளின் டிக் டிக்குகள்
துணைபேசி
ஆறுதலுரைக்கும் தோழமை

அடிவயிறு கிழிந்து குருதிபெருகி
துடித்துக்கிடக்குமோர் அழுக்குநாளில்
வெளியேறும் குருதியில்
உயிரையனுப்ப நினைத்த கண்ணீர்க்காரிக்கு
தன் நிறைவேறாதக் காதலொன்றே
இருப்பதும் இல்லாததுமென அழுதபோது
இரக்கமே இல்லாத வானமும் சற்றிறங்கி
வென்று அழுதது

ஓ.. ஓ.. ஓ…
நிற்காமல்
நீர்க்காமல்

வழக்கம்போல்
குருதி சுவையுடை மழையை
கவனியாது ஓடிக்கொண்டிருந்தது
பொய் பூசிய அவனின் மெய்யுலகம்
மெய்யாய் மெய்யாய் மெய்யாய்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=