எல்லா அங்கீகாரத்துக்கும் தகுதியான நூல் – விஜயா பதிப்பகம் வேலாயுதம்

நேற்று முன்தினம் மாலை கோவை – விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஐயா அழைத்திருந்தார்.
”வணக்கம் வடிவரசு. நலமா இருக்கீங்களா? உங்களோட ‘நிலைத்திணை’ய இப்போதான் படித்து முடித்தேன். ரொம்ப பிரமாண்டமான வேலைய செய்திருக்கீங்க. இத்தன வருட வாசிப்புல இப்படி எந்த இளம் எழுத்தாளரும் ஒரு படைப்ப எழுதி நான் பார்த்ததில்ல. சிறுகதை, நாவல் மாதிரி வேகமா படிக்காம ஒவ்வொரு அத்தியாயமா நேரம் எடுத்து ரசித்துப் படித்தேன்.
இந்த பூமியில மரத்தோடு தொடர்பு இல்லாத ஒரு மனிதன் கூட இருக்கவே முடியாது. அப்படிப்பட்ட மரத்தைப் பத்தி இந்த சின்ன வயசுல இவ்ளோ விரிவா அருமையா எழுதி இருக்கீங்க. கண்டிப்பா இந்த சமூகம் இதைக் கொண்டானும். ஒவ்வொரு பெற்றோரும், ஆசிரியர்களும் அவசியம் வாசிக்கணும். எல்லா அங்கீகாரத்துக்கும் தகுதியான நூல் இது. இதை அங்கீகரிக்காம போனா அது தமிழுக்கு செய்யிற துரோகம். என்ன, இங்க இருக்க குழு மனப்பான்மையால; இலக்கிய அரசியலால இதற்கான அங்கீகாரம் தள்ளிப் போகலாம். ஆனா, காலத்த தாண்டியும் கண்டிப்பா நிற்கும்.
இந்த நூல் மட்டும் மலையாளத்துலயும், வங்கத்துலயும் மொழிபெயர்க்கப்பட்டு வந்தா… நூலையும், உங்களையும் தலைமேல தூக்கிவச்சிக் கொண்டாடுவாங்க. தொடர்ந்து இதுபோல நல்ல நல்லப் படைப்புகள தமிழுக்குத் தாங்க. எல்லோரயும் போல தமிழோடப் பழம்பெருமைய பேசிட்டு இல்லாம, தமிழுக்குப் புதுப்புது பெருமைய தொடர்ந்து செய்துட்டு வாங்க. வாழ்த்துகள். நல்லாருங்க.’’
இது மட்டுமல்ல… சுமார் அரை மணிநேரம் இன்னும் எவ்வளவோ பேசினார். மகிழ்ச்சியாக இருந்தது.
எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், எந்தக் குழுவோடவும் சேர்ந்து அரசியல் செய்து அங்கீகாரம் வாங்கிக்கொள்ளாமல், தொடர்ந்து இயங்கும் என் போன்ற எளியவர்களுக்கு, இவ்வாறு நூல்களை வாசித்தவர்கள் அழைத்து மனத்தார சொல்லும் வார்த்தைகள்தானே உண்மையான அங்கீகாரம். ஆம். அப்படித்தான் பார்க்கிறேன்.
*